இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்; கண்டதும் சுட உத்தரவு!

0
13

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. அதன்படி நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 1.44 மணிக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கிவிட்டதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த தாக்குதலுக்காக இந்தியா குறிவைத்த இடங்கள் மொத்தம் 9. பஹல்காம் தாக்குதல் உள்பட இந்தியாவில் தாக்குதல் நடத்தக் காரணமான தீவிரவாதிகள் செயல்படும் இடங்களை சரியாக கண்காணித்து இந்த 9 இடங்களை ராணுவம் தேர்வு செய்திருந்தது.

அதில் முதன்மையானது முரித்கே. இந்தியாவின் அமிர்த சரஸில் இருந்து 61 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இங்கேதான் லஷ்கர் இ-தொய்பாத தீவிரவாத அமைப்பின் தலைமையகம் இருக்கிறது. இந்தியப் பகுதிக்குள் இருந்தபடி ராணுவமும், விமானப் படையும் நடத்திய தாக்குதலில் இந்த பகுதி நிலைகுலைந்தது.

இந்த தாக்குதலில் ஜெய்ஸ் முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் நடத்தி வந்த மதரசாவும் இந்த தாக்குதலில் இருந்து தப்பவில்லை. கோட்லி, முஷாபராபாத், பைசாலாபாத் உள்ளிட்ட 9 இடங்களில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது எல்லையை மீறி வருகிறது.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லை பாதுகாப்பு படைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லையை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்ததற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பிகானிர், பார்மல், ஜெய்சால்மர் உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லையோர நகரங்களில் இரவு 12 மணி முதல் காலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here