இலங்கை இனவாதத்தைக் கைவிட்டாலேயே மீண்டெழ முடியும்!

0
84

இனவாதத்தை கைவிட்டு இலங்கை பல்தேசங்கள் கொண்ட நாடு என்பதனை ஏற்றுக் கொண்டு நாட்டில் கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டால் மட்டுமே இந்த நாடு மீண்டெழ முடியும் எனக் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் (22-03-2022) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச்சட்ட திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் முழுவிபரம் வருமாறு.

இங்கு பிரேரிக்கப்படும் சட்ட மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்தில் எவ்வகையான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்தெரிவித்த கருத்துகளிலிருந்து எனது உரையை ஆரம்பிக்கிறேன்.

இரண்டு முக்கிய விடயங்கள் பற்றி அவர் குறிப்பிட்டார்.
ஒன்று
அன்றாடம் வழக்குகள் நடத்தப்படும்
மற்றையது
கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலைகளுக்கும், தடுப்புக்காவல் நிலையங்களுக்கும் நீதிபதிகள் நேரிற் சென்று பார்வையிடுதல் பற்றியது.

நீதிபதிகள் நேரில் சென்றுபார்வையிடும்போது, கைதிகள் தாக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் சட்ட மருத்துவ அதிகாரிகளை பரிசீலனை செய்யுமாறு கோரமுடியும். தாக்குதலுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டால் மேற்கொண்டு செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

இவ்விரு திருத்தங்களினாலும் காத்திரமான முன்னேற்றம் ஏற்படும் எனவும், கைது செய்யப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்படும் காலம் கணிசமாகக் குறைக்கப்படும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதனையும் ஏதொவொரு வகையில் தடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

இவ்விடயத்தை முழுமையாகப் பரிசீலனை செய்யும்போது இம்மாற்றங்கள் உண்மையில் நடைமுறைச்சாத்தியமானவையா எனப் பார்க்கப்பட வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பார்ப்போம். உதாரணத்திற்கு, அடிப்படை மனிதவுரிமை மீறல் வழக்குகள் ஒரு மாதகாலத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் அவ்வழக்குகள் ஒரு வருடகாலத்திற்குள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை. குறித்த வழக்கு முழு நாட்டினதும் கவனத்திற்கு உள்ளானதாக அமைந்திராதவிடத்து இவ் வழக்குகள் பல ஆண்டுகணக்காக இழுபட்டு செல்கின்றன.

இப்போதுள்ள சட்டங்களின்படி நீதிபதிகள் காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட முடியும் ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை. இவ்வாறு நடந்துகொள்வதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அவ்வாறு நடந்துகொண்டாற்கூட, இப்போது நடைமுறையில் உள்ள முறைமை நேர்மையானதாக உள்ளாதா என்பதனையும் பார்க்கவேண்டும்.

சிறிலங்கா நீதித்துறையின் நேர்மைத்தன்மை குறித்து ஐநா மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் தெரிவித்த கருத்துகளை இங்கு மேற்கோள்காட்ட விரும்புகிறேன்.

சிறிலஙகாவின் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவை ஒரு விசாரணையினை நடத்திவெளியிட்ட அறிக்கையினை மனித உரிமை பேர்வையில் சமர்ப்பித்த அதன் முன்னாள் உயர் ஸ்தானிகர் இளவரசர் செயிட், ஒரு ஊடகச்சந்திப்பில் சிறிலங்கா நீதித்துறை மற்றும் உள்நாட்டு குற்றவியல் விசாரணைப்பொறிமுறை ஊழல்கள் நிரம்பியதாக இருப்பதாக கூறி அதை நிராகரித்திருந்தார்.

இனமுரண்பாடுகளினால் உள்நாட்டு நீதிப்பொறிமுறை, சட்டம் ஒழுங்கு என்பவை இனபாகுபாடு கொண்டதாகவும், பாரியளவில் ஊழல்கள் நிறைந்தாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். நீதித்துறையில் இனத்துவ அடிப்படையில் சார்பாக நடந்து கொள்ளுதல் ஊழல்கள் நிரம்பியதாகவும் இருப்பதால் உள்ளகப் பொறிமுறை நம்பகத்தன்மையுடையதாக இருக்காது எனவும்குறிப்பிட்டார். இவ்வாறான காரணங்களால் அவர் இரு கலப்பு நீதிமன்ற விசாரணையினை பிரேரித்து இருந்தார்.

