கோவையில் மாவோயிஸ்ட் கும்பல் சுற்றிவளைப்பு : தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டம்!

0
131

Evening-Tamil-News-தமிழகத்தில் தாக்குதல்  நடத்த திட்டமிட்டிருந்ததாக கோவையில் கைதான மாவோயிஸ்ட் கும்பலின் தலைவன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி-அன்னூர் சாலையில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான பேக்கரிக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு பெண் உட்பட 5 பேர் வந்து டீ, திண்பண்டங்கள் சாப்பிட்டனர். அப்போது அங்கு வந்த ஆந்திர மாநில நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.பி தலைமையிலான போலீசார், கோவை கியூ பிரிவு போலீசார், மத்திய உளவுப்பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் 5 பேரையும் சுற்றிவளைத்தனர். ஐந்து பேரையும் போலீசாருடன் வந்த ஒரு நபர் அடையாளம் காட்டினார். இதையடுத்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ஐந்து பேரையும் பிடித்தனர். உடனடியாக போலீஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றி பீளமேட்டில் உள்ள கியூ பிராஞ்ச் போலீஸ் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ஆந்திர மாநில நக்சல் தடுப்பு பிரிவு எஸ்பி, கோவை மாவட்ட எஸ்.பி சுதாகர், துணை கமிஷனர் பிரவேஷ்குமார்,  கேரளா உளவுத்துறை அதிகாரிகள் சதானந்தா, வாகேஷ், தமிழக கியூ பிரிவு டிஐஜி ஈஸ்வரமூர்த்தி, எஸ்.பி. பவானீஸ்வரி, மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கைதான மாவோயிஸ்டுகளிடம் விசாரித்தனர். அதில் பிடிபட்டவர்கள் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரூபேஸ் (40), அவரது மனைவி சைனா(35), அவர்களது கூட்டாளி திருச்சூரை சேர்ந்த அனூப்(40), மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற கண்ணன்(39), கடலூரை சேர்ந்த ஈஸ்வரன் என்ற வீரமணி(42) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கும்பலிடம் போலீசார் விசாரித்தனர்.

அதில், ‘தென்னிந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்க கோவை வந்தோம். மேலும், தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பயிற்சி எடுக்கவும், அங்கு பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தோம்’’ என்று தெரிவித்தனர். ஆந்திர மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்குமுன் அங்குள்ள வனப்பகுதியில் தேடப்பட்டுவரும் மாவோயிஸ்ட் மேசாலி ராஜரெட்டி என்பவரை கைது செய்தனர். மேசாலி ராஜரெட்டியிடம் போலீசார் விசாரித்தபோது, ஆந்திர மாநிலத்தில் போலீசாரை தாக்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதுகுறித்து ஆலோசிப்பதற்காக தென்மாநில மாவோயிஸ்ட் தலைவன் தலைமையில் 4 மாநில மாவோயிஸ்ட் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடக்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளான். இத்தகவலை உறுதி செய்த ஆந்திர நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக போலீஸ் உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தனர். கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். அதன்பின், மாவோயிஸ்ட் கும்பலின் செல்போன் எண்னை வைத்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ஐந்து பேரையும் கண்காணித்தபோது அவர்கள் திருப்பூரில் இருந்து பஸ்மூலம் கோவைக்கு வருவது தெரியவந்தது.

அவர்களை பின்தொடர்ந்து வந்த போலீசார் ஐந்து பேரையும் கருமத்தம்பட்டி பேக்கரியில் வைத்து பிடித்தனர். ரூபேஸ் உள்ளிட்ட ஐந்து பேரும் தர்மபுரியில் இருந்து பஸ்மூலம் திருப்பூருக்கு வந்துள்ளனர். அங்கிருந்து பஸ்மூலம் கோவைக்கு புறப்பட்டு கருமத்தம்பட்டியில் இறங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து ஐந்து பஸ் டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கருமத்தம்பட்டியில் இறங்கி பேக்கரிக்கு சென்று ரூ.150க்கு டீ, திண்பண்டங்கள வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதன்பின், அங்கிருந்து புறப்பட்டு செல்ல ஆயத்தமாகியபோது போலீசாரிடம் சிக்கினர் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ரூபேஸ் வழக்கறிஞர். இவர், துவக்கத்தில் திருச்சூருக்கு உட்பட்ட ஒரு பகுதியில் மாவோயிஸ்ட் இயக்க தலைவராக இருந்தார். அப்போது பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு தலைமை வகிக்கும் கிழக்கு மண்டல தலைவர் பொறுப்பை ரூபேஸ் ஏற்றார். கார்த்திக் என்ற கண்ணன் தமிழ்நாடு மாவோயிஸ்ட் இயக்க பொறுப்பாளராகவும், ஈஸ்வரன் என்ற வீரமணி ஆந்திர மாநில மாவோயிஸ்ட் இயக்க பொறுப்பாளராகவும், அனுப் கர்நாடக மாநில மாவோயிஸ்ட் இயக்க பொறுப்பாளராகவும் செயல்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்ட் இயக்க தென்மாநில தலைவர் ரூபேசுக்கு முழங்காலின் உட்புறப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை பெறவும், மாவோயிஸ்ட் இயக்கத்தின் அடு்த்த கட்ட நடவடிக்கை, போராட்டங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக கோவை கருமத்தம்பட்டியை தேர்வு செய்ததாகவும் தெரிகிறது. பிடிபட்ட மாவோயிஸ்ட் தென்மாநில தலைவன் ரூபேஸ் ஒடிசா மாநிலத்திற்கு சென்று ஆயுதப்பயிற்சி பெற்று வந்துள்ளான். இவரது கட்டுப்பாட்டின் கீழ் 195 மலை கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மக்களை மிரட்டியும், அவர்களை மூளைச்சலவை செய்தும் அரசுக்கு எதிரான போராட்டங்கள், கிளர்ச்சிகளில் ரூபேஸ் மற்றும் அவரது கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தி வந்துள்ளனர். கேரள மாநிலத்தில் ரூபேஸ் மீது மொத்தம் 20 வழக்குகள் உள்ளது. தற்போது, 7 வருடங்களுக்கு பிறகு ரூபேஸ் போலீசாரிடம் சிக்கியுள்ளான். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்கள் 5பேரும்  கோவை கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மாவோயிஸ்ட்களை ஜூன் 3ம்  தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி சுப்ரமணியன் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here