கோட்டபாய ராஜபக்ஷ, முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட நால்வருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!

0
464

court-_81எவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்துடன் தொடர்புள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, முன்னாள் கடற்படைத் தளபதி சோமதிலக்க திசாநாயக்க உட்பட நால்வருக்கு வெளிநாடு செல்வதற்கு காலி நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்துள்ளது.

எவன்கார்ட் ஆயுத களஞ்சியம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று காலி நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. இதனை ஆராய்ந்த காலி நீதவான் நீதிமன்றம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அடங்கலான நால்வருக்கும் இந்தத் தடையுத்தரவை விதித்தது.

இவர்களின் வெளிநாடடு பயணங்கள் தடை செய்யப்பட்டிருப்பது குறித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

12 கொள்கலன்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்ட எவன்கார்ட் தனியார் பாதுகாப்பு நிலையத்துக்கு சொந்தமான நடமாடும் ஆயுத களஞ்சியம் கடந்த ஜனவரி மாதம் காலி துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டது. காலி பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் களஞ்சியம் பிடிபட்டது.

இந்த மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியிருந்தார். எவன்கார்ட் ஆலோசகராக முன்னாள் கடற்படை தளபதி செயற்பட்டுள்ளதோடு மேஜர் ஜெனரல் எகொடவெல ரக்ன லங்கா பணிப்பாளராகவும் கித்சிறி மஞ்சுளகுமார எவன்கார்ட் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை சி. ஐ. டி. மேற்கொண்டது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடமும் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு செய்தது. தனியார் துறைக்கு ஆயுதக் களஞ்சியம் வைத்திருக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் எவன்கார்ட் ரத்ன லங்கா பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட பலரிடம் சி. ஐ. டி வாக்கு மூலம் பெற்றது.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான விசாரணை நேற்று காலி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையொன்றை சமர்ப்பித்த சி. ஐ. டி. யினர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அடங்கலான நால்வரினதும் கடவுச் சீட்டுகளை தடை செய்யுமாறு கோரினர். இது குறித்து ஆராய்ந்த நீதவான் நிலுபுலி லங்காபுர இதற்கு அனுமதி வழங்கினார்.

முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறாக இவர்கள் செயற்பட வாய்ப்பிருப்பதால் இவர்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்க தடையுத்தரவு பிறப்பிக்குமாறு சி. ஐ. டி. கோரியிருந்தது. எவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here