மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

0
254

Maamanithar-Joshap-Paraajasingkamமட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நள்ளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 10 ம் ஆண்டு வீரவணக்க நாள்

தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.

தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்து வருகின்ற தெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.

அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும்.

விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம்.

தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.Maamanithar-Josap-Pararajasingkam-9-600x383

இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள்.

ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.

கதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை? ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.

காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா?

josep-01

ஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா?

குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா?

அந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா? இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும் உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும் என்பதே.

மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here