பிரான்சில் இடம்பெற்ற குசான்வில் தமிழ்ச் சங்க 18 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு!

0
950

பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான Goussainville பகுதியில் குசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 18 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 07.05.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.00 மணியளவில் இடம்பெற்றது.
மங்கலவிளக்கேற்றப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றது. குசான்வில் மாநகரசபை உறுப்பினர்கள், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் உபகட்டமைப்பு உறுப்பினர்கள் உட்பட அனைவரும் வரவேற்கப்பட்டனர். 

பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து குசான்வில் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் பிரதம விருந்தினரால் மதிப்பளிக்கப்பட்டனர்.  நடன ஆசிரியையும் மாணவிகளால் நினைவுப்பரிசு மற்றும் வாழ்த்துரைகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டமை குரு பக்தியை அரங்கில் பறைசாற்றியிருந்தது.

தொடர்ந்து  குசான்வில் தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. நடனங்கள், பாடல்கள், கவிதைகள், பேச்சுக்கள், நாடகங்கள், தாளலயம் என அனைத்தும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் தமிழ்ச்சோலை மாணவர்களால் மிகவும் சிறப்பாக ஆற்றுகைப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்வில் சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் ஆசிரியர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர்தனது உரையில், இவ்வாறான நிகழ்வுகள் மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் எமது கலை கலாசார பண்பாட்டை வளர்ப்பதற்கும் உதவுகின்றது எனத் தெரியப்படுத்திய அவர், மாணவர்களை வளப்படுத்தக்கூடிய வகையில் பல தகவல்களைத் தெரிவித்த அவர்,  அனைவரும் எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலில் அணிதிரளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில், சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் வெற்றிக்கிண்ணம்,  சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

அனைத்து மாணவ மாணவியர்களும் இணைந்து தமிழ் மொழி வாழ்த்து இசைத்ததைத் தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
(ஊடகப்பிரிவு  – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here