துபாயில் தயாராகிவரும் புகைப்பட ஃப்ரேம் வடிவக் கட்டிடம்

0
123

Dubai-Frame-newதுபாய் சபீல் பார்க் அருகில்  புகைப்பட ஃப்ரேம் போன்ற வடிவத்திலான கட்டிடம் ஒன்று சுமார் 150 மீட்டர் உயரத்திலும், 93 மீட்டர் அகலத்திலும் அமையவுள்ளது.

இந்தக் கட்டிடமானது பழைய துபாய் மற்றும் புதிய துபாயின் அழகினை தனித்தனியே ஒரு புகைப்பட ஃப்ரேமிற்குள் காண்பதுபோன்ற காட்சியைத் தரும் வகையில் அமையவுள்ளது.

மேலும், இதன் வாயிலாக ஒட்டு மொத்த துபாய் நகரின் ரம்யமான அழகையும் நம்மால் ரசிக்க முடியும் என்றும், இந்த முயற்சி சுற்றுல‌ாப்பயணிகளால் மிகவும் வரவேற்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்டிடத்தின் கடைசி மேல் தளத்தில் கண்ணாடியால் அமையவுள்ள தளத்தின் மூலமாக ஒட்டு மொத்த துபாய் நகரின் எழில்மிகு அழகை, பனோரமிக் காட்சியில் நம்மால் கண்டுகளிக்க முடியும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கட்டிடத்தின் ஒரு புறத்தில் கீழிருந்து மேல் செல்லும் வகையில் கண்ணாடியினால் அமையவுள்ள லிஃப்ட் மூலம் பழைய துபாய் பகுதிகளான கராமா, உம் ஹுரைர், பர் துபாய், தெய்ரா மற்றும் துபாய் கிரீக் போன்ற பகுதியினைக் காணமுடியும் எனவும் அதேபோல மற்றொரு பக்கத்தில் உலகத்தின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, புகழ்பெற்ற ஏழு நட்சத்திர ஹோட்டலான புர்ஜ் அல் அரப் போன்ற‌ புது துபாயின் அழகினைக் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இக்கட்டிட வேலைகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here