நல்லூர் கோயில் நாட்டாமை இழுத்து குழந்தையுடன் குடும்பஸ்தர் தடக்கி வீழ்ந்தார் !

0
906

naadaamaiநான் தெரிவிக்கும் இந்தத் தகவலை துணிவுள்ள எந்த ஊடகங்களும் பிரசுரிக்கலாம். எந்த சிக்கல்கள் வந்தாலும் என்னையே பொறுப்பாக சுட்டிக் காட்டலாம்.

நல்லூர் கோயில் நாட்டாமை இழுத்து வீழ்த்தி குழந்தையுடன் வந்த குடும்பஸ்தர் தடக்கி வீழ்ந்தார்.நேற்று நல்லுார் கந்தனின் மஞ்சத் திருவிழா. தெற்கு வாசல் கோபுரத்துக்கு அருகில் மஞ்சம் அந்த இடத்தை விட்டு அப்பால் சென்ற பின்னர் மஞ்சத்திற்குப் பின்னே 2 வயது நிறம்பிய குழந்தையுடன் நின்ற ஒரு அடியவரைச் சுற்றி சிறு கூட்டம் நின்றது. என்னவென்று எட்டிப் பார்த்தேன். அவரது பெருவிரலில் இரத்தம் சிந்தியது. அவர் பிள்ளையை இறக்கி விட்டு அந்த இரத்தத்தை துடைத்துவிட்டு கீழே எதையோ தேடியபடி நின்றார். இன்னொருவர் கீழே கிடந்த அவரது வாகனச் சாரதிப் பத்திரங்களுடன் கூடிய சிறு பேர்சை எடுத்து அவரிடம் கொடுத்தனர். நான் அவரை அணுகி என்ன நடந்தது எனக் கேட்டேன். ‘சேட்டுடன் வந்தனான் தம்பி. அதுதான் என்னை தள்ளிப் போட்டான். நான் பிள்ளையைத் துாக்கிக் கொண்டு வந்தனான். நல்லகாலம் பிள்ளை விழாமல் போட்டுது என கூறி நொண்டியபடி செல்லத் தொடங்கினார். நான் உடனே அவரை நிறுத்தி ‘அண்ணை உங்களைத் தள்ளிவிட்டவனை அடையாளம் காட்ட முடியுமா?‘ எனக் கேட்டேன். ‘ஓம்‘ என்று சொன்னார். அவரும் தள்ளிவிட்டதை நினைத்து கோபம் அடைந்திருக்க வேண்டும். உடனடியாகவே அதற்கு சம்மதம் தெரிவித்து என்னை அவனைக் காட்டுவதற்காக நொண்டி நொண்டி நடந்தபடி மஞ்சத்தின் அருகே கொண்டு சென்றார். மஞ்சம் மேற்கு வீதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தது. அதோ நிற்கின்றான் அவன்தான் தள்ளியது என காட்டினார் ( அந்த வீடியோ இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது). https://www.facebook.com/thanapalasingam.vasantharuban/videos/1478730348819192/

அவனை நான் பார்த்தேன்….

நெற்றியில் நீறில்லை…. சந்தனப் பொட்டில்லை…. சைவ சமயத்தவன் என்று சொல்லும்படியாக எதுவும் இல்லை. மாட்டிறைச்சிக் கடையில் வேலைக்கு வந்தவன் போல் நின்றிருந்தான். ஆனால் ஒன்று வேட்டி மட்டும் கட்டி அதற்கு மேல் சிவப்பு சால்வையும் கட்டியிருந்தான்…..

அவனை எனது கமராவில் சுட்டுக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்த காயப்பட்ட அண்ணை ‘என்னப்பா இவ்வளவு காட்டுமிராண்டிகளா இருக்கிறாங்கள். நான் கந்தரோடையில் இருந்து வைFப் போட வந்தனான். அவளும் குழந்தையும் முன் பந்தலுக்குள்ள நிக்கினம். இவன் மஞ்சம் பாக்கப் போறன் என்டு கேட்டுக் கொண்டிருக்க துாக்கிக் கொண்டு வந்தன். மஞ்சத்துக்கு பக்கத்தால முன்னுக்குப் போய்க் கொண்டிருந்த ஆக்களோட நானும் போய்க் கொண்டிருக்க ‘அந்தக் காட்டுமிராண்டி‘ குழந்தையைத் துாக்கி் கொண்டு வந்ததையும் பாக்காமல் தள்ளிப் போட்டான்‘ என்டு கூறி கவலைப்பட்டார்.

இது இவ்வாறிருக்க இன்று மாலை நான் கோவிலில் சுவாமி வெளிவீதி வந்து கொண்டிருப்பதை எனது கமராவில் பதிவு செய்து கொண்டிருந்த போது ‘சேட்டைக் கழற்று‘ என்று இன்னொரு நாட்டாமை எனக்கு அருகில் வந்து நின்றது. ‘சேட்டு ஏன் கழற்ற வேண்டும்? இதுக்கு ஒரு சரியான பதிலைச் சொன்னால் நான் கழற்றுகின்றேன்?‘ என நான் கூறிய போது ‘ அது நிர்வாகத்திட ஓடர், சேட்டு இல்லாமல்தான் கமராவை வைத்திருக்க வேணும். இல்லாட்டி கமராவை கோவில் கவுண்டரில் தான் போய் எடுக்க வேணும் என்று எனது கமராவை அந்த நாட்டாமை பறிக்க முயன்றது. பக்கத்தில் சீருடையுடன் நின்ற ஒரு பொலிசுக்காரனிடம் ‘இவன் சேட்டைக் கழற்றச் சொல்லுகின்றான். ஏன் கழற்ற வேண்டும். நீங்களே போட்டிருக்கிறீங்கள்,‘ நான் ஏன் போடக்கூடாது? என முறையிட்ட போது பொலிஸ்காரனுக்கு முன்னும் கமராவை அந்த நாட்டாமை பறிக்க முற்பட்டது. உடனடியாக பொலிஸ்காரன் அவனை அந்த இடத்தில் இருந்து அகற்றிய பின்னர் நான் தொடர்ந்து கமராவில் பதிவு செய்தேன்…

சேட்டு இல்லாமல் எந்த வித ஆபரணங்களும் போடாமல் நல்லுார் முருகனுக்கு சற்று முன்னால் சென்று கொண்டிருக்கும் நல்லுார் முதலாளியிடம் சில கேள்விகள்…..

1) உங்களைப் பார்க்கும் போது சாந்தமானவராகவும் ஞானம் பொருந்தியவராகவும் காணமுடிகின்றது.ஆனால் ஏன் இவ்வாறான ரவுடித்தனம் பொருந்திய ‘சூரனின் சேனைகளை‘ முருகனுக்கு அமர்த்தி உள்ளீர்கள்?

2) கோவிலுக்கு வரும் போது ஆசாரசீலர்களாகவும் தோய்த்து உலர்ந்த ஆடைகள் அணிந்தும் வருதல் வேண்டும் என்றே நாங்கள் சிறுவயதில் படித்துள்ளோம். நான் 1997ம் ஆண்டு தொடங்கி 15 வருடங்கள் தொடர்ச்சியாக 25 நாட்களும் காலை வேளைகளில் அங்கப்பிரதட்டை அடித்தவன். 25 நாட்களும் விரதம் இருப்பவன். எனக்கும் இந்து மதத்தின் கோட்பாடுகள் தெரியும். கோவிலுக்குள் நானும் சேட்டுடன் போவதில்லை. அத்துடன் சுவாமி வெளிவீதி சுற்றியபின்னர் கோவிலுக்கு செருப்புடன் வருபவர்களை எதிர்ப்பவன் நான். அங்கப்பிரதட்டை அடிக்கும் போதுதான் அது புரியும். யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்களிலேயே சேட்டுடன் உள்ளே நுழையத்தடை என்ற வழக்கம் இருக்கிறது. வேறு மாவட்டங்களிலும் இந்தியாவில் கூட அவ்வாறான தடை இல்லை.

ஆனால் கோவிலுக்கு வெளியேயும் எதற்காக சேட்டுடன் நீங்கள் விடுவதில்லை. எத்தனை பக்தர்கள் இதனால் பெரும் சிரமப்படுகின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? தங்களது மோட்டார் சைக்கிள் ஆவணங்கள், தொலைபேசி போன்றவற்றை அவர்கள் எங்கு சொருகுவது. சில பக்தர்கள் தங்கள் உடம்புகளில் உள்ள தளம்புகள், நோய் வந்ததற்காக பருக்களுடன் கூடிய அடையாளங்கள், உடல் பருமனைக் காட்டுவதில் உள்ள சிக்கல் போன்றவற்றால் எவ்வளவு சங்கடப்படுகின்றார்கள் என்பது உங்களுக்குப் புரியுமா? அவர்கள் வெளி வீதியில் முருகனை அருகில் நின்று கும்பிட முடியாதா? அப்போ ஏன் முருகன் வெளிவீதி உலா வருகின்றார். ஏன் நீங்கள் முருகனை உள்வீதிக்குள்ளேயே சுற்றிவிட்டு விடலாமே?

இறைச்சியை கடவுளுக்குப் படைத்த கண்ணப்ப நாயனார் தொடங்கி நந்தியை விலகச் செய்த நந்தனார் வரைக்கும் அனைவருக்கும் அருள் புரிந்தவர்கள் இந்துக் கடவுள்கள். சேட்டுடன் வெளிவீதி வரக்கூடாது என்று உங்களது நாட்டாமைகள் சொல்வதற்கு ஏதாவது ஆன்மீக காரணம் இருக்கின்றதா? அல்லது நல்லுார் முருகன் அவ்வாறு உங்களுக்கு ஏதாவது கனவில் சொன்னாரா?

அப்படி இருந்தால் அவற்றை கூறுங்கள் பார்ப்போம். சேட்டுடன் வராமல் மேலங்கி இல்லாமல் முருகனுக்குப் பக்கத்தில் தொப்பை வயிற்றுடனும் பத்துப் பவுண் சங்கிலியை தொப்புள் வரையும் துாக்கிப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்கும் மாத்திரமா முருகன் அருள் புரிவான்.

எந்த ஒரு மனிதனுக்கு அவனது தனி மனித உரிமையில் கை வைக்க யாருக்கும் அனுமதி இல்லை. சட்டம் சொல்கின்றது. எனது மத சுதந்திரத்திற்கும் சுவாமியை வெளி வீதியில் நான் நிம்மதியாகத் தரிசிப்பதற்கும் யாராவது குறுக்கீடு செய்தால் அது மனித உரிமை மீறல். நான் எனது சமயத்தின் ஆகம விதிகளுக்கு அமைவாகவும் தனிமனிதனுக்கு குறுக்கீடு செய்யாமலும் செய்யும் வழிபாட்டைத் தடுப்பதற்கு நல்லுார் முதலாளியான உங்களுக்கும் உரிமை இல்லை. நல்லுார் முருகன் உங்களுக்கு மட்டும் சொந்தமானவன் என நீங்கள் கருதினால் அதை பத்திரிகையில் விளம்பரப்படுத்துங்கள். உங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் கோவிலுக்கு வருமாறு பத்திரிகை அடித்து அழைப்பிதழ் கொடுங்கள். இல்லாது போனால் நல்லுார் முருகனை நான் சேட்டுடன் கும்பிடுவதற்கோ அல்லது ஒளிப்பதிவு செய்வதற்கோ நீங்கள் தடங்கல்கள் செய்யக்கூடாது.

தற்போது சைவ சமயத்தில் இருந்து பல சமயங்களுக்கு ஏராளமான இந்துக்கள் மதம் மாறுவதற்கு உங்களைப் போன்றவர்களும் காரணமாக இருக்கின்றார்கள். நிம்மதியாக முருகனை என்ர விருப்பத்துக்கு அமைய நான் கும்பிட முடியவில்லை என்றால் நீங்களும் எமது சமயத்தை அவமதிக்கும் ஒருவராகத்தான் இருப்பீர்கள்.

நல்லுார் முருகனின் மஞ்சத்திருவிழா அன்று உங்கள் நாட்டாமையால் தள்ளப்பட்டு பெருவிரலில் காயப்பட்ட அந்த மனிதன் போல் நான் இருக்க மாட்டேன். கட்டாயம் நியுட்டனின் 3ம் விதியை நானும் பிரயோகிப்பேன். எறும்பின் பலம் எனக்கு இருக்கின்றது என்று நீங்கள் கருதினாலும் ஒரு யானையுடன் மோதுவதற்கு ஒரு போதும் பின்னிற்க மாட்டேன். ‘ஒரு தனிமனித சுதந்திரம் என்பது ஒருவனது மூக்கு நுனிவரையுமே‘ என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நான் வெளிவீதியில் சேட்டுடன் நிற்பதற்கும் இந்த வீடியோவையும் கருத்துப் பதிவையும் நான் மிகுந்த மனவருத்ததுடனும் ஆதங்கத்துடனும் கோபத்துடனும் பதிவு செய்ததும் நல்லுார் முருகனுக்கு பிடி்க்கவில்லையாயின் எனக்கு அவர் மனிதர்களால் அல்லாத ,இது கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனை என பக்தர்கள் கருதக்கூடிய‘ தண்டனை எது தந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன்.

நன்றி
Vasantharuban Thanapalasingam முகப்புத்தகம்

https://www.facebook.com/sharer/sharer.php?u=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthanapalasingam.vasantharuban%2Fvideos%2F1478730348819192%2F&display=popup&ref=plugin&src=video

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here