நேபாளத்தை தாக்கிய பயங்கர பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 4,356 ஆக அதிகரித்துள்ளதோடு மேலும் 10,000 பேர் காயமடைந்திருப்பதாக நேபாள உள்துறை அமைச்சை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
“பூகம்பம் தாக்கிய பின்தங்கிய கிராமப் பகுதிகளில் இருந்து இன்னும் தகவல் கிடைக்காத நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 வரை உயர வாய்ப்பு உள்ளது” என்று நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா அச்சம் தெரிவித்துள்ளார்.
பூகம்பத்திற்கு பின்னர் தொடர்ந்து இடம்பெற்று வரும் பின்னதிர்வுகளால் மேலும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதோடு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் கத்மண்டு நகரில் வீடுகளில் உறங்குவதற்கு அச்சமடைந்திருக்கும் ஆயிரக் கணக்கான மக்கள். வீதிகளில் படுத்து உறங்கினர். இதுவரை 55 முறை சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர். உணவு, மின்சாரம் போன்றவற்றுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. தொற்று நோய் பரவுக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
“ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின் படியும், இந்த பூகம்பம்குறித்த சமீபத்திய விவரங்களின் படியும் 80 இலட்சம் பேரும் 39 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் 20 இலட்சம் பேர் வசிக்கிறார்கள்” என ஐக்கிய நாடுகள் சபையின் உறைவிட ஒருங்கிணைப்பாளரின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
இதுவரை நகரப் பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மீட்பு குழுவினர் தற்போது, கிராமப் பகுதிகளுக்கு சென்றுள்ளனர். பல கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாக புதைந்து போயிருப்பதை பார்த்து மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு வசித்தவர்கள் கூண்டோடு சமாதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் தெரிந்தால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே நேபாளத்தில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் தாமதமாகியுள்ளன. நில நடுக்கத்தால் வீதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள். மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.