சிறைக்கூடங்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

0
194

icetசிறைக்கூடங்களுக்குள் எதுவித விசாரணைகளுமின்றி முடக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நீண்டகாலமாக எதுவித விசாரணைகளுமின்றி சிறைக்கூடங்களில் அடைபட்டிருக்கும் தம்மை விடுதலை செய்யவலியுறுத்தி கடந்த திங்கள் முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் எதுவித நிபந்தனைகளுமின்றி சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

அச்சுறுத்தி அடிபணியவைக்கும் நோக்கில் கைது மற்றும் சட்டவிரோத சிறைவைப்பு ஆகியவற்றை ஒரு ஆயுதமாகவே சிறிலங்கா ஆட்சியாளர்களால் காலம் காலமாக தமிழர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்வதற்கு ஏதுவாக இன்றுவரை பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால தடைச்சட்டம் என்பன அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

நீதிவிசாரணை முன்னெடுப்புகள் ஏதுமற்று கைதிற்குப் பின்னர் நேரடியாக சிறையிலடைக்கப்படுவதற்கும், பிணையில் செல்ல முடியாத கடும்போக்கு நிலைக்கும், காலநிர்ணயம் ஏதுமற்ற தடுப்புக்காவலுக்கும் இந்த பயங்கரவாத தடைச்சட்டமும் அவசரகால தடைச்சட்டமும் வழிவகுக்கின்றது. சட்டவிரோத கைதுகளிற்கும், சிறைவைப்புகளிற்கும் காரணமாக விளங்கிவரும் இப்பயங்கரவாத, அவசரகால தடைச்சட்டத்தை நீக்குவதுடன் விடுதலை கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என உலகத்தமிழர்கள் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேட்டுக்கொள்கின்றது.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் சிறைக்கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவிருக்கும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எமது தார்மீக ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

யாழ். பொது நூலகத்திற்கு அருகாமையில் உள்ள முனியப்பர் ஆலய முன்றலில் 16/10/2015 அன்று காலை 7 மணிக்கு இவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள அடையாள உண்ணாவிரதத்தில் பங்கேற்று எமது உறவுகளின் விடுதலைக் கோரிக்கைக்கு வலிமை சேர்க்குமாறு தாயகத் தமிழர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும், அமைப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here