பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு!

0
285

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நந்தியாரில் இன்று (23.12.2017) சனிக்கிழமை இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு சாந்திக்குமார் ஏற்றிவைத்தார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் .கேணல் அன்புக்குமரன் மற்றும் 2007 ஆம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை தங்கமணி ஆகியோரின் சகோதரர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.
.
டிசம்பர் மாதத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 13.01.1994 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் இடம் பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி சுதாஜியின் தாயார் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சாந்திக்குமார் அவர்களின் பாலா அண்ணா பற்றிய உரையும், மாணவிகளின் நடனமும், கவிதையும் இடம்பெற்றது. சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.

அவர் தனது உரையில் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் இழப்பு எமது இனத்திற்கு பேரிழப்பு என்றும், புலம்பெயர் புத்திஜீவகள் இனிமேலாவது எமது மக்களின் உரிமைப்போருக்கு குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் இன்றைய எமது போராட்டப்பாதையில் தம்மையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here