நினைவுகள்: வாழ்தலும் சாதலும்

0
185

Zபத்துவயதுக் கிட்டினனுக்கு பசித்தது. ஹற்றனில் கடைசியாக அவனுக்குச் சொந்தமாக மிஞ்சியிருந்த தாயையும் நோய் கொண்டு போய் ஒரு கிழமையாகிவிட்டிருந்தது. அயலவர்கள் அவ்வப்போது கிட்டினனுக்கு கொடுத்து வந்த உணவும் நின்று போய்விட்டது. வீட்டிலும் எதுவுமில்லை. ஆனாலும் பசிக்கு இதெல்லாம் தெரியவில்லை. அவன் உயிரை எடுப்பது போல பசியின் வேதனை பெரிதாகிக் கொண்டே இருந்தது.

” வவுனியாவுக்கு போனால் காசு சம்பாதிக்கலாம்” யாரோ இலவச ஆலோசனை கொடுக்க , அதை நம்பி ஒரு மாதிரி வவுனியா பஸ்ஸில் ஏறிவிட்டான். கையில் ஒரு சதம் கூட இல்லை. பஸ்காரர் பரிதாபப்பட்டு , காசு வாங்காமலே அவனை வவுனியாவில் இறக்கிவிட்டனர். பசியோடு வேலை தேடினான் கிட்டினன். ஒரு சாப்பாட்டுக் கடை முதலாளியின் கருணைக்கண் பார்வை கிட்டினன் மீது பட, அவனும் ஒரு உழைப்பாளியானான் பத்து வயதிலேயே.தனிமரமாகி நின்ற கிட்டினனுக்கு, தனக்கென்று உறவுகள் இல்லாத ஏக்கம். வேலை, வேலை,வேலை. வேலையில் முழுதுமாய் நேரத்தை தொலைத்து, தனிமையை மறக்க முயன்றான். வேலை செய்யும் இடத்தில் நண்பர்கள் கிடைத்தார்கள். கையில் கொஞ்சம் காசும் சேர்ந்திருந்தது. தனிமைக்கு விடை கொடுக்க தருணம் வந்தது.

கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் ருக்மணியை கிட்டினன் ஒரு சுபயோக தினத்தில் மனைவியாக்கிக் கொண்டான். தனிமரம் தோப்பானது. ஆனந்த வாழ்வின் விளைவாக நான்கு பிள்ளைகள் ” எனக்கு நாலும் ஆம்புளைப் பிள்ளையள்” என்று பெருமையோடு சொல்லிக் கொள்வான் கிட்டினன். பிள்ளைகளுக்கும் தாய் தகப்பன் மீது பிரியம் அதிகம். கிட்டினன் சோற்றைக் குழைத்து ஊட்டி விட்டால் தான் அவர்கள் சாப்பிடுவார்கள். அதற்காக சாப்பிடாமல் கிட்டினன்வேலையால் வரும்வரை காத்திருப்பார்கள். இதற்காக அநேகமாக கிட்டினன் மத்தியானங்களில் வேலைத்தளத்திலிருந்து வந்து பிள்ளைகளுக்கு சோறூட்டிச் செல்வதுண்டு.பிள்ளைகள் தம்மைப்போல வறுமைக்குள் உழலக் கூடாது என்பதில் கிட்டினனும் ருக்மணியும் உறுதியாக இருந்தார்கள். கிட்டினன் மேசன் வேலைக்கோ கூலி வேலைக்கோ செல்ல, ருக்மணி வயல் வேலைக்கு போவாள். அளவான காசு. அவனுக்கென்று ஒரு குடும்பம். ஒரு வீடு. இதவிட வேறென்ன வேண்டும்?

…………………………………………………….

