
அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தன.

நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறை ஆகியவற்றால்
மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்த நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி,பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில்
பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
காலி முகத்திடலில் 20 நாட்களைக் கடந்து தொடர் போராட்டம் முனனெடுக்கப்படும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,
தொழிற்சங்கங்களும் ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
கடந்த 28ஆம் திகதி அரசாங்கத்தை பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
தமது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீண்டும் ஹர்த்தாலை அனுஸ்டித்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படும் நிலையில், பாதுகாப்பு நடடிக்கையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இ.போ.ச பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
அத்தியாவசிய சேவைகள் எதுவித இடையூறுகளுமின்றி முன்னெடுக்கப்படுகின்றன.