மீனவர்களுக்கு 25000 இழப்பீடு.. தீ வைத்த காவல்துறையினர் பணி நீக்க வேண்டும் .. உண்மையறியும் குழு கோரிக்கை

0
430

கடந்த திங்கட்கிழமை (23.01.2017) சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் சென்னை நடுகுப்பத்தில் நடைபெற்ற வன்முறையில் காவல் துறையினரே மீன் சந்தையை கொளுத்தினார்கள். வீட்டில் இருந்த பெண்கள் அனைவரையும் தாக்கி அடித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேராசிரியர் மார்க்ஸ், பேராசிரியர் மு. திருமாவளவன், முனைவர் சிவக்குமார், வீ. சீனிவாசன், நட்ராஜ், பெரியார் சித்தன், முனைவர் ஜெ. கங்காதரன், பேராசிரியர் கோ. கார்த்தி, அகமது ரிஸ்வான் ஆகியோர் கொண்ட உண்மை அறியும் குழு நேற்று நடு குப்பத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசியது.
சேகரிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இன்று அறிக்கை ஒன்றை உண்மை அறியும் குழு செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: உண்மையறியும் குழு எழுப்பியுள்ள கேள்விகள் 1984ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது இப்பகுதி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இதுதான் இம்மக்கள் சந்திக்கும் மிகப் பெரிய காவல்துறை அத்துமீறல்.


காவல்துறை மீது இப்பகுதி மக்களுக்கு ஒரு பகையும் கோபமும் இருந்ததாக துணை ஆணையர் கூறுகிறார். அது உண்மையோ பொய்யோ காவல்துறைக்கு இப்பகுதி அடித்தள மக்களின் மீது ஒரு பகையும் கோபமும் இருப்பது இன்று அரங்கேறியுள்ள கொடும் வன்முறைகளில் வெளிச்சமாகியுள்ளது.
போராட்டக்காரர்களுக்கு இம்மக்கள் ஆதரவு காட்டியதையும் இவர்களால் ஏற்க முடியவில்லை. மெரினாவிலிருந்து காவல் துறையினரால் துரத்தப்பட்டு ஓடி வந்த ஒரு பெண் ஓடிக் கொண்டிருக்கும்போதே கருச்சிதைவுக்கு ஆளாகியதையும் அவரை ரோட்டரி நகர் பெண்கள் காப்பாற்றியதையும் அவர்களில் ஒருவர் கூறினார்.
கொடுமைகளுக்கு காரணம் யார்?
மெரினாவில் அமைதியாக அமர்ந்து போராடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் முதலமைச்சரும் அவரது சக அமைச்சர்களும் நேரடியாக வந்து பேசி உறுதி அளித்திருந்தால் இந்தப் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும். இறுதிவரை காவல்துறையினர்தான் அரசுத் தரப்பில் போராட்டக்காரர்களுடன் பேசினரே ஒழிய முதலமைச்சர் வந்து பேசாததே இத்தனை வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணம்.
தயக்கம் ஏன்?
நிரந்தரச் சட்டம் இயற்றிய பின்னும் அது குறித்த முழு விவரங்களையும் போராட்டக்காரர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தந்து விளக்கி இருக்க வேண்டும். ஏன் அதில் தயக்கம் காட்டப்பட்டது எனத் தெரியவில்லை. ஜனநாயகமற்ற அரசு தமிழகமெங்கும் 23ந் தேதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
இதே போன்று நடந்த வால்ஸ்ட்ரீட் அமர்வுப் போராட்டத்தின் போது அமெரிக்க அரசு இப்படி நடந்து கொள்ளவில்லை. பலமாதங்கள் தொடர்ந்து நடந்த போராட்டம் அது. சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு எதிராக நடந்த அரபு வசந்தப் போராட்டங்கள் கூட இப்படி ஒடுக்கப்படவில்லை. அடிப்படை ஜனநாயகப் பண்பு அற்ற அரசுகளாகவே நமது அரசுகள் உள்ளன என்பதற்கு இந்த அடக்குமுறை இன்னொரு சாட்சியாக உள்ளது.
ஜன. 23 அன்று பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுப் பின் அன்று நடந்த இந்த தாக்குதல்களின் ஊடாகப் போக்குவரத்தை நிறுத்திப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உருவாக்கப்பட்ட சிரமங்கள் இந்த அரசின் பொறுப்பின்மையையும் திறமை இன்மையையுமே காட்டுகின்றன.
மெரினாவை ஒட்டியுள்ள தலித் மற்றும் மீனவர் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை விசாரிக்க நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும். • மீன்வளத்துறையின் மூலம் உடனடியாக தீப்பிடிக்காத கூரையுடன் கூடிய மீன் மார்கெட் ஒன்றை நடுக்குப்பத்தில் அரசு கட்டித்தர வேண்டும். • நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீன் வணிகம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணமாக ஒவ்வொருவருக்கும் ரூ. 25 ஆயிரம் அளிக்க வேண்டும். • தலித் மற்றும் மீனவர்களின் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் வாகனச் சேதங்களை ஒரு மாதத்திற்குள் உடனடியாக மதிப்பிட்டு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும் • கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். • இந்த அத்துமீறல்கள் குறித்த விசாரணை முடியும் வரை உயரதிகாரிகள் உட்பட இதற்குப் பொறுப்பானவர்களைக் கட்டாயக் காத்திருப்பில் வைக்க வேண்டும். வன்முறையிலும் தீ வைப்பிலும் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். • பெண் போலீசார் இப்படிப் பெண்கள் மீதே வன்முறையாக நடந்து கொண்டது குறித்துக் காவல்துறையும் அரசும் கவனம் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய உணர்வூட்டும் பயிற்சிகள் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here