நீதிபதி இளஞ்செழியன் மீதான சூடு; நாடு முழுவதும் சட்டத்தரணிகள் கண்டனம்!

0
409

வவுனியாவில் கறுப்புத் துணியுடன் சட்டத்தரணிகள்

யாழ் உயர் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்து வவுனியா நீதிமன்றத்தின் அனைத்து சட்டத்தரணிகளும் வெளிநடப்பு செய்து வாய்களில் கறுப்புத்துணிகளை கட்டி பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நடந்த தாக்குதல் சம்பந்தமாக பக்கசார்பற்ற முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும், நீதித்துறையில் யாரும் தலையிடுவதை சட்டத்தரணிகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அனைத்து நீதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி சட்டத்தரணிகள் பணி பகிஷ்கரிப்பில்…

கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலைக்கண்டித்து சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலைக்கண்டித்தும் உண்மையான தாக்குதல்தாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவலியுறுத்தியும் இன்று (24) வடமாகாண சடடத்தரணிகள் கூட்டாக சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமெனக்கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

 

கிளிநொச்சியில் பஸ் போக்குவரத்து ஸ்தம்பிதம்!

நீதிபதி மீதான தாக்குதலைக்கண்டித்து வடமாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் இன்றைய (24) தினம் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இன்று திங்கட்கிழமை பாடசாலைகளில் இரண்டாம் தவணைப்பரிட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் வெளிமாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சேவையாற்றுகின்ற ஆசிரியர்களின் வருகை மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.
இதேவேளை அரச திணைங்களிலும் உத்தியோகத்தர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டுள்ளது.

போக்குவரத்துகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் கிளிநொச்சி நகரம் மற்றும் ஏனைய பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் இன்மையால் பொதுமக்களின் நடமாட்டம் மிகக்குறைவாகவே காணப்பட்டுள்ளது.

திருகோணமலை சட்டத்தரணிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
மேல் நீதி மன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுடன் சம்மந்தப்பட்ட தாக்கதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் மரணமடைந்த நிலையில் பொலிசாரின் விசாரனைகள் முற்றுப் பெற முன்னரே இது அவரை இலக்கு வைத்து நடாத்தப்பட தாக்குதல் இல்லை என பொலிசார் இதை திசை திருப்ப கூடாது.
நீதிமன்றத்தின் மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனை அச்சுறுத்தும் நோக்கில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் பொலிசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என திருகோணமலை சட்டத்தரணி திருமதி புனிதவதி துஷ்யந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தால் திருகோணமலை நீதிமன்ற வளாகத்திற்கு முன் அவர்கள் நடாத்திய கண்டன போராட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையில் ஒரு பெண் சட்டத்தரணி என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்தவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கினை துல்லியமாக சர்வதேசமே அவதானித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் நீதியை நிலைநாட்ட பாடுபடும் நீதிபதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயலாகவே இதை நாம் கருதுகின்றோம்.

மேலும் தனது உடலில் துப்பாக்கி குண்டுகளை ஏற்று நீதிபதியை காப்பாற்றி இன்று வீரமரணம் அடைந்த மெய்பாதுகாப்பாளர் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் திருகோணமலை சட்டத்தரணிகள் சார்பான ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் ஏன்றார்.

வவுனியாவில் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்தும், மரணித்த அவரது மெய்பாதுகாவலருக்கு துக்கம் தெரிவித்தும் வடமாகாண தனியார் பேரூந்துகள் இன்று (24) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் தனியார் பேரூந்து சேவை முழுமையாக முடங்கியுள்ளது.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களை இலக்கு வைத்து சனிக்கிழமை மாலை யாழ் நல்லூர் அடியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது நீதித்துறைக்கு விடப்பட்ட அச்சறுத்தல் என்பதுடன், வடக்கு தமிழ் மக்களுக்கு நீதித்துறை தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்திய நீதிபதி மீதான இந்த தாக்குதல் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு தாக்கதலாகவும் கருதுவதாக தெரிவித்தே இப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இதில் பொலிசார் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் உள்ளூர் பகுதிகளுக்கான போக்குவரத்து இன்றி மக்கள் சிரமப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன், இ.போ.சபை பேரூந்துகள் வழமைபோல் சேவையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

