தமிழனைச் சுடலாம், கொல்லலாம் சுட்டவருக்கு விடுதலை நிச்சயம்!

0
144
பொற்கைப் பாண்டியன் என்ற மன்னன் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.தனது கரத்தை துண்டாக்கி மக்களுக்கு மக்களுக்கு நீதி வழங்கியவன் அவன்.
நீதி என்று வந்துவிட்டால் அவர், இவர், நமர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை நிரூபித்தவன் பொற்கைப் பாண்டியன்.
அறம், தர்மம், நீதி என்பன ஒத்த கருத்தை எடுத்துரைக்கும் சொற்பதங்கள். அறத்தை தர்மத்தை நீதியை யாரெல்லாம் மீறுகிறார்களோ அவர்களுக்கு அறமே கூற்றாகும்.
எனினும் இவற்றையெல்லாம் இன்று ஏற்பதற்கும் ஆளில்லை. எடுத்துரைப்பதற்கும் ஆளில்லை என்பதாக நிலைமை மாறிவிட்டது.
இதில் எங்கள் நாட்டில் நடக்கின்ற தீர்ப்புக்களை நினைத்தால் நெஞ்சம் வெடித்து விடும். அந்தளவுக்கு நீதியை அநீதி மேலாடி நிற்கிறது.
அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக பெரும்பான்மை இனம் சார்ந்தவர்கள் எக்குற்றம் இழைத் தாலும் அவர்களுக்குத் தண்டனை இல்லை என்பதை உறுதிபடக் கூறமுடியும்.
குறிப்பாக போர்க்கால சூழ்நிலையில் எத்தனையோ கொலைகள், குற்றங்கள் நடந்துள்ளதாயினும் தமிழர்களுக்கு தீங்கிழைக்கின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெளத்த சிங்கள நாட்டின் விசுவாசிகள் என்பதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமைதான் இலங்கையில் உள்ளது. சர்வதேச நாட்டுப் பிரதிநிதிகள் இலங்கைக்கும் தமிழர் பகுதிக்கும் வருகின்ற போது அவர்கள் தமிழ் மக்களைப் பார்த்து போர் முடிந்து விட்டது. நீங்கள் நிம் மதியாக வாழ்கிறீர்கள். இனிப் பிரச்சினை இல்லைத் தானே என்று கூறுவதைக் காணமுடிகிறது.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை அவர்கள் யுத்தம் முடிந்ததால் தமிழ் மக்கள் நிம்மதியாக – சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று கருதுகிறார்கள்.
உண்மையில் இலங்கையில் நடந்த மண் மீட்புப் போர் என்பது தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டதால் ஏற்பட்டதுதான்.
எனவே  தமிழ் மக்களுக்கான உரிமை, அவர்களுக்கான அதிகாரங்கள் என்று வழங்கப்படுகின்றதோ அன்றுதான் இலங்கையில் அமைதி ஏற்பட முடியும்.
இருந்தும் இந்த உண்மையை அறிவதற்கு எவரும் தயாரில்லை. தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமாயின் நீதி சரியாக வழங்கப்பட வேண்டும்.
சிங்கள இனம் என்றால் அதற்கொரு நீதி தமிழ் மக்கள் என்றால் அதற்கு இன்னொரு நீதி என்ற நீதிப்பாடு இருக்கும்வரை இலங்கை ஆட்சி மீதோ, சட்டங்கள் மீதோ தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள முடியாது என்பதே யதார்த்தம்.
2009ஆம் ஆண்டில் வன்னியில் நடந்த யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்தது.  தமிழின அழிப்பு என்று சொல்லுமளவுக்கு தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.
ஆனால் இன்றுவரை எந்த நீதியும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. சர்வதேச போர்க்குற்ற விசாரணை இடம்பெறும் என்று நம்பினோம். இருந்தும் அதனைச் வெட்டிச் சரித்து உள்நாட்டில் விசாரணை என்று மாற்றீடு கூறுகிறது நல்லாட்சி.
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று ஆட்சியாளர்கள் நினைத்தால் சர்வதேச விசாரணையை அவர்களே வலிந்து கேட்டிருக்க வேண்டும்.  மாறாக சர்வதேச விசாரணைக்கு அறவே இடமில்லை. அதற்கு அனுமதிக்க முடியாது என்று நல்லாட்சி தடுக்கிறது என்றால் தமிழர்களுக்கு நீதி கிடைக்க விடமாட்டோம் என்பதே அதன் பொருளாகும்.
இந்தவகையில் 2009இல் வன்னி பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்களுக்கு நடந்த மிகக் கொடூரமான அழிவுகள் எதற்கும் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதற்கு அப்பால், யுத்த காலத்தில் நடந்த கொலைகள்,  கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகச்  செய்தல்கள் இவை தொடர்பில் எந்த நீதியும் கிடைக்காது.  மாறாக குற்றவாளிகள் தப்பிக்கச் செய்யப்படுவர் அல்லது விடுதலை செய்யப்படுவர் என்பதே யதார்த்தம்.
என்ன செய்வது நாம் தமிழர்கள் என்பதால் தரப்படுகின்ற தீர்ப்பை ஏற்பதுவே எங்கள் தலைவிதியாக இருக்கிறது. இந்த உண்மையை தமிழ் மக்கள் உணர்ந்திருந்தாலும் தமிழ் அரசியல் தலைமை எப்போதுதான் உணருமோ தெரியாது.
 – வலம்புரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here