தொடர்கிறது உண்ணாவிரதம்! 5 கைதிகள் நேற்று மயக்கம்!!

0
545

sudaeoli copy* தொடர்கிறது உண்ணாவிரதம்! 5 கைதிகள் நேற்று மயக்கம்!!
* அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள்! – ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் அவசர கோரிக்கை 

*** தொடர்கிறது உண்ணாவிரதம்! 5 கைதிகள் நேற்று மயக்கம்!! ***
நல்லாட்சி அரசு தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் நான்கு கைதிகள் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு நேற்று மயக்கமடைந்தனர்.

இதனையடுத்து மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலையை நேற்றைய தினம் சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதித்தனர். உடல்நிலை மோசமாகி மயக்கமடைந்திருந்த நான்கு கைதிகளையும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்குமாறு சிறைச்சாலை வைத்தியர்கள், சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடனே கைதிகள் நால்வரையும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சேர்த்தனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டி. பிரபாகரன் (வயது 29), மன்னார் – சிலாவத்துறையைச் சேர்ந்த ஏ.ஞானசீலன் (வயது 32), முழங்காவிலைச் சேர்ந்த எட்வேட் சாம் சிவலிங்கம் (வயது 44), கிளிநொச்சியைச் சேர்ந்த பூபாலசிங்கம் நிஷாந்தன் (வயது 28) ஆகிய கைதிகளே வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையிலும் உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் முல்லைத்தீவு – அம்பலவன்பொக்கணையைச் சேர்ந்த கந்தசாமி விஜயகுமார் (வயது 44) என்ற கைதி நேற்று உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

இவரின் மனைவி 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி புதுமாத்தளன் பகுதியில் வைத்து படையினரின் தாக்குதல் ஒன்றில் பலியானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார, மகஸின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளை நேற்றைய தினமும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கைதிகள் முதல்நாள் திங்கட்கிழமை எழுத்துமூலம் ஜனாதிபதிக்கு வழங்கிய கோரிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும், கைதிகளின் கோரிக்கையை ஜனாதிபதியின் கவனத்துக்குத் தொடர்ந்து கொண்டுசெல்வேன் என்றும் இதன்போது அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனிடம் தமிழ் அரசியல் கைதிகள் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர்.

அந்த மனுவில், தமது விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அந்த மனுவைக் கையளிக்குமாறும் இராஜாங்க அமைச்சரிடம் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமன்னிப்பில் தங்களை விடுதலைசெய்யுமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பித்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள்! – ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் அவசர கோரிக்கை ***

“சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தனிப்பட்ட ரீதியில் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை. பொதுவான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதனால்தான் அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை விடுவித்தது போன்று அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

நல்லாட்சி அரசு தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமையிலிருந்து முன்னெடுத்து வருகின்றனர். இதனால் கைதிகளின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இந்த அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றும், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலைசெய்வது தொடர்பான பொறுப்பு நீதி அமைச்சுக்கு உரியது அல்ல என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ள கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள இந்த வேளையில் நீதி அமைச்சரின் இவ்வாறான கருத்து கைதிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் மனவருத்தத்தைத் தரும் விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தான் அவசரமாக நீதியமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும், இந்தப் பேச்சில் தீர்வு எட்டப்படாவிட்டால் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தி உரிய தீர்வைக் காணவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நேற்று ‘சுடர் ஒளி’யிடம் தெரிவித்தார்.

(‘சுடர் ஒளி’ – 14.10.2015 – புதன்கிழமை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here