தேசத் தூரோக வழக்குகள்: பாஜகவை தமிழக அரசு பின்பற்றுவதாக முத்தரசன் குற்றச்சாட்டு

0
396

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலைமுயற்சி மற்றும் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்வது, பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறை என்று தமிழக அரசு மீது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் பிறர் தலையீட்டிற்கும் நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணிந்து, அவப்பெயருக்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகின்றோம்.


தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவுக்கு அர்த்தமற்ற தடையின் காரணமாக தமிழக மாணவர்கள் – இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் போன்று அனைவரும் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டு அமைதி வழியல் போராடியதை உலகம் வியந்து பாராட்டி வருகின்றது. அமைதியாக, ஜனநாயக பூர்வமாக போராடிய பல்லாயிரக்கணக்கான மாணவர்களை, இளைஞர்களை நிர்ப்பந்தமாக கலைத்திட அரசு காவல்துறை மூலம் எடுத்திட்ட நடவடிக்கை இப்போராட்டத்தை சீர்குலைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.
சீருடை அணிந்த காவலர்களே தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது வெட்ட, வெளிச்சமான நிலையில், பிறர்மீது பழிபோட்டு, அப்பாவி மக்களை கைது செய்து கொடூரமான முறையில் வழக்குகள் பதிவு செய்திருப்பதும் தேடுதல் வேட்டையை தொடர்வதும் ஏற்புடையது அல்ல.
காவல் துறையின் வன்முறையை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களை காவல்துறையினரைக் கொண்டு கிழிப்பதன் மூலம் உண்மைகளை மறைத்துவிட இயலாது. திருமண வீட்டில் சீப்பை மறைத்து வைப்பதன் மூலம் திருமணம் நின்று விடாது என்பதை அரசு அறியாத ஒன்றல்ல.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலைமுயற்சி மற்றும் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்வது, பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். அத்தகைய தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு பின்பற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வதுடன், தேடுதல் வேட்டையை உடனடியாக நிறுத்துவதுடன், போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள தொடர்ந்து பீதியை கிளப்பி வருகின்றனர். அதனை அரசும் ஏற்கும் விதத்தில் மெரினா கடற்கரை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவை தேவையற்றது, இதனை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று முத்தரசன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here