ஊடகவியலாளர் தயாபரன் மயக்கமடைந்த நிலையில் மீட்பு; தாக்கப்பட்டாரா?

0
211

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெறவிருந்த விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக உடுப்பிட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து உந்துருளியில் வருகைதந்த தயாபரன் இன்று பகல் 10.30 மணியவில் புத்தூர் சந்தியில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

அவரது உந்துருளி விபத்தில் சிக்கியதாகக் கூறப்பட்டாலும் விபத்தை ஏற்படுத்தியவர்கள் அந்த இடத்தில் நிற்காமல் தப்பிச் சென்றிருந்தனர். தலை உட்பட மேலும் சில இடங்களில் காயமடைந்திருந்த தயாபரன் சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக சுய நினைவை இழந்திருந்தார். அவருக்கு என்ன நடைபெற்றது என்பதை அவரால் கூறமுடியவில்லை.

வீதியால் சென்றவர்கள் அவரை மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்த்திருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி நேரடியாகச் சென்று அவரைப் பார்வையிட்டு சிகிச்சை ஏற்பாடுகளைக் கவனித்தார்.

சம்பவத்தைக் கேள்வியுற்று இரவு 9.15 மணியளவில் நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்ற வடக்கு மாகாண ஆளுநர் தயாபரனைப் பார்வையிட்டார். இச்சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெரியாமல் இருப்பதால் அது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு தான் உத்தரவிடுவார் எனக் கூறினார்.

மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் அல்லது அதற்கு அண்மையில் சி.சி.ரி கமராக்கள் இருப்பின் அதில் இருந்து காட்சிகளைப் பெற்று விசாரணை நடத்துமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்துவார் எனவும் அவர் கூறினார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் இரத்தினம் தயாபரன் வட பகுதியில் இளம் ஊடகவியலாளர்கள் பலரை உருவாக்கியவர் என்பதுடன் யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபகர் என்பதும் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளை உலகுக்கு அம்பலப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here