சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசேயின் லூங் சம்பந்தன் சந்திப்பு !

0
111


போலியான ஒரு தீர்வை நாம் ஒரு போதும் ஏற்கப்போவதில்லை. எமது மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் தங்களது அதிகாரங்களைப் பாவிக்கக்கூடிய ஓர் உண்மையான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டினையே நாம் வேண்டி நிற்கின்றோம் என எதிர்க் சம்பந்தன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசேயின் லூங் ஐச் சந்தித்த அவர், மேற்கண்டவாறு கூறினார்.
எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசேயின் லுங்கை கொழும்பில் சந்தித்தார். புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பிலான தற்போதைய நிலைமை குறித்து சிங்கப்பூர் பிரதமரிடம் இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தினார்.
இந்த நடைமுறைகளை வெற்றிகரமான ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், புதிய அரசியலமைப்புத் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படும் பிழையான, தேவையற்ற அச்சங்களை நீக்குமுகமாக ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்புத் தொடர்பில் தெளிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். தற்போது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல என்பதையும் இரா. சம்பந்தன் சிங்கப்பூர் பிரதமருக்கு எடுத்துக் கூறினார்.
வடக்குக், கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்க முடியாத, பிரிவுபடாத நாட்டிற்குள் தீர்வொன்றை விரும்புகிறார்கள். ஆகவே, புதிய அரசியல் யாப்பானது தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற ஒன்றாக அமைய வேண்டுமெனவும் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.
போலியான ஒரு தீர்வை நாம் எப்போதும் ஏற்கப் போவதில்லை எனவும் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் தங்களது அதிகாரங்களைப் பாவிக்கக்கூடிய ஓர் உண்மையான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டினையே நாம் வேண்டி நிற்கிறோம் என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருக்க முடியாதெனவும், இந்த வருடத்திற்குள் புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்நாடானது கடந்த காலங்களில் துர்அதிஷ்டவசமாக பிழையான பாதையில் பயணித்துள்ளது. அந்நிலைமைகளைச் சரிசெய்வதற்கு இதுவொரு நல்ல தருணம் எனவும் இரா. சம்பந்தன் எடுத்துக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here