உயிரை காப்பாற்ற விரைந்த நோயாளர் காவுவண்டி விபத்து : அதன் சாரதி பலி!

0
181

நோயாளர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவுவண்டி (அம்பியூலன்ஸ்) வண்டி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர் காவு வண்டியே விபத்துக்குள்ளாகி உள்ளது.
இன்று அதிகாலை நீர்கொழும்பு, பாலதி சந்திக்கு அருகில் நோயாளர் காவுவண்டி , மற்றொரு வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தில் கிளிநொச்சியை சேர்ந்த 44 வயதுடைய யோகரத்னம் ராஜேந்திரன் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் நோயாளர் காவுவண்டி கவிழ்ந்துள்ள நிலையில், அதில் பயணித்த வைத்தியர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த மூன்று பேரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் வாகன சாரதி குடிபோதையில் இருந்த நிலையில், அவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து நோயாளர்களை கொழும்புக்கு எடுத்துச்சென்றவேளை ஏற்பட்ட விபத்தில் சாவடைந்த கிளிநொச்சியை சேர்ந்த யோ.தயேந்திரன் குடும்பத்திற்கு வடக்கு சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று அதிகாலை நீர்கொழும்பில் நடைபெற்ற விபத்தில் அம்புலன்ஸ் வண்டியை ஓட்டிச்சென்ற சாரதி மரணமடைந்ததாக கேள்விப்பட்டு அதிச்சியடைந்தேன். மற்றவர்களின் உயிரை காப்பாற்றும் உயரிய கடமையைச்செய்கின்ற அம்புலன்ஸ் சாரதிகள் போற்றப்படவேண்டியவர்கள். அந்த வகையில் அமரர் யோ.தயேந்திரன் அவர்கள் விபத்தில் மரணமடைந்தமை துர்ப்பாக்கியமானது.

அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு விபத்தின்போது பாதிக்கப்பட்ட ஏனைய உத்தியோகத்தர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here