பிரான்சு தலைநகரில் இன்று நான்காவது கட்டமாக இடம்பெறும் போராட்டம்!

0
5

பிரான்சில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் நான்காவது கட்டம் இன்று ( 07.11.2026) சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தலைநகரின் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் மீண்டும் பாதிப்புகள் ஏற்படவுள்ளன.

இதன் காரணமாக பல மெட்ரோ மற்றும் RER நிலையங்கள் மூடப்படவுள்ளதுடன், சில போக்குவரத்துப் பாதைகளிலும் சேவைத் தடைகள் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகத்தின் கோரிக்கைக்கு அமையவும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் மொத்தம் 16 நிலையங்கள் மூடப்படவுள்ளதாக RATP தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

Charles-de-Gaulle – Étoile, Argentine, George V, Tuileries, Franklin D. Roosevelt, Champs-Élysées Clemenceau, Concorde மற்றும் Miromesnil ஆகிய மெட்ரோ நிலையங்கள் இன்று காலை 5.30 மணி முதல் மூடப்பட்டுள்ளன.

மெட்ரோ 5 மற்றும் 9 ஆகிய வழித்தடங்களில் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்படவுள்ளன. Oberkampf, Richard Lenoir, Saint-Ambroise, Voltaire, Charonne மற்றும் Rue des Boulets ஆகிய நிலையங்கள் காலை 10 மணி முதல் மூடப்படும்.

மேலும், Les Halles மற்றும் Châtelet ஆகிய நிலையங்களும் காலை 10 மணி முதல் மூடப்படவுள்ளன.

கடந்த வாரங்களில் இடம்பெற்ற போராட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த அக்டோபர் 31ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின்போது 40க்கும் மேற்பட்ட மெட்ரோ மற்றும் RER நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. அதற்கு முன்னர் ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின்போது 24 நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று சனிக்கிழமை நடைபெறும் போராட்டத்திற்காக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள பேரணி பாதைக்கு காவல்துறை தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான தகவலை தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிக்கு Place de la République பகுதியில் இருந்து பேரணி ஆரம்பமாகி, இறுதியாக Nation பகுதியைச் சென்றடையவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here