அதிரடிப் படையைக் கண்டு ஆற்றில் குதித்த இளைஞன் பலி: படையினர் முற்றுகை!

0
126

இலங்கை மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்திலுள்ள காயான்மடு பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரின் நடமாட்டத்தை கண்டு ஆற்றில் குதித்த 17 வயது இளைஞரொருவர் நீரில் மூழ்கி பலியானார்.
இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமுற்ற பொது மக்களால் சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேற முடியாதவாறு வாகனத்ததுடன் தடுத்ததால் அந்த பகுதியில் ஓரிரு மணித்தியாலங்கள் பதட்டம் நிலவியது.

அந்தப் பகுதியிலுள்ள முந்தன்வெளி ஆற்றில் மணல் எடுப்பதற்கு அரசாங்கத்தினால் சிலருக்கு சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறி ஒரு சிலர் செயல்படுவதாக கூறப்படுகிறது.
இன்று திங்கட்கிழமை நண்பகல் அப்பகுதிக்கு சென்றிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் ஆற்றில் உழவு இயந்திரங்கள் மூலம் மணல் ஏற்றுவதை அவதானித்து ஆட்களை கலைப்பதற்கு துப்பாக்கியால் வானத்தில் வேட்டுக்களை சுட்டவேளையில், இந்த இளைஞர் ஆற்றில் குதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆற்றில் குதித்த இளைஞனை காப்பாற்ற குதித்த அவரது சகோதரர் ஏனையோரால் காப்பாற்றப்பட்டு அரச மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவத்தையடுத்து உள்ளுர் மக்களுக்கும் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக படையினரால் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்தனர். மேலதிக சிறப்பு அதிரடிப்படையினரும் அங்கு வந்தடைந்தபோது, அவர்களை நோக்கி கல் வீச்சு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து பொது மக்களை கலைப்பதற்காக போலீஸாராலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் வானத்தில் துப்பாக்கியால் சுட்டு மக்கள் கலைந்ததும் தடுத்து வைக்கப்பட்டிருந்த படை வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் , சா. வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை துணை அவைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் அந்த இடத்திற்கு சென்று, பொது மக்களிடம் சம்பவம் தொடர்பாக கேடட்டறிந்து கொண்டதோடு நிலைமையயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here