அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே இரண்டாவது நாளாகவும் மோதல் ஏற்பட்டதை அடுத்து ஈராக் தலைநகர் பக்தாத்தில் காலவரையறையற்ற ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் பற்றாக்குறை, மோசமான பொதுச் சேவைகள் மற்றும் ஊழலுக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஏற்கனவே ஈராக்கின் மூன்று நகரங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைகளில் இதுவரை பதினொரு பேர் பலியாகி பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். சமூக ஊடகத் தளங்கள் மற்றும் இணையதள வசதிகள் சில இடங்களில் முடக்கப்பட்டுள்ளன.
போதி தலைமைத்துவங்கள் இன்றியும் பாரிய அளவான இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஓர் ஆண்டுக்கு முன் ஈராக் பிரதமராக அப்தல் அப்துல் மஹ்தி பதவி ஏற்ற பின் இடம்பெறும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக இது மாறியுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்வதாக அரசு உறுதி அளித்துள்ளது.
வியாழக்கிழமை தொடக்கம் பக்தாதில் ஆட்கள் மற்றும் வாகனங்கள் பயணிப்பது முழுமையாக தடை செய்யப்படுகிறது என்று பிரதமர் அப்துல் மஹ்தி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தெற்கு நகரங்களான நசிரியா, அமாரா மற்றும் ஹில்லா நகரங்களில் ஏற்கனவே இந்தக் கட்டுப்பாடு அமுலில் உள்ளது.
அரசாங்கம் பொறுமையை கையாள வேண்டும் என்று ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது. “சட்டத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு தனி நபருக்கும் பேச்சுச் சுதந்திரம் உள்ளது” என்று ஐ.நா விசேட பிரதிநிதி ஜீனின் ஹனிஸ் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு நகரங்களிலும் பரவி இருக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்கனவே பொலிஸார் முடக்கி வைத்துள்ள மத்திய தஹ்ரிர் சதுக்கத்தை அடைவதற்கு முயற்சித்தனர். இந்த சதுக்கத்திற்கு அருகிலேயே வெளிநாட்டு தூதரகங்கள், அரச கட்டடங்கள் அமைந்திருக்கும் கிரீன் சோன் பகுதியை அடையும் பாலம் அமைந்துள்ளது.
“நாம் மாற்றத்தை கேட்கிறோம், ஒட்டுமொத்த அரசாங்கமும் வீழ்த்தப்பட வேண்டும்” என்று பக்தாதில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார்.
அரச துறையே ஈராக்கில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமைப்பாக இருந்தபோதும் இந்த ஆண்டில் அது மந்தமடைந்துள்ளது. இளைஞர்களிடைவே வேலையற்றோர் எண்ணிக்கை 25 வீதமாக உள்ளது. இது ஒட்டுமொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அடிக்கடி இடம்பெறும் மின்சார துண்டிப்புகள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் ஊழல் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
உலகின் ஊழல் மிக்க நாடுகள் பட்டியலில் ஈராக் 12 ஆவது இடத்தில் உள்ளது.
“எமது முதல் பிரச்சினை ஊழல். அது எம்மை அழித்து வருகிறது” என்று பக்தாதில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வலீத் அஹமத் என்று முன்னாள் படை வீரர் ஒருவர் குறிப்பிட்டார்.