நியூயோர்க் சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா. தலைமையகத்தில் அதன் செயலாளர் பான் கீ முனை சந்தித்து இலங்கை மனித உரிமைகள் விவகாரம் குறித்து பேசினார். மூடிய அறைக்குள் இந்தப்பேச்சு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்புக் குறித்து ஐ.நா. தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளவை வருமாறு : – மங்கள சமரவீர மற்றும் பான் கீ மூன் ஆகியோர் இலங்கையின் மனித உரிமை விவகாரம், பொறுப்புக் கூறல் மற் றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து விவா தித்தனர்.
இதன் போது புதிய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தை வரவேற்ற பான் கீ மூன், புதிய அரசுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார். இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக ஆராய்ந்தனர்.
இதன்போது, ஐ.நா. சபை முன்னெடுக்கும் “சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்” திட்டத்தை இலங்கையிலும் தாம் முன்னெடுப்பர் என பான் கீ மூன் குறிப்பிட்டார்.
இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஐ.நாவின் திட்டங்கள் தொடரும் என்றும், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஐ.நாவின் உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும், ஐ.நா. பொதுச் செயலாளர் உறுதியளித்துள்ளார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பை ஒளிப்படம் எடுக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஐ.நா. வின் அதிகாரபூர்வ ஒளிப்படப்பிடிப்பாளர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.