பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஆதரவில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் அனுசரணை வழங்க,செவ்ரோன் நகர அரங்கில் கடந்த 26-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற கலை அரங்க நிகழ்வு தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மிகச்சிறப்பாகஇடம்பெற்றது.
தாயக கானங்கள், கருத்துப்பொதிவுள்ள திரையிசைப் பாடல்கள், விடுதலை எழுச்சிமிகு நடனங்கள், மண்வாசனை கமழும் நாடகங்கள்,குறுந்திரைப்படம் என விடுதலை வேட்கை கொண்ட தமிழ் இனத்தின் கலைப் பெருவிழாவாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
தமிழ்மொழி, தமிழ் இனம், தாய்நிலம் என்னும் அடிப்படை கருத்தமைவுக்கு ஏற்ப, எம் அடையாளங்களைக் காத்து, கலையெனும் ஆயுதம்கொண்டு விடுதலை முரசு கொட்டுவோம் என்ற சிந்தனையுடன் உருவான இந்நிகழ்வு – அவையோரிடம் சுதந்திர உணர்வினைக் கிளர்ந்தெழச்செய்தது.
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர் மற்றும் தமிழ் பெண்கள் அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் மங்கல விளக்கை ஏற்றிவிழாவினைத் தொடக்கி வைத்தனர், ஆரம்ப நிகழ்வாக ஸ்டார் இசைக்குழுவின் கலைஞர்கள் தமிழீழ விடுதலைப் பாடல்களையும் திரையிசைப்பாடல்களையும் வழங்கிச் சிறப்பித்தனர். ‘தோல்வி நிலையென நினைத்தால் ‘ பாடல் அரங்கம் நிறைந்த கரவொலியுடன் செல்வக்குமார்பாடியிருந்தார்.
தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் கௌதமனின் நெறியாள்கையில் உருவான ‘வேட்டி’ குறும்படம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்நிய ஆதிக்க சக்திளை விரட்டியடித்து விடுலையைத் தேடிக்கொண்ட மக்கள் எப்படி மீண்டும் உள்நாட்டுஆதிக்க சக்திகளிடம் அடிமைப்பட்டுக் கொண்டார்கள் என்ற அவலத்தை இக்குறும்படம் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. உலகமெங்கணும்சிதறிக்கிடக்கும் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் ஏதோவொரு வகையில் சுதந்திரம் இழந்தவர்களாக அடிமைப்பட்டே கிடக்கிறார்கள். இழந்த தேசத்தை மீட்டெடுத்து அவர்களுக்கென ஒரு தேசம் விடுதலையடைந்தால் மட்டுமே அவர்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்என்ற உண்மையை இக்குறும்படம் முகத்தில் அறைந்தாற் போன்று கூறுகின்றது.
தமிழரின் பாரம்பரிய நடனத்திற்கும் சிங்களக் கண்டிய நடனத்திற்கும் இடையேயான கலைப்போர் பார்வையாளர்களின் கவனத்தையும்பாராட்டுதல்களையும் பெற்றது. இந்நடன நிகழ்வில் இளம் கலைஞர்களான டக்சனா, நிந்து ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் செவ்ரோன், எவ்ரி, ஓல்னே சு பூவுவா, திரான்சி-செர்ஜி, பொண்டி, செல் தமிழ்ச்சோலை மாணவர்கள் மற்றும் சோதியா கலைக்கல்லூரி மாணவர்கள், ஆதிபராசக்தி நாட்டியப்பள்ளி மாணவர்கள், நொய்சி லு கிரண்ட் கலைஞர்கள் என நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்றுச் சிறப்புச் சேர்த்தனர். பரதக்கலை ஊடாக விடுதலை வேட்கையையும், போரின் வலியையும், நீதிக்கான தார்மீக ஆவேசத்தையும்,வெற்றியின் அவசியத்தையும் வெளிக்காட்டி பார்வையாளர்களை உத்வேகமூட்டினர்.
கீழைத்தேய நடனத்தில் மட்டுமல்ல தமிழர்கள் மேற்கத்தேய நடனத்திலும் தேர்ந்தவர்கள் என்பதையும் அதனையும் விடுதலைச் சிந்தனைக்குபயன்படுத்த முடியும் என்பதை Dark Sting நடனக்குழுவினர் புதிய வெளிப்பாட்டு முறையினூடாகப் படைத்துக்காட்டினர்.
ஆசிரியர் திருமதி ரேணுகா அவர்களின் நெறியாள்கையில் ‘விடியலைத் தேடி’ என்ற நாடகம் நாட்டு நடப்பை இயல்பாகச் சித்தரித்துப்பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டியது. எவ்ரி தமிழ்ச் சோலை மாணவர்களின் ‘பண்டாரவன்னியன்’ நாட்டுக்கூத்து, செல்வகுமார்அவர்களின் நெறிப்படுத்தலில் பார்வையாளர்களைக் கலகலப்பூட்டிய நகைச்சுவை நாடகம் என்பனவும் சிறப்பாக அமைந்தன.
தாயகவிடுதலை நோக்கிய சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட தாய் மண்ணே வணக்கம் நிகழ்வில், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை என்றஅரசியல் கட்டமைப்பு 2009 ஆம் ஆண்டில் உருவான காலத்தில் இருந்து இன்று வரையான தாயக விடுதலையை நோக்கிச் செய்த வேலைதிட்டங்கள் மற்றும் அரசியல் நகர்வுகளை வெளிப்படுத்தியும், நாம் எவ்வாறு தொடர்ந்து எமது செயற்பாடுகளை முன்னகர்த்தப் போகின்றோம் என்ற சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட சிறப்புமலரை இந்த நிகழ்வில் வெளியிட்டதோடு, மலர் வெளியீட்டின் போது உரை நிகழ்த்தியபிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் முன்னணிச் செயல்ப்பாட்டாளரும், அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் வெளிவிவகாரத்துறையின்ஒருங்கிணப்பாளருமான திரு. திருச்சோதி அவர்கள் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற இந்த கலை விழா உருவானதன் பின்னணி மற்றும் எமது தாயக விடுதலையின் அவசியத்தை விளக்கியதோடு, எமது விடுதலையை நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துதான் உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
‘மாற்றத்தின் குரல்’ அமைப்பின் சார்பாக இந்த நிகழ்வுக்கு கனடாவில் இருந்து வருகை தந்திருந்த பிரணவசிறி அவர்கள் சிறிலங்காவில்நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளின் தெரிவிலும் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தவும் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இக்கலைவிழா சிறப்புற நடைபெற பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைக்கு ஆதரவளித்த தமிழ்ச் சோலைகள் அதன் நிர்வாகிகள், மற்றும்ஆசிரியர்களுக்கும், நடன – நாடக கலைஞர்களுக்கும், நட்போடு ஒத்துழைப்பை நல்கிய பிரான்சு தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளுக்கும்,வர்த்தகப் பெருமக்களுக்கும், நாம் இத்தால் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து எமது தாயக மக்களின் நலன்களைப் பாதுகாத்துத் தாயக விடுதலை நோக்கிய செயற்பாடுகளில் வலுவுடன் முன்னேறுவோம்!
நன்றி
– பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை