ஜோசப் ஸ்டாலினை கடந்து அதிக காலம் ரஷ்யாவை கட்டி ஆளும் புடின்!

0
112

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.

இந்தியாவை விட பல மடங்கு பெரியதாக விளங்கும்  ரஷ்யா, உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தாலும்    15 கோடி மக்கள் தொகையை கொண்டதாகவே விளங்குகிறது.

அங்கே ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். ரஷ்யாவில் சர்வ வல்லமை பெற்ற தலைவராக இருப்பவர் விளாடிமிர் புடின். இவர் கடந்த 1999 முதல் அங்கே அசைக்கவே முடியாத தலைவராக இருக்கிறார்.

இந்த நிலையில் அங்கே புதிய ஜனாதிபதி தேர்வு தேர்தல் நடந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்றதாக முதற்கட்ட தேர்தல் முடிவுகளில் தெரியவருகிறது. இதன் மூலம் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியில் தொடர்வது உறுதியாகி இருக்கிறது.

ரஷ்யாவில் பதிவான வாக்குகளில் 87.8% வாக்குகள் புடினுக்கு கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பின் ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுவாகும். 1999இல் அதிகாரத்திற்கு வந்த புடின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார்.

ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை புடின் கடந்துள்ளார்.

உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புடின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

அதேநேரம் ரஷ்யாவில் நடக்கும் தேர்தலை மேற்குலக நாடுகள் எப்போதும் விமர்சித்தே வருகிறார்கள்.  அங்குள்ள எதிர்க்கட்சிகள் போட்டியிட அனுமதிக்கப்படுவதில்லை. வேறுமனே பெயரளவில் சில கட்சிகளை மட்டும் போட்டியிட அனுமதிக்கிறார்கள் என்ற விமர்சனமும் உள்ளது.

இந்த முறையும் கூட புடினை வலிமையாக எதிர்க்கும் அளவுக்கு எந்தவொரு வேட்பாளரும் களத்தில் இல்லை என்பதே உண்மை.

ரஷ்யாவை பொறுத்தவரை அங்கே ஒரே நபரால் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபரா இருக்க முடியாது என்ற விதி இருந்தது. இதன் காரணமாகவே 1999இல் பதவிக்கு வந்த புதின் 2008இல் ஜனாதிபதி பதவியைத் தனது நண்பர் டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு முறை மட்டும் பிரதமராக இருந்தார்.

அதன் பின் மீண்டும் 2012இல் அதிபரான அவர், இந்தச் சட்டத்தை மாற்றினார். அதாவது ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்கலாம் என்று விதியை மாற்றினார்.

மேலும், ஜனாதிபதி பதவிக் காலமும் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புடின் பிரதமராக இருந்த போது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.

புடின் சாகும் வரை ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததாக விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here