திருச்சி சிறப்பு முகாம் தமிழீழத் தமிழர்களை சிங்களவனுக்கு அனுப்பிவைக்கும் கொலைக்கள கூடமா?

0
50

திருச்சியிலிருப்பது சிறப்பு முகாமா? அல்லது சிங்கள அரசு கொல்வதற்கென தமிழீழத் தமிழர்களை ஆள்பிடித்து அனுப்பி வைக்கும் கொலைக்கள கூடமா?

வ.கௌதமன்

2009 திட்டமிட்ட இனப் படுகொலைக்கு முன்பும் பின்பும் லட்சக்கணக்கான தங்கள் தமிழீழ உறவுகளை சிங்கள அதிகார வர்க்கத்தின் குரூர பிசாசின் கரங்களுக்கு பலி கொடுத்து விட்டு “இந்தியா எங்கள் தந்தையர் நாடு” என்கிற உரிமையோடு தமிழீழத் தமிழர்கள் இங்கு தஞ்சம் புகுந்திருந்த நிலையில், சிங்கள பிசாசுகளுக்கு சற்றும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என சவால் விட்டு பிரகனப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஒரு சிறப்பு முகாம் அமைத்து அங்கிருந்து தப்பித்து உயிர் பிழைத்து வாழ வரும் ஈழத் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக அடைத்து வைத்து அவர்கள் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகளை சுமத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தண்டனைக் காலம் முடிந்திருந்த நிலையிலும் விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி, இழுத்தடித்து இறுதியில் சிங்கள அதிகார வர்க்கத்தோடு தமிழ்நாட்டை ஆளுகின்றவர்களில் ஒரு சிலர் கைகோர்த்துக் கொண்டு விடுதலை பெற்ற ஈழத்தமிழ் கைதிகளை நேராக கொழும்பிற்கு விமானத்திலேற்றி அவர்கள் இறங்கிய உடனே கைது செய்தும் சிலரை கால வரையறையின்றி சிறையிலடைத்தும், ஒரு சிலரை சுட்டுக் கொன்றும் கோரத்தாண்டவமாடும் ஈவு இரக்கமற்ற தொடர் நாடகத்தை மனித மனம் கொண்ட எவராலும் இனியும் சகித்துக் கொள்ள முடியாது. இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் இப்படிப்பட்ட இரக்கமற்ற நிகழ்வுகளுக்கு எனது சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் ஆகப்பெரும் கசப்போடு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரக்கப் பிடியிலிருந்து விடுபட்டு உலகம் முழுக்க சிதறி விழுந்த ஈழத் தமிழினம் இந்திய ஒன்றியத்தை அடிமைப்படுத்தி ஆண்ட லண்டனிலும் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளிலும் கனடா மற்றும் அமெரிக்க பெரும் தேசங்களிலும் அரசு அதிகாரிகளாக ஆகப்பெரும் செல்வந்தர்களாக அந்தந்த நாடுகளின் பாராளுமன்றங்களில் வலிமை மிக்க அமைச்சர்களாக மாண்புடனும் தன்மானத்துடனும் கோலொச்சிக் கொண்டிருக்கிற இன்றைய சூழலில், இந்திய ஒன்றியத்தில் அதிலும் எட்டுக் கோடி தமிழர்கள் வாழ்கின்ற தாய்த் தமிழ்நாட்டில் மட்டும் அடிமைகளாகவும், அகதிகளாகவும், நிர்கதியற்ற கைதிகளாகவும் வாழ வைத்துக் கொண்டிருப்பதென்பதனை என்னும்போது மனம் கூனிக்குறுகுகிறது. இது ஒரு வெட்கத்திலும் வெட்கக்கேடானது. அதுவும் போருக்கு பின் இலங்கையிலிருந்து வெளியேறிய விடுதலைப் போராளிகளை லண்டன், சுவிஸ், கனடா போன்ற நாடுகள் இருகரம் பற்றி வரவேற்று வாழ்வளித்துக் கொண்டிருந்த நிலையில் இந்திய ஒன்றியத்தில் மட்டும் அவர்களை தீவிரவாதிகள் என்றும், மன்னிக்க முடியாத கொடூர குற்றவாளிகள் என்றும் இன்றுவரை சித்திரம் கட்டி சிறையிலடைத்துக் கொண்டிருப்பது ஒரு அறமற்ற செயல்.

