தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மூவர் கையில்!

0
450

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கான நடவடிக்கையாகும்.எப்பாடு பட்டும் விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கிக் காட்டுகிறோம் என்பது தமிழரசுக் கட்சியில் இடையில் இணைந்து தங்களை முதன்மைப்படுத்தியவர்களின் முடிவு.இந்த முடிவு கட்சியின் எதிர்காலம் பற்றியோ தமிழ் மக்களின் மனநிலை பற்றியோ சிந்திக் காத செயலாகும்.

எனினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் தனது கட்சியைக் காப்பாற்றும் கடமைப்பாட்டை உடையவர்.

மாவை சேனாதிராசா தலைவராக இருந்த போது தமிழரசுக் கட்சி வீழ்ச்சி கண்டது என்றொரு அவப்பெயரை அவர் தனதாக்கிக் கொள்ளமாட்டார்.

அதேநேரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் போராட்டங்களில் ஈடுபட்ட ஆரம்ப கால உறுப்பினர் மாவை சேனாதிராசா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே அவர் நிலைமைகளை உணர்ந்து தமிழரசுக் கட்சியை உடைக்க, அதன் எதிர்காலத்தை நிர்மூலமாக்க, கட்சிக்குள் இருப்பவர்கள் செய்கின்ற வீம்புத்தனங்களைப் புரிந்து கொண்டு கட்சியைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுப்பார் என நம்பலாம்.

இதைச் செய்வதாக இருந்தால் கொதிநிலையில் இருக்கக்கூடிய தமிழ் மக்களை ஆற்றுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.

தமிழ் மக்களை ஆற்றுப்படுத்துவதாக இருந்தால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி செய்த பாவங்களுக்கு; கெடுதிகளுக்கு கழுவாய் தேட வேண்டும்.

இல்லையேல் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நடந்து கொண்ட ஒரு விடயமே தமிழரசுக் கட்சியை தவிடுபொடியாக்கி விடும்.

ஆக, இன்றைய சூழ்நிலையில் மாவை சேனாதிராசா அவர்கள் தற்துணிவோடு தீர்மானங்களை எடுப்பாராக இருந்தால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணங்கி நிலைமையை சுமுகமாக்க வேண்டும்.

தவிர, இதற்கும் அப்பால் இன்னும் இருவர் தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற முடியும்.

அவர்கள் சுகாதார அமைச்சர் டாக்டர் பா.சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன் ஆகியவராவர்.

ஆம், எங்கள் அமைச்சு மீது நீங்கள் நடத்தும் விசாரணைகளுக்கு நாங்கள் ஒத்துழைப்போம். எந்த இடையூறையும் செய்யமாட்டோம் என்ற கடிதத்தை  இருவரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து ஒப்படைப்பது.

இவ்வாறு இக்கடிதத்தை கொடுப்பதன் மூலம் இருவரும் தாங்கள் நேர்மையானவர்கள், விசாரணைக்கு அஞ்சவில்லை என்பதை நிரூபிப்பதாகவும் ஆக்கிக் கொள்ளலாம்.

எனினும் இவ்விருவரும் கடிதத்தை கொடுப்பதை சிலர் விரும்பமாட்டார்கள். ஏதாவது விளக்கம் கூறி கடிதம் கொடுப்பதை அவர்கள் தடுப்பார்கள்.

ஆனாலும் இவர்கள் இருவரும் துணிந்து கடிதத்தைக் கொடுத்தால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது தமிழரசுக் கட்சி கொண்டு  வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பாவம் கழுவப்படும். நடக்குமா? இருந்து பார்க்கலாம்.

(valampuri)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here