யாரடித்து நீயழுதாய்?
……………………

வெறித்த பார்வை.
வலியின் ரேகைகளை நிரந்தரமாக்கிக் கொண்ட முகம்.
பார்க்கும் வலுவற்றுப் போன வலக்கண்.
இடைவிடாத தலையிடி.
நெஞ்சுவலி.
ஒரு சாரம். ஒரு சேர்ட்.
கையில் ஒரு பொலித்தீன் பை.
பொக்கற்றில் செல்போன்.
– இவைதான் கிட்டினனுக்கு எஞ்சிக் கிடக்கும் சொத்துக்கள். அடிக்கடி கலங்கும் கண்களில் வழிந்து விடத் துடிக்கும்

கண்ணீரை அடக்கிக் கொண்டு, தடுமாறியபடி கொட்டில் ஒன்றைப் போட கிட்டினன் எழுகிறார். பெரும் காட்டுமரத்தையே தனியாளாகத் தூக்கிய கிட்டினனுக்கு சிறு தடியைத் தூக்கக் கூட முடியவில்லை. களைப்பும், நெஞ்சுவலியும் அவரை அப்படியே அமுக்கி கீழே இருத்துகின்றன. பேச்சுத்துணைக்கு கூட பக்கத்தில் ஆள்களில்லை. அயலவர்கள் இருந்தாலும் கிட்டினனை அவர்கள் கண்டுகொள்வதில்லை. கிட்டினனுக்கு இப்போதுள்ள ஒரே துணை அவர் மார்போடு அணைத்தபடி கொண்டு திரியும் பொலித்தீன் பையும், அதற்குள் இருக்கும் கடதாசி ஆவணங்களும்தான். காட்டுத்தடியில் தலைசாய்த்தபடி கிட்டினன் பொலித்தீன் பையைத் திறந்து, சில ஆவணங்களை எடுக்கிறார்.

அவர் அந்த ஆவணங்களைப் பார்க்க முதலே கண்ணீர் ஓடிச் சென்று அந்த காகிதங்களை கட்டியணைத்துக் கொள்கிறது.
என்னாயிற்று கிட்டினனுக்கு? எங்கே ருக்மணி? அவரின் ‘நாலு ஆம்பிளைப் பிள்ளையளும்’ எங்கே?

விம்மி வெடிக்கும் குரலில் மிக மெல்லிய தொனியோடு- தனக்குத் தானே பேசுவது போல சொல்லத் தொடங்கினார் கிட்டினன். அவர் சொல்லிக் கொண்டே செல்ல, கால்களுக்கு கீழே கண்ணீர் ஊற்றெடுக்கத் தொடங்கியது. ஒரு
கட்டத்தில் கண்ணீரூற்று சுழலாக மாறி துயரின் எல்லாத் திசைகளுக்கும் இழுத்து செல்லத் தொடங்கியது.

…………………

சதைத்துண்டங்களின் நினைவுகள்
…………………………….

” எல்லாரும் சந்தோசமாத்தான் இருந்தம். மூத்தவனுக்கு பதினைஞ்சு வயது. புண்ணியமூர்த்தி எண்டு டாப்பு பேர்.ஆனா வீட்டுப் பேர் சாந்தன். கடைசிக்கு தமிழ்மாறன் எண்டு பேர் வைச்சன். அவனுக்கு மூண்டு வயசுதான். இடையில ……………, ……………………., . அவங்கட வயசு இப்ப சரியா நினைவுக்கு வரேலை. ஒருத்தனுக்கு பத்தும் மற்றவனுக்கு 5 வயசும் இருக்கும். எங்களில நல்ல விருப்பம் அவங்களுக்கு. நான் சோறு தீத்தாட்டி அண்டைக்கு முழுக்க சாப்பிடவே மாட்டாங்கள்.
இப்பிடியெல்லாம் இருக்கேக்க தான் சண்டை தொடங்கிட்டு. நாலு பிள்ளையளையும் எப்படியாவது காப்பத்தணுமே.

சொந்தமா வீடு போட்டிருந்த காணிய வித்திட்டு, வவுனியாக்கு போக நினைச்சம். காணியும் வித்தாச்சு. கிளிநொச்சிக்கு கிட்ட ஆமியும் வந்திட்டாங்க. அதால நாங்க காணி வித்த காசோட முள்ளிவாய்க்காலுக்கு போய்ட்டம். அங்க வலைஞர் மடத்தில பெரிய சேர்ச்சுக்கு கிட்ட சீலையால கொட்டில் போட்டு, பக்கத்தில பங்கர் வெட்டி இருந்தம். எப்ப பாத்தாலும் ஒரே குண்டுச் சத்தம். கொஞ்ச நாள் போக அந்தச் சத்தம் பழகிட்டு.
அங்க தொழில் இல்லை. காணி வித்த காசை வைச்சுதான் சீவிக்கணும். சாமான் சட்டு ஒண்டுமில்லை. பருப்பும் சோறும்தான் ஒவ்வொரு நாளும். சின்னப்புள்ளையள் எவ்வளவு நாள் தான் பருப்போட சாப்பிடுங்கள்? நான் சோறு குழைச்சு தீத்தேக்க, அவங்கள் ‘பருப்புக் கறியெண்டா வேண்டாம்’ எண்டு அழுவாங்கள்.

