
நடுங்கிய நிலம்
சுழலும் பூமி அவ்வப்போது
நடுங்கவும் மறப்பதில்லை !
நேற்றைய மாளிகைகள்
இன்று மண் குவியல்களாய்.
கனவுகளோடு உறங்க
விழிகளை மூடியவர்கள் !
கனவுகள் முடிவதற்குள்
மூடிய விழிகளைத் திறக்கவில்லை .
செவ்வாய் கிரகத்தில்
புழுதி பறப்பதை
படம் பிடிக்கும் விஞ்ஞானிகளுக்கு
அவர்களின் ஆசனத்தின்
பத்து மைல ஆழத்தின்
அதிர்வுகளை உணர முடிவதில்லை
என்பது ஒரு அதிர்ச்சி தான் .
துருக்கி சிரிய எல்லையில்
செயற்கை யுத்த அழிவுகளால்
அடைக்கலமான அகதிகளையும்
இயற்கையும் சேர்ந்து அழித்துவிட்டது.

இடர்பாடுகளின்
துவாரத்திற்கு வெளியே
நீட்டி கை அசைத்த
சிறுமியின் கதறல் சத்தம்
உக்கிரமாய் உலகெங்கும் ஒலிக்கட்டும்.
உக்கிரேனிலும் யுத்தம்
நீங்கி அமைதிப் புறாக்கள் பறக்கட்டும்.
உக்கிரயுத்தம் தூண்டும்
நாடுகளின் செவிகளில்
உரக்க ஒலிக்கட்டும்.
உதவிக்கரமாய் நீளட்டும்.
கவியாக்கம்
வலி பல கண்டுகடந்து வந்தவன்