26.10.2026 அன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி ஈழத்தமிழர்களான திரு.கிருஷ்ணகுமார் அவர்களையும் திரு.சுபாஷ்கரன் அவர்களையும் இலங்கைக்கு புறப்படுமாறு பட்டாலியன் கணக்கில் காவல் துறையினரை இறக்கி திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு நாடுகடத்த பலவந்தப் படுத்தியிருக்கிறார்கள். திரு.கிருஷ்ணகுமார் என்பவர் பதிமூன்று ஆண்டுகளுக்கு மேலான தனது சிறை வாழ்க்கையில் பல முறை இங்கிருந்து இலங்கைக்கு செல்லுமாறு சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் மனச் சிதைவடைந்து “சிறுக சிறுக இங்கிருந்து சாவதை விட சிங்களவனே கொன்று போடட்டும்” என வெறுத்துப் போன மனநிலையில் இலங்கைக்கு செல்ல விருப்பமில்லா விருப்பம் தெரிவித்திருந்தவர். ஆனால் தமிழ்நாட்டின் ஏதிலியர் முகாமில் கடும் இதய நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் நிவேதன் என்கிற தனது பதினெட்டு வயது மகனுடனிருக்கும் திரு.சுபாஷ்கரன் அவர்களின் மனைவியோ பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளிவரும் தனது கணவனோடு மீதமிருக்கும் காலத்திலியாவது நிம்மதியோடு வாழ்வோம் என கனவு கண்டு காத்திருக்கும் வேளையில் இலங்கைக்கு சென்றால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கட்டாயமாக உயிராபத்து இருக்கின்றது எனவும் அங்கு செல்ல தனக்கு துளியும் விருப்பமில்லை எனவும் மறுத்து எழுதிக் கொடுத்திருந்த திரு.சுபாஸ்கரன் அவர்களை திரு.கிருஷ்ணகுமார் அவர்களோடு ஒன்றாக இணைத்து விமானத்தில் ஏற்றும் சூழ்ச்சியறிந்து திரு.சுபாஷ்கரன் அவர்கள் சிறப்பு முகாமிலிருக்கும் உயரமான ஒரு மரத்தில் ஏறி தனது விருப்பமின்மையை மீண்டும் போராட்டத்தின் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார். திரு.சுபாஸ்கரன் அவர்கள் முள்ளிவாய்க்காலின் புகை சூழ்ந்த இறுதி யுத்தக் களத்தில் தனது ஐந்தரை வயது மகளோடும் மனைவியோடும் நடந்து வர சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி ரவை ஆசையாசையாக வளர்த்த அவரது அன்பு மகளின் வயிற்றை கிழித்து உயிரை பறித்திருக்கிறது. இரத்த ஆறு ஓடிய அந்த யுத்தக்களத்தில் தனது ஏழு இரத்த சொத்தங்களை பலி கொடுத்தவர் திரு.சுபாஷ்கரன். இப்படி உயிர்களை இழந்து உடமைகளை இழந்து நிலத்தையும் அதிகாரத்தையும் இழந்து எல்லாவற்றிற்கும் மேலாக மானத்தையும் இழந்து இங்கு வந்து தஞ்சமடைந்திருக்கும் தொப்புள் கொடி உறவுகளான நம் தமிழீழ சொந்தங்களை இங்கிருக்கும் சில இரக்கமற்ற அதிகாரிகள் அவர்களின் உயிர்களோடு மீண்டும் மீண்டும் விளையாடுவதை, தமிழர்களால் வாக்களிக்கப் பெற்று இன்று அரசு பதவிகளில் உட்கார்ந்திருக்கும் ஒருசில அமைச்சர்களும் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களும் வேடிக்கைப் பார்ப்பதும் பாராமுகமாக இருப்பதும் எத்தகைய மாண்புக்குரியது? எனது அடிவயிற்றின் பெருவலியோடு கேட்கிறேன். நாம் சேர சோழ பாண்டியர்கள் வழி வந்தவர்கள்தானா? அல்லது மகிந்த ராஜபக்சேக்களின் வழித் தோன்றல்களா? என்பதை இனியாவது சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாடு கடத்தும் திட்டத்திற்கு உடன்படாத திரு.சுபாஷ்கரன் அவர்களை எண்ணற்ற காவலர்கள் சூழ்ந்து நிற்க மரத்தின் உச்சிக்கிளையிலிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக போராடிக் கொண்டிருக்கும் செய்தியறிந்து திருச்சி மாவட்ட கலெக்டர் திரு.