இங்கு இந்த பயங்கரவாத தடைசட்டம் மற்றும் அது குறித்த திருத்தங்கள் குறித்து பேசும் போது பலரும் தேசியபாதுகாப்பு குறித்து பேசியிருந்தனர். இங்கு பேசும்போது தேசிய பாதுகாப்பு என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குறிப்பிட்டிருனர்.

  • உண்மையில் தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருதுவது எதனை ?
    தேசிய பாதுகாப்பு என்பது , சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா குறிக்கிறது ?
  • இங்கு நாடு என நீங்கள் கருதுவது ஒரு இனத்தை மட்டும் தான் குறிக்கிறதா? அல்லது இந்த நாட்டின்அனைத்து குடிமக்களையும் குறிக்கின்றதா?
  • அனைத்து இன குடிமக்களையும் உள்ளீர்த்து அவர்களுக்குமான பாதுகாப்பு என கருதினால், அது ஒருபோதும் பெரும்பான்மைவாத (அயதழசவையசயைn) கருத்தியலில் இருந்து உருவாக முடியாது .
  • உதாரணத்துக்கு இந்த அவையில் பெரும்பான்மையானவர்கள் ஒன்றை கேட்கிறார்கள் என்பதற்காக அது முழுநாட்டுக்கும் உரித்தானது என கருதவே முடியாது. துரதிர்ஷடவசமாக இங்கு இருக்கின்ற எதிர்க்கட்சியினரும் அதே எண்ணப்பாங்கிலேயே கருத்துரைத்திருக்கிறார்கள்.
  • இங்கு இந்த நாடு என கூறும் போது, இங்கு பல்லின அடையாளங்களை வெளிப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எம்மை பொறுத்தவரை இந்த நாடு ஆகக்குறைந்தது இரு தேசங்களை கொண்ட பல்தேச நாடாகும். எனவே , ஒரு நாட்டின் கருத்து என வரும்போது , ஒவ்வொரு இனத்தினரினதும் எண்ணங்களும் எதிர்ப்பர்ப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

இந்த நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அந்த போராட்டம் ஏன் நடந்தது என பாருங்கள். இந்த அரசு, தொடர்ச்சியாக ஒரு இனக்குழுமத்தை மட்டும் கருத்தில் கொண்டு மற்றைய சமூகத்தை ஏற்றிக்கொள்ள மறுத்து ஒதுக்கு ஒடுக்கியதாலேயே இங்கு போராட்டம் உருவானது.

  • இந்த நாட்டை நாம் எப்படி உருவாக்கிபார்க்க விரும்புகிறோம் என்பதை வடக்கு கிழக்கின் மக்கள், ஜனநாயக ஆணையாக தொடர்ச்சியாகவும் மிக தெளிவாகவும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
    அவை ஆயுதத்துக்கோ பிரிவினைக்கோ ஆன கோரிக்கைகளாக இருக்கவில்லை. மாறாக , பிரிவினைக்கும் ஆயுதத்துக்கும் எதிரான ஆணைகளாகவே முன்பு இருந்திருந்தது. இந்த அவைக்கு வந்திருந்த தமிழ் பிரதிநிதிகள், வன்முறையையும் பிரிவினையையும் நிராகரித்தேகுரல்கொடுத்திருந்தார்கள்.

அவர்கள் கேட்டதெல்லாம்,
‘ எமது விருப்புகளையும் செவிமடுங்கள், (எம்மையும் இந்த நாட்டின் சம பிரஜைகளாக மதித்து) எம்மையும்உள்வாங்குங்கள் என்பதே ஆகும்.
ஆனால் அங்குதான் நீங்கள் தவறிழைத்தீர்கள்.
அன்று மட்டும் அல்ல, இன்றுவரைக்கும் அதே தவறையே தொடர்ந்தும் இழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த நாடு பல தேசங்கள் உடைய நாடென்றும் இங்கு எமக்கு சமஷ்டி முறையான ஆட்சியே தேவை எனவும் மிகதெளிவானதும் மிக உறுதியானதுமான ஜனநாயக ஆணையை மீளவும் மீளவும் எமது மக்கள் அளித்துவருகின்றபோதும் ( உண்மையில் இந்த அரசாங்கள் மக்களிடம் பெற்ற ஆணையை விட எமது மக்கள் அளித்த ஆணைஜன்நாயக ரீதியில் வலுவானது )
அதை மீளவும் மீளவும் நீங்கள் கருத்திலெடுக்காது நிராகக்ரிக்கின்ற போது, எமது பிரதிநிதிகள் இங்கு வந்து அந்த ஆணையை பற்றி பேசுவது முட்டுச்சுவரில் தலையை மோதுவதாகவே இருக்கின்ற போது, எம்மை ஒதுக்கி நடப்பதையே தொடர்ந்தும் உங்கள் செல்நெறியாக கொண்டிருக்கின்ற போது எமது மக்கள்வேறு என்ன செய்ய முடியும்?

