கை கால் கட்டப்பட்ட நிலையில் கணவன் மீட்பு;மனைவியைக் காணவில்லை!

0
180

மர்மமான முறையில் கணவன், மனைவி ஆகிய இருவர் காணாமல் போகச் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கணவர் மட்டும் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் பிளஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ஓமந் தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம்  திங்கட்கிழமை அதிகாலை, 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
ஓமந்தை பொலிஸாருக்கு வீதியால் சென்ற பொதுமகன் ஒருவர் வழங்கிய  தகவலின் அடிப்படையில் ஏ9 வீதி மாணிக்க வளவு பேருந்து தரிப்பிட பகுதிக்கு விரைந்த பொலிஸார், அங்கு மயங்கிய நிலையில் காணப்பட்ட  குடும்பஸ்தரை மீட்டு  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருவது,
ஏ 9 வீதி, குறிசுட்டகுளம் கனகராயன்குளம்  என்னும் இடத்தில் வசிக்கும் தனபாலசிங்கம் நிஷாந்தன் (வயது 33) என்ற மன்னார் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் திரட்டுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தரின் தந்தையிடம் சம்பவம் தொடர்பில் கேட்டபோது,
கடந்த டிசம்பர்  மாதம்  30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் நிசாந்தன் வேலைக்கு செல்வதற்காகவும் மருமகளான யாழினி வவுனியா செட்டிக்குளத்தில் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கிற்கு செல்வதற்காகவும் ஒன்றாக  பேருந்தில்   சென்று கொண்டிருக்கும் போது வவுனியா தாண்டிகுளத்தில் மருமகள்  யாழினிக்கு அவர் ஆசிரியராக கடமையாற்றும் வவு/குறிசுட்டகுளம் அ.த. க. பாடசாலையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பினை அடுத்து பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளதாக கணவனிடம்  தெரிவித்துவிட்டு பேருந்திலிருந்து இறங்கியுள்ளார்.  இதையடுத்து எனது மகன் தொடர்ந்து பயணம் செய்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
அன்றைய தினம் மன்னாரில் தங்கி மறுநாள் வேலையை முடித்து வீடு திரும்பிய நிலையில் மருமகள் பாடசாலைக்கும், மரண நிகழ்வுக்கும், செல்லாது காணாமல் போயுள்ளார் என்ற விடயம் தெரிய வந்தது.
இதனையடுத்து உறவினர்கள் வீடுகளில் தேடியும் காணாத நிலையில், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகனால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் மகன், கடந்த 02ஆம் திகதி  திங்கட்கிழமை காலை மன்னாருக்கு வேலைக்கு செல்வதாக பேருந்தில் பயணித்துள்ளார். எனினும் இவர் மன்னாருக்கு வேலைக்குச் செல்லவில்லை என்ற தகவல்  அறிந்த நிலையில்  எனது கடைசி மகன் மூலம் மகனை காணவில்லையென்று கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் நாங்களும்  மகனையும், மருமகளையும் பல இடங்களில் தேடி வந்தோம்.
இந்நிலையில், இன்றைய தினம் (நேற்று) ஓமந்தை பஸ் தரிப்பிடத்தில் கை,கால் கட்டப்பட்ட நிலையில் ஓமந்தை பொலிஸாரால் எனது மகனாகிய தனபாலசிங்கம் நிஷாந்தன்  (வயது -33) மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் அறிவித்தல் கிடைத்ததும் வைத்தியசாலைக்கு  வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, வவுனியா தாண்டிகுளத்தில் அவசரமாக  பாடசாலை செல்வதற்காக  பேருந்திலிருந்து இறங்கிய மருமகள்  நிஷாந்தன் யாழினி (வயது 34) தொடர்பான   எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை  எனவும் மாமனார் கவலையோடு தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில் இவ் விடயம் தொடர்பாக  ஓமந்தை, கனகராயன்குளம், மடு, ஆகிய  பொலிஸ் நிலையப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here