எமது ஆட்சிக்காலத்தின் போதே மக்களின் உள்ளங்களில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று மைத்திரி பால சிறிசேன உறுதியளித்தார்.
இன்று காலை 10 மணியளவில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகள் சில விடுவிக்கப்பட்டு 60 பேருக்கு காணி உரிமம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கடந்த மூன்று மாத காலப்பகுதியிலே 3 தடவை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளேன்.முதலாவது வருகை தேர்தல் காலத்தின் போது உங்களிடம் வாக்கு கேட்பதற்காக வந்தேன் , இரண்டாவது அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் ஒன்றிற்கு வந்தேன் .இன்று மூன்றாவது தடவையே மக்களுக்கான காணிகளை கையளிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.
யுத்த காலத்தின் போதும் அதன்பிறகும் காணி தொடர்பான அழுத்தங்கள் உண்டு அது தொடர்பில் நான் நன்கு அறிவேன்.காணி தொடர்பான பிரச்சினை இன்றைக்குரிய பிரச்சினை மாத்திரம் அல்ல.காணிப்பிரச்சினை உலக அரசியலில் மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளதுடன் உலக அளவில் கிளர்ச்சிகளையும் தோற்றுவித்துள்ளன.
காணிப்பிரச்சினைகளை மாத்திரம் அல்ல மக்களுக்கான அழுத்தங்களை கொடுக்கும் பிரச்சினையை தீர்ப்பதே எமது புதிய அரசின் கடப்பாடாகும்.
எனவே மக்களுக்கு நான் தெட்டத்தெளிவாக கூறுவது என்னவென்றால்.மக்களுக்கு ஏற்படும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு எமது ஆட்சிக்காலத்திலேயே தீர்வு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.