இங்க இருந்தா கஷ்டம் எண்டு ஆமிக்கட்டுப்பாட்டுக்க போக நினைப்பம். ஆனா போற வழியில குண்டு பட்டு, பிள்ளையளுக்கு ஏதும் நடந்திடுமோ எண்ட பயத்தில ‘ நாளைக்கு போவம்’ எண்டு ஒவ்வொரு நாளும் தள்ளிப் போட்டம்.
ஒருநாள் ருக்குமணி சொன்னா, ‘ பிள்ளைகள் பாவம். கரைக்கு போய் மீன் வாங்கியாங்கோ’ எண்டு.
பிள்ளைகளுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடு குடுக்க எனக்கும் ஆசைதானே. கரைக்கு போனன். அரைக்கிலோ மீன் ஆயிரம் ரூபா. புள்ளைகள் சந்தோசமா சாப்பிடப் போறாங்கள் எண்ட நினைப்பில வந்து கொண்டிருந்தன். அப்ப….situation_report_29th_april_09_late_tamilnational_03
எங்கட கொட்டில் பக்கமா நிறையச் சனம் நிண்டிருந்தாங்கள். பதறிக் கொண்டு ஓடிப்போனன்.அங்க….எங்கட கொட்டில் எரிஞ்சு கொண்டிருந்தது. நான் மனுசியையும் புள்ளையளையும் தேடினன். காணேலை. பக்கத்தில எங்காவது இருப்பாங்க எண்டு பாத்தன்.

அப்பதான் எங்கட பங்கருக்கு பக்கத்தில …..துண்டு துண்டா….கை, கால் எல்லாம் வேற வேறையா…..ஐயோ……………!
( கிட்டினனால் தொடர முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. குனிந்து கொள்கிறார். தரையில் ‘பொத்,பொத்’ என்று கண்ணீர்த் துளிகள்.அந்தக் கண்ணீரைத் துடைக்கவோ, ” அழாதையுங்கோ” என்று சொல்லவோ முடியாதவனாகி, கூனிக் குறுகி நின்றோம். கொஞ்சநேரத்துக்குப் பின்னர் சொல்லத் தொடங்கினார்.)
நாலு புள்ளைகள், மனுசி. ஒருத்தரும் மிஞ்சேலை. செல் அடிக்கிறாங்கள் எண்டு பங்கருக்க போயிருக்கிறாங்கள். ஆனா குண்டு நேரா எங்கட பங்கருக்க விழுந்திருக்கு. அங்க நிண்டவ என்னோட சேர்ந்து சிதறின உடம்புகளை பொறுக்கித் தந்திச்சினம். ஒரு ‘பொடியைக்’ கூட முழுசா எடுக்க முடியேலை. ஒரு குண்டு என்ர பிள்ளையள், மனுசி, என்ர சந்தோசம் எல்லாத்தையும் சிதற வைச்சிட்டுது.
tamils
முத்து முத்தா வளத்த நாலு பிள்ளையளையும் ஒரேயடியா பறி குடுத்திட்டன். ஒவ்வொண்டா பொறுக்கின சதைத் துண்டுகளை உரப்பையில போட்டு கட்டி, நாங்கள் இருந்த பங்கருக்க போட்டு மூடிட்டன். இப்ப என்ர புள்ளைகளின்ர பாக்க ஒரு போட்டோ கூட என்னட்ட இல்லை.அதுதான் இந்தக் கடுதாசியளைப் (மரணச்சான்றிதழ்) பாக்கிறான். எனக்கு தமிழ் எழுத வாசிக்கத் தெரியாது. ஆனாலும் இந்தக் கடுதாசியளில என்ர புள்ளைகளின்ர பேர் இருக்கும் தானே. அந்த நினைப்பில பாப்பன்.

