பிலிப்பைன்ஸை நெருங்கும் புயல்: எதிர்கொள்ளத் தயாராகும் மக்கள்!

0
394

pilipainsபிலிப்பைன்ஸை நெருங்கிவரும் ‘ஹகுபிட்’ புயலை எதிர்கொள்ள அந்நாட்டு மக்கள் தயாராகி வருகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமையன்று இந்தப் புயல் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பசிபிக் கடலில் தற்போது நிலைகொண்டிருக்கும் ‘ஹகுபிட்’, கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று பிலிப்பைன்ஸை நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டுதான் இந்தப் பிரதேசம் ஹையான் புயலால் சூறையாடப்பட்டது. இது நான்காம் நிலை புயலாக கடந்த சனிக்கிழமை வகைப்படுத்தப்பட்டது.

தற்போதும் தற்காலிக வீடுகளில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக முகாம்களுக்குச் செல்லும்படி கூறப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸில் யோலண்டா என்று அழைக்கப்பட்ட ஹையான் புயல்தான் நிலத்தைத் தாக்கிய புயல்களிலேயே மிகச் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய பிலிப்பைன்ஸைச் சூறையாடிய இந்தப் புயலில் 7,000 பேருக்கு மேல் மரணமடைந்தனர். அல்லது காணாமல் போயினர். ஹையான் புயல் அளவுக்கு ‘ஹகுபிட்’ சக்திவாய்ந்த புயலாக இருக்காது என்றாலும் இதனால், கடல் அலைகள் ஒரு மாடி கட்டிடம் அளவுக்கு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக ஹையான் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நகரான டாக்லோபான் நகர துணை மேயர் தெரிவித்துள்ளார்.

ஆனால், போதுமான தற்காலிக முகாம்கள் இல்லை என்பதுதான் பிரச்சினை என செய்தி நிறுவனம் ஒன்றிடம் அவர் கூறியுள்ளார். ஹகுபிட் வடக்காகத் திரும்பி பிலிப்பைன்ஸை விட்டுவிட்டு ஜப்பானை நோக்கிச் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் மிக மோசமான நிலைமையையும் சமாளிக்க தயார் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாக்லோபான் நகர சூப்பர் மார்க்கெட்கள் தற்போது பொருட்களை வாங்கி இருப்பு வைத்து வருகின்றன. இப்போது மழை பெய்யவில்லை என்றாலும் தொலைக்காட்சியில், வானொலியில் புயலைப் பற்றி கேட்டதிலிருந்து மக்கள் அவசர அவசரமாக பொருட்களை வாங்கி வருகின்றனர் என அங்கிருக்கும் அங்காடி ஊழியர் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here