
தமிழினப்படுகொலையின் உச்சநாளாகக்கருதப்படும் மே 18 இனை முன்னிட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகள் பிரான்சின் பல பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றது. கடந்த 14/5/2025 புதன்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான திறான்சி என்னும் இடத்தில் மாநகரசபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் திறான்சி பிராங்கோ தமிழ்சங்கத்தினால் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை திறான்சி நகரபிதா Aude LAGARDE அவர்கள் ஏற்றி வைக்க ஈகைச்சுடரினை மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் ஏற்றி வைக்க, மலர்வணக்கத்தை மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திறான்சி நகரசபை உறுப்பினர்கள் செலுத்தியிருக்கலாம்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் நகர முதல்வர் உரை நிகழ்த்தி இருந்தார். அவர் தனது உரையில், குறித்த முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்புப் பற்றித் தாம் நன்கு அறிந்துள்ளதாகவும். இப்பகுதியில் அதுவும் இரண்டாம் உலக யுத்த நினைவுத்தூபி அமைந்துள்ள முக்கியமான பகுதியில் ஒரு வருடத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்குத் தாம் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்த அவர், அதன்பின்னர் குறித்த நிகழ்வு அப்பகுதியிலேயே நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
மாவீரர் குடும்பத்தினர் சங்க உறுப்பினர்கள் , தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், மாவீரர் பணிமனை செயற்பாட்டாளர்கள், கலை பண்பாட்டுக் கழக உறுப்பினர்கள், தமிழ்ச் சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
நிறைவாக அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கப்பட்டது













