இப்ப சாப்பிட மனம் வாறேலை. ஒவ்வொருக்க சாப்பாட்டில் கை வைக்கேக்கையும் ” அப்பா, எனக்கு ஒரு வாய்” எண்டு வாயைத் திறந்தபடி இருக்கிற புள்ளையளின்ர நினைப்புத்தான் வரும். அதால சாப்பிடுறது குறைவு.தேத்தண்ணிதான் கூட.

………………….

நீள நினைதல்
……………….

ஒரேயொரு எறிகணையின் கோரப்பசிக்கு தன் நான்கு பிள்ளைகளையும்(புண்ணியமூர்த்தி,ஆனந்தக்குமார்,நிரூபன், தமிழ்மாறன்), மனைவியையும் 06.03.2009 அன்று பறிகொடுத்து விட்டு மீண்டும் தனிமைக்குள் தள்ளப்பட்டுவிட்டார் 48
வயதான கிட்டினன். குடும்பத்தவர்களின் உடல்களின் சதைத் துண்டங்களை ஒவ்வொன்றாக தேடியெடுத்து, 5 பேரின்
சடலங்களையும்( ஒரு உரப்பைக்குள் கூட்டிக் கட்டப்பட்ட சதைத்துண்டங்களே கிட்டினனின் குடும்பத்தாரின் சடலங்கள்) பங்கருக்குள் புதைத்தவருக்கு எதிரில் தெரிந்தது இருளே.

இனி குண்டுகளுக்கும்,துப்பாக்கிச் சன்னங்களுக்கும் என்ன பயம்? எல்லாமே போய்விட்டதே.பிள்ளைகளையும் மனைவியையும் புதைத்த இடத்தில் இருக்க அவருக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது.கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். குண்டுகள் அருகில் வீழ்ந்து வெடித்தன. சன்னங்கள் உரசியபடி சென்றன. கிட்டினன் அவை தன் உயிரைக் குடித்தால் நல்லது என்ற எண்ணத்தில் குண்டுகள் விழும் பக்கமாகவே நடந்தார். ஆனால் அவைக்கு கிட்டினனின் உயிர் கசந்திருக்க வேண்டும். கிட்ட விழுந்து வெடித்தனவே தவிர உயிரைப் பறிக்கவில்லை. குண்டுகளால் எழுந்த மணல் துணிக்கைகள் பேரலையாக கிட்டினனின் கண்ணைத் தாக்கின. வலக்கண்ணின் மெல்ல மெல்ல மணல் மோதுகையால் பார்வையை இழக்கத் தொடங்கியது.

நலன்புரி நிலைய வாழ்வுக்கு பின்னர் வெளியே வந்த கிட்டினனுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை.அவருக்குத்தான் யாருமே இல்லையே. ஆனாலும் பிள்ளைகளோடு சந்தோசமாக வாழ்ந்த கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் போக முடிவெடுத்தார். தன் வாழ்வினை அழகாக்கிய மனைவி, பிள்ளைகளின் நினைப்போடு கிருஷ்ணபுரத்தில் அலையத் தொடங்கினார்.

தெரிந்தவர்களின் கொட்டில் ஒன்று கிட்டினனின் வசிப்பிடமானது. அந்தக் கொட்டில் முழுதும் வியாபித்திருந்த தனிமையை , பிள்ளைகளின் நினைப்பால் கிட்டினன் விரட்ட முயன்றார். எந்த நேரமும் , சதைத் துண்டங்களாகச் சிதறிக் கிடந்த பிள்ளைகளை நினைவால் சுமக்க, நோய்கள் அவரில் நிரந்தரமாகக் குடி புகுந்தன.6 மாதங்கள் கிட்டினன் நினைவிழந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமளவுக்கு நோய் உக்கிரமடைந்திருந்தது. உடல் உறுதி குலைந்து நடைப்பிணமாக மாறிவிட்ட கிட்டினனுக்கு கிருஷ்ணபுரத்தை தவிர வேறெந்த ஊரும் நினைவுக்கு வரவில்லை.மீண்டும் கிருஷ்ணபுரத்தில் கிட்டினன்.

உடல் எந்த வேலைக்கும் செல்லமுடியாமல் தடை போட்டது. தனியாள் என்பதால் வீட்டுத் திட்டமும் இல்லை. கொட்டிலே கதி. கையிலும் காசில்லை. சாப்பாட்டுக் கோப்பை கூட அவரிடம் இருக்கவில்லை. யாராவது வலிய வந்து கொடுக்கும் சாப்பாட்டுதான் அவரின் உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது. அந்தப்பகுதி இராணுவத்தினர் கிட்டினனின் கதையறிந்து , அவ்வப்போது சாப்பாட்டுப் பார்சல் கொடுப்பார்கள்.

