
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்
பொறுப்பை அடுத்த ஆறு மாதங்களுக்கு
பிரான்ஸ் பொறுப்பேற்பதைக் குறிக்கும்
முகமாக பாரிஸில் உள்ள வெற்றி வளை
வில் (Arc de Triomphe) ஒன்றியத்தின் பிரமாண்டமான கொடி ஒன்று கடந்த வெள்ளியன்று பறக்கவிடப்பட்டது.
ஈபிள் கோபுரம் உட்பட நகரின் முக்கிய
கட்டடங்கள் ஐரோப்பிய வர்ணத்தில்
ஒளியூட்டப்பட்டும் இருந்தன.
பாரிஸ் நகரில் ஒரு டசினுக்கு மேற்பட்ட
வீதிகள் ஒன்றாகச் சந்திக்கின்ற முக்கிய
இடத்தில் போர் வீரர்களைக் குறிக்கின்ற
நினைவுச் சின்னமாகிய வெற்றி வளைவு (Arc de Triomphe) அமைந்திருக்கிறது.
வழக்கமாக நாட்டின் தேசியக் கொடி பறக்
கின்ற வளைவில் ஐரோப்பிய ஒன்றியத்
தின் கொடி கட்டப்பட்டதற்கு எதிராகத்
தீவிர வலதுசாரிக் கட்சிகள் போர்க்கொடி
தூக்கியதால் அரசியல் மட்டத்தில் அது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறி
யது.
முக்கிய நினைவுச் சின்னமாகிய வெற்றி
வளைவில் தேசியக்கொடி அகற்றப்பட்
டமை “நாட்டின் அடையாளங்கள் மீது நடத்
தப்பட்ட ஒரு தாக்குதல் ” என்று தீவிர வலதுசாரித் தலைவி மரின் லