பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் பேருந்து மற்றும் பாரவூர்தி நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தும் பாரவூர்தியும் தீப்பிடித்து எரிந்தது. புஸ்ஸிகன் நகர் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 43 பேர் பலியாகியுள்ளனர். இதில் பேருந்தில் பயணம் செய்த 42 பேர் மற்றும் பாரவூர்தி ஓட்டுநரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் தங்களது விடுமுறையை கொண்டாடுவதற்காக பேருந்தில் சென்றபோது இவ்விபத்து நடந்துள்ளது.
பேருந்து விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக, பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கடந்த 1982-ம் ஆண்டுக்கு பிறகு நிகழ்ந்த பெரிய சாலை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.