தங்களின் எறிகணையால் ஒட்டுமொத்தக் குடும்பத்தையே கிட்டினன் இழந்த கதை அவர்களுக்கு குற்ற உணர்வை உண்டாக்கியிருக்க வேண்டும். ஒருநாள் சிப்பாயொருவன் அவரிடம் வந்து செல்போன் ஒன்றைக் கொடுத்துள்ளான்.
” நான் வேறு முகாம் போகிறேன். இதில் என் நம்பர் உள்ளது. உங்களுக்கு சாப்பாடு வேண்டுமென்றால் கோல் பண்ணுங்கள். நான் இங்குள்ள சக சிப்பாய்கள் மூலம் ஒழுங்கு செய்கிறேன்” என்று சொல்லிச் சென்றிருக்கிறான். ஆனால் கிட்டினன் தானாக யாரிடமும் சாப்பாடு கேட்டதில்லை. இரக்கப்பட்டவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வார். அவரையும் மிஞ்சி பசியெடுத்தால் தூரத்தே இருக்கும் சாப்பாட்டுக் கடைக்குச் செல்வார். கடை முதலாளிக்கு கிட்டினனின் சுமக்கும் துயர் தெரியும். காசு வாங்காமல் தேநீர் கொடுப்பார்.

போரில் உயிரிழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கான இழப்பீட்டைப் பெற கிட்டினன் கடந்த சில வருடங்களாக அலைந்தும் இன்னும் அது கிடைத்தபாடாக இல்லை. ” இவ்வளவு நாளும் அங்கால ஒரு வீட்டுக்காரரின் கொட்டிலில இருந்தன். இப்ப ஒரு காணியில கொட்டில் போட இன்னொரு ஆள் ஓமெண்டு சொல்லிட்டார். எங்கட றோட்டால மிதிவெடி எடுக்கிற ஆக்கள் போய் வாறவங்கள். அவங்களிட்ட கொட்டில் கட்ட காட்டுத்தடி தாறீங்களோ எண்டு கேட்டன். அவங்களும் பாவத்துக்கிரஞ்சி கொண்டுவந்து தந்தவை. கிடுகும் பக்கத்தில ஒரு வீட்டில கேக்க தாறனெண்டவை. இப்ப ஒரு கொட்டில் போடவெளிக்கிட்டன். ஆனா உடம்பு ஏலுதில்லை. தலை சுத்தி, நெஞ்சுவலி மாதிரி வந்திட்டு. எண்டாலும் மெல்ல மெல்ல
கட்டிப் போடுவன்” என்று சொல்லும் கிட்டினனிடம்,” ஏன் இப்பிடித் தனிய இருந்து கஷ்டப்படுறியள்? ஏதும் முதியோர் இல்லத்தில போய் இருக்கலாமே?” என்று கேட்டோம்.

பதில் ஒரு பெருமூச்சோடு வந்தது.” நாலு பிள்ளையளை வளத்து ஆளாக்கின என்னை இன்னொராள் பராமரிக்கிறதை நினைச்சும் பாக்க ஏலாது. எனக்கு அப்படி இருக்க பிடிக்காது. அதை விட இங்க இருந்த வயித்துக்கு சோறில்லாட்டியும், உடுக்க துணிமணி இல்லாட்டியும், என்ர புள்ளையள் ஓடித் திரிஞ்ச இடங்கள், படிச்ச பள்ளிக்குடம் இதுகளை பாத்து கொஞ்சம் மனதை ஆத்தாலாம்”

சொல்லிவிட்டு , கிளிநொச்சி வைத்தியசாலைப் பக்கமாக நடக்கத் தொடங்குகிறார் கிட்டினன். அவர் பின்னே நிழலாகத் தொடர்கின்றன அவரின் பிள்ளைகள் கூண்டோடு சதைத்துண்டுகளான கணமும், அதே பிள்ளைகள் அவரிடம் சோறு கேட்டுக் கொஞ்சி மகிழ்ந்த நாள்களும்.

நினைவே பிணி.
நினைவே மருந்து.

– ஔண்யன்

(நன்றி – உதயன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here