யாழ் மேல் நீதிமன்ற நிதிபதி மா. ளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் இன்று (24) தங்களது கண்டனத்தினை தெரிவித்து கவனயீர்பில் ஈடுபட்டனர்.
கடமையினை பகிஷ்கரித்து மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் ஆயுதமுனையில் நீதியை தடுக்க நினைக்காதே, நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் போன்ற பல்வேறு சுலோகங்களையும் தாங்கியவாறு அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.
நீதிபதியின் மீதான தாக்குதல் நீதிக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்துள்ளதுடன் குற்றவாளிகள் உடன் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இத்தாக்குதலில் உயிர் நீத்த பொலிசாரின் கடமையுணர்வை பாராட்டிய அவர்கள், அவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவிப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் காயமுற்றவர் நலன்பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டனர்.

கல்முனை நீதிமன்ற சட்டத்தரணிகள் பணி பகிஷ்கரிப்பு
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கல்முனை நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் அனைவரும் இன்று (24) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டன.
இதனால் கல்முனை நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் என்பன செயலிழந்து காணப்பட்டன.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஆரிப் சம்சுதீன் தலைமையில் நேற்று காலை நீதிமன்ற வளாகத்தில் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் இத்தீர்மானத்தை மேற்கொண்டதுடன் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு கண்டனத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் இச்சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திரவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதேவேளை சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களை போக்கி, சட்டம், ஒழுங்கை ஸ்திரப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு கண்டணம் தெரிவித்து மட்டக்களப்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகள் இன்று (24) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்தோடு நீதிமன்றின் எதிரே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றனர்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கே. நாராயணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள் கலந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷமெழுப்பினர்.
தோட்டாவில் புதையாது தேடிய நீதி, சுட்டதால் சட்டம் சாகாது, தலையிடாதே நீதித்துறையில் தலையிடாதே, நீதிக்கே சவாலா, நேற்று நீதிபதி அம்பேபிட்டிய, இன்று இளஞ்செழியன் நாளை யாரோ, உயிர் நீத்து நீதிகாத்த காவலனுக்கு அஞ்சலி போன்ற வாசகங்கள அடங்கிய பதாதைகளை சட்டத்தரணிகள் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான டி.சி.சின்னையா, வி.வினோபா, இந்திரன் உள்ளிட்ட மட்டக்களப்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

கிளிநொச்சியில் நாளையும் எதிர்பு நடவடிக்கை
இளஞ்செழியன் மீதான் தாக்குதலை கண்டித்து நாளை (25) கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்பபு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர்  பின் வீதியில்  யாழ்  மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தி்ன போது உயிரிழந்த நீதிபதியின் மெய்காப்பாளருக்கு அனுதாபம் தெரிவிக்கும்  வகையிலும் சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கிளிநொச்சி சேவை சந்தையின் அளைனத்து வியாபார நிலையங்களும் நாளைளய தினம் பூட்டப்பட்டு இவ்வெதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தக சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதேவேளை இன்று (24) கிளிநொச்சியிலும் சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஸ்கரித்துள்ளனா். அத்தோடு  தனியார்போக்குபரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது.
கிழக்கில் தமிழாசிரியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களில்,  நாளை (25) காலை இடம்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குமாறு தமது அமைப்பின் அங்கத்தவர்களை தான் கேட்டுக் கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (25) காலை 9.30 மணி தொடக்கம் நண்பகல் வரை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களின் 8 முக்கிய நகரங்களில் இடம்பெறவுள்ளது.
இதில் தமது கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் அங்கத்தவர்கள் பங்கேற்பதோடு நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலையும் துப்பாக்கி வன்முறைக்கெதிரான தமது கண்டனத்தையும் பதிவு செய்யுமாறு தான் தமிழாசிரியர் சங்கத்தின் சார்பாகக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஜெயராஜா மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here