எமது தாய்நிலத்தில் இருக்கும் மக்கள் தொடர்ச்சியாக உரிமை மறுக்கப்ப்டுகின்ற போது, அவர்களது தாய்நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்ப்டுகின்ற போது, அவர்களது சமய வழிபாட்டிடங்கள் அபகரிக்கப்படுகின்ற போது, காலம் காலமாக உழுது பயிரிட்ட நிலத்தில் இருந்து போரினால் வெளியேறி இப்போது மீள வரும்போது, அவை காட்டு நிலமெனவும் அதில் பயிரிடமுடியாதெனவும் மறுதலித்து, அதே நேரம் வேறு பிரதேசத்தில் இருந்து வருகின்ற ஏனைய இனத்தவருக்கு நிலத்தில் வளர்ந்திருக்கும் மரங்களை வெட்டி உழுது பயிரிட அனுமதிக்கும் போது அந்த மக்கள் வேறு என்னதான் செய்ய முடியும்?? ஆனால் இது தான் இன்றும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

பிரதமர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது பாரிய எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. அங்கு வன்முறையற்ற வகையில் எதிர்ப்பு காட்டப்பட்டது. உங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வகையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் நிர்மூலமாக்கப்பட்டபோதிலும், அவர்களது உறவினர்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளபோதிலும் அவர்கள் தங்கள் எதிர்ப்பினைக் காட்டத்தவறவில்லை. அவர்கள் ஜனநாயக முறையில், வன்முறையற்ற வகையில் தமது எதிர்ப்பினைபதிவு செய்துள்ளார்கள். அவர்கள் எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றுஎதிர்பார்க்கிறீர்கள்?

  • இந்த அரசு, இந்த நாடு ஒரு முழுமையான கட்டமைப்பு மாற்றத்துக்கு உள்படுவதன் மூலம் தான், இந்த நாடுமீளௌ முடியும்.
  • இந்த நாடு இன்று எதிர்நோக்கியிருக்கிற கடுமையான நெருக்கடிகளில் இருந்து மீளெழ வேண்டுமாயின் உங்கள் செல்நெறிகளையும் வழிமுறைகளையும் ஒருமுறை மீள சிந்தியுங்கள், ஒரு கட்டமைப்பு மாற்றத்துக்குத் தயாராகுங்கள். அனைவரையும் சமமாக இணைத்து ஒன்று பட்டு வாழ கூடிய ஒரு கட்டமைப்பைஉருவாக்குங்கள்
  • இந்த நாட்டின் வருமானத்தை விட, எமது புலம்பெயர் தமிழர்கள் அனைவரினதும் உழைப்பு வருமானமும் பலமடங்கு பெரியது.
  • நீங்கள் தமிழர்களை அங்கீகரித்து , தமிழர்கள் தனியான தேசம் என்பதை அங்கீகரித்து ஒரு கட்டமைப்புமாற்றத்துக்கு தயாரானால், எமது மக்களின் முதலீடுகள் இந்த நாட்டை பொருளாதார ரீதியில் மீட்டெடுக்கும்
  • இதை உணர்ந்து செயல்பட தயாரகுங்கள்.
  • இந்த நாடு ஒரு தனி இனத்துக்கானது அல்ல,
  • இந்த நாட்டின் பன்மைத்துவத்த்தை மதித்து ஏற்றுக்கொள்ளுங்கள், அதில் பெருமையடையுங்கள், அதன் மூலமே நாம், இணைந்து வாழ முடியும்
  • என் சக சிங்கள மக்களே, உங்கள் தலைவர்கள் , உங்களுக்கு பொய்களையே சொல்லி வந்திருக்கிறார்கள் , இன்னமும் அதையே செய்கிறார்க்ள். குறிப்பாக தமிழர்கள் பற்றி உங்களுக்கு பொய்களையே ஊட்டிவந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
  • இந்த நாடு வங்குரோத்தாக போவதற்கு உங்கள் தலைவர்களின் இந்த போக்கே காரணம் என்பதை புரிந்துகொள்ளுங்கள், அனைவரையும் இணைத்து கௌரவமாக சம உரிமை கொடுத்து வாழக்கூடிய கட்டமைப்பைஉருவாக்குவதே இந்த நாடு முன்னே செல்வதற்கு இருக்கின்ற ஒரே வழி என்பதை புரிந்து கொள்ளுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here