பிரதீக் டாயல் அவர்களிடம் தொடர்பு எடுத்துப் பேசுகிறேன். அப்படியா? இந்த செய்தி குறித்து நான் விசாரிக்கிறேன் என்றவர் விசாரித்துவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் தொடர்புக்கு வந்தவர் கிருஷ்ணகுமாரை மட்டும் இலங்கை அனுப்புகிறோம், இப்போதைக்கு சுபாஸ்கரனை நாங்கள் அனுப்பவில்லை என்கிறார். அப்படியென்றால் பிறகொருநாள் அனுப்புவீர்களா என்ற எனது கேள்விக்கு அவரால் முழுமையான பதிலை இறுதிவரை தரமுடியவில்லை. பிறகு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு.நிர்மல் குமார் அவர்களுக்கு தொடர்பு எடுக்கிறேன். அனைத்தையும் கேட்டறிந்தவர் அரசோடு பேசி நல்லதொரு முடிவை எடுக்கிறோம் என்கிறார். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் கைதிகளை விட எண்ணிக்கையில் கூடுதலான காவல்துறையினரால் நிறைந்து வழிந்து கொண்டேயிருக்கிறது அங்கிருக்கும் காவலரண். இதற்கெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்? இதற்கு முன்பு நாடு கடத்தப்பட்ட பலர் இன்றுவரை கொடும் சித்திரை வதைகளோடு இலங்கை சிறையில் வாடுகின்றார்கள். ஒரு சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்பொழுது அழைத்துச் செல்லப்பட்ட திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு உடல் முழுக்க வெள்ளைத்துணி போர்த்தப்பட்டு ஒரு அறிய வகை மிருகத்தை அழைத்து செல்வது போல சிங்களக் காவல்துறையினரால் கொண்டு செல்லப்படும் ஊடக காட்சிகள் மனதை பதைபதைக்க செய்து கொண்டிருக்கிறது. அபாயகரமான நான்காம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்ட திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் இப்பொழுதுவரை எங்கிருக்கிறார் என்கிற தகவலைக்கூட அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. இனி அவர் உயிரோடு இருப்பாரா இருக்க மாட்டாரா என்பதற்கும் எந்தவிதமான உத்திரவாதமுமில்லை. ஆக திருச்சியிலிருப்பது சிறப்பு முகாமா? அல்லது சிங்கள அதிகார வர்க்கம் ஏற்கனவே கொன்றது போக மீதமிருக்கும் தமிழீழத் தமிழர்களை கொன்றொழிக்க இங்கிருந்து ஆள் பிடித்து அனுப்பும் கொலைக்கள கூடமா? என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இனியாவது ஆய்ந்து ஆராய்ந்து தடுத்து நிறுத்தி இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் செய்த ஆகப் பெரும் தவறுகளை தனதாட்சியிலும் அனுமதிக்காமல் மனிதம் காக்க வேண்டுமென்றும், தண்டனைக் காலத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் திரு.சுபாஷ்கரன் அவர்களின் நாடுகடத்தும் முடிவினை நிரந்தரமாக கைவிடுவதோடு அவரை உடனடியாக விடுதலை செய்து தமிழ்நாட்டிலிருக்கும் அவரின் மனைவி மகனோடு ஒப்படைக்க வேண்டுமென்றும், மேலும் இந்திய ஒன்றியத்தில் வாழும் தமிழீழத் தமிழர்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, குடியுரிமை என அனைத்தையும் வழங்கி கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் இங்கு வாழ நிரந்தர தீர்வென்றினை உருவாக்குமாறும் உலகத் தமிழர்களோடு சேர்ந்து நின்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
29.10.2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here