வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக வணிகர் சங்கங்கள் போராட்டம்: 70 சதவீத கடைகளில் விற்பனை நிறுத்தம்

0
156


தமிழகம் முழுவதும் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக வணிகர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெரினாவில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து, மார்ச் 1-ம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என்று வணிகர் சங்கங்கள் அறிவித்தன. இந்நிலையில் மார்ச் 1-ம் தேதியான நேற்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில், பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் இருந்த கடையில் விற்க வைத்திருந்த வெளிநாட்டு குளிர்பானங்களை கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜாவிடம் கேட்டபோது, “இன்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் 70 சதவீத கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படவில்லை. மீதம் உள்ள 30 சதவீத கடைகளில் விற்பனை நடைபெற்றதைத் தொடர்ந்து, அவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் வணிகர்கள் சார்பில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பகுதி அளவில் போராட்டங்கள் நடைபெற் றன. அடுத்த இரு தினங்களில் பேரமைப்பின் அவசர கூட்டத்தை கூட்ட இருக்கிறோம். அதில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்காத கடைகளுக்கு பாராட்டுச் சான்று வழங்கி கவுரவிக்க இருக்கிறோம். விற்று வரும் கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருக்கிறோம். பின்னர் அவர்கள், வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பதை நிறுத்துவதற்கு எது தடையாக உள்ளது என்பதை ஆராய்ந்து, அவர்களுடன் இணைந்து, அந்த தடையை நீக்குவோம். வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக சென்னை ஸ்தம்பிக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here