தோழனாக, சோதரனாக, ஆசானாக திலீபனண்ணா!

0
131

hqdefaultதிலீபனண்ணாவுக்கு தோழர்கள் அதிகம். அவர் யாழ்ப்பாணத்தில் அரசியல் வேலை செய்யும்போது அக்காலகட்டத்தில் அங்கே பணியாற்றிய போராளிகளிடத்தில் அன்புடனும் நட்புடனும் பழகி அனைவர் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்தவர்.

அதுமட்டுமல்ல. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு முகிழத் தொடங்கிய காலத்தில் “சுதந்திரப்பறவைகள்” பெயரிலேயே மகளிரணியின் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்மாவட்டத்தில் அவர்களின் செயற்பாடுகள் வேகமெடுத்திருந்தவேளை, அவர்களுக்குப் பக்கபலமாகவும், உந்துசக்தியாகவுமிருந்து வழிநடத்தியவர் திலீபனண்ணா. ஒரு சோதரனைப்போல அவர்களுக்கு உற்சாகமூட்டி புரட்சிப்பெண்களாக அவர்களை மெருகேற்றி தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப அவர்கள் வளர்ந்து நிற்க ஏதுவாயிருந்தவர் எனலாம்.
திலீபனண்ணா யாழ்மாவட்ட அரசியற்பொறுப்பாளராகக் கடமையேற்று பணிசெய்த அவ்வேளையிற்தான் விடுதலைபுலிகளின் மகளிரின் முதலாவது அணியினர் இந்தியாவிற் தமது பயிற்சியை நிறைவு செய்து தாயகம் திரும்பியிருந்தனர். மிகச்சிறப்பான முறையில் பயிற்சியளிக்கப்பட்டு தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தெளிவு கொண்டவர்களாகவும் காணப்பட்ட அவர்களுக்கு அரசியல் தொடர்பான விளக்கமளித்து மக்களோடான அவர்களின் உறவைப் பலப்படுத்த முன்னின்று உழைத்தவர். சிறப்பு வகுப்புக்கள், ஒன்றுகூடல்கள் பட்டறைகள் போன்றவற்றை ஒழுங்குசெய்து ஒரு “ஆசிரியரைப்” போலவே விளங்கியவர் திலீபனண்ணா. மூத்த பெண் போராளிகளின் வளர்ச்சியில் திலீபனண்ணாவின் பங்கும் நிச்சயமாக உண்டு என்பது நிதர்சனம்.

கலைமகள்
19.09.2015
வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கிவிட்டனர்.

இன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். அவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம்பெற்றிருக்கின்றன.

“திலீபன் உடல்நிலை மோசமாகி வருகிறது. ஆவர் கடைசியாக சிறுநீர் கழித்து 48 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது….. இதே நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சிறுநீர் கழியாவிட்டால், அவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படலாம்” என்று ஒரு பத்திரிகையில் போட்டிருந்தார்கள். வேறு ஒரு பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந்தது.

“திலீபன் சோர்ந்து வருகிறார்… ஒரு மெழுகுவர்த்தியைப்போல் அவர் தமிழினத்துக்காக சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார்…. அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்”.

பத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் சேர்ந்து உள்ளமும் நடுங்கியது…..திலீபன் என்றோர் இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்துக்கு வந்துவிட்டோம் என்பது போன்ற பிரமை எனக்கு ஏற்படுகிறது.

அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாகக் கலந்து வந்து என் காதில் விழுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பிரிவைச் சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பது தான் அது. புலிகளின் சார்பாக திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால் பிரதமர் ராஜீவ் காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசையில் அதைப்பற்றி அறிவதற்காக பிரதித் தலைவர் மாத்தயாவிடம் செல்கிறேன்.

அங்கு அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “எந்த விதமான அழைப்பும் வரவில்லை. வழக்கம் போல சாதாரண விசயங்களைக் கவனிக்கத்தான் திலகர் போயிருக்கிறார்…” என்று மாத்தயா சொன்னதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது. திலகரின் இந்தியப் பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும் ஆனால்…?

விதியே ! உன் கரங்கள் இத்தனை கொடியதா? பம்பரம் போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக் கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவது தான் உன் கோர முடிவா? அப்படி அவர் என்ன குற்றம் செய்துவிட்டார்?

தமிழினத்துக்காகத் தனது தந்தை, சகோதரங்களைப் பிரிந்து வந்தாரே…. அது குற்றமா?

தமிழினத்துக்காகத் தன் வைத்தியப் படிப்பையே உதறி எறிந்தாரே….. அது குற்றமா?

தமிழினத்துக்காக இரவு பகல் பாராமல் மாடாக உழைத்தாரே…… அது குற்றமா?

தமிழினத்துக்காக தன் வயிற்றிலே உள்ள குடலின் 14 அங்குலத்தை வெட்டி எறிந்தாரே…. அது குற்றமா?

தமிழினத்துக்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாலே…. அது குற்றமா?

எது குற்றம்?

வானத்தைக் பார்த்து வாய்விட்டுக் கத்தவேண்டும் போல் இருக்கிறது.
கதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது? இலட்சக் கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே…. யாருக்காக….? திலீபனுக்காக…… தமிழினத்துக்காக…..
அப்படியிருக்க…. அந்தக் கண்ணீரை…. ஏக்கத்தை…. இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே…? ஏன்?

உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா? காந்தி இறந்ததற்காகக் கண்ணீர் வடிக்கும் இந்த உலகம், காந்தீயத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா?
அல்லது கண்டும் காணாமலும் போய்விட்டதா…?

ஏத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறார்.

எண்பத்து மூன்றாம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நவாலிப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்தபோது ஒரு நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொதுமக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு ஜீப்வண்டிகள் அவரின் அருகிலேயே முன்னும் பின்னுமாக வந்து நின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தினுள் சுற்றி வளைத்து விட்டதை உணர்ந்த தலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றார்…. ஆவரின் மதிநுட்பம் மிகத்தீவிரமாக வேலை செய்யத் தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த் துரோகியால் பெறப்பட்ட தகவலை வைத்துக் கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட இராணுவத்தினர் ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.

அவரது கையிலே ஆயுதம் அடங்கிய சிறிய “சூட்கேஸ்” ஒன்று இருந்தது. அவரருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர். ஜீப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேசினால் மின்னல் வேகத்துடன் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்து பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் திலீபன். ஏதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்துவிட்ட இராணுவத்தினர் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர்.

மறுகணம்…. அவர்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக திலீபனை நோக்கி உறுமத் தொடங்கின. அவரது கையொன்றைத் துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு. இரத்தம் சிந்தச் சிந்த மனதைத் திடமாக்கிக் கொண்டு வெகு நேரமாக ஓடிக் கொண்டிருந்தார் திலீபன். இராணுவத்தினரால் அவரைப் பிடிக்க முடியவில்லை. இந்த ஏமாற்றத்தினால் பல பொதுமக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளிவிட்டுச் சென்றனர்.

1986ஆம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புலிகள் – சிறீலங்கா இராணுவ மோதலின் போது, திலீபன் தன் துப்பாக்கியால் பலரைச் சுட்டுத் தள்ளினார். ஆனால் எதிரிகளின் ஓர் குண்டு அவரின் குடலைச் சிதைத்து விட்டது.

யாழ் பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டபோது, அவரின் குடலில் 14 அங்குல நீளத் துண்டைச் சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். ஆந்தப் பெரிய சத்திர சிகிச்சையின்போது அவர் பெருமளவில் இரத்தத்தை இழந்திருந்தார். அந்தக் காயம் மிகவும் சிக்கலாக இருந்ததால் மேலும் இரண்டு சத்திரசிகிச்சைகளைச் செய்த பின்பே அவர் பூரண குணமடைந்தார். சுமார் மூன்று மாதங்களாக அவரின் வாழ்வு வைத்தியசாலையிலே கழிய வேண்டியதாயிற்று.

இப்படி எத்தனையோ துன்பங்களைத் தமிழினத்துக்காக அனுபவித்தவர்தான் திலீபன்!

ஆயுதப் போராட்டத்தினால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை பரிய முடியும் என்பதில் திலீபனுக்கு அசையாத நம்பிக்கை இருந்ததால் அவர் இந்தப் போராட்டத்தில் தானகவே முன்வந்து எத்தனையோ பேர் தடுத்தும் கேட்காமல் குதித்தார்.

இன்று மாலை இந்தியப் சமாதானப் படையினரின் யாழ்கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் பரார் அவர்கள், திலீபனைப் பார்க்க வந்தார். அவர் சனக் கூட்டத்தினூடே வரும்போது பல தாய்மார் அவர் மீது கற்களை வீசத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தடுத்து தகுந்த பாதுகாப்புக் கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச் சென்றனர் விடுதலைப் புலிகள்.

திலீபனின் உடல்நிலை மோசமாகி வருவதால் பொது மக்களும் இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும், வேறு சிலரும் அவரிடம் எடுத்துக் கூறினர். தான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறிவிட்டுச் சென்றார். அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்ற நப்பாசையில் அன்று எம்மிற் சிலர் சற்று நிம்மதியாக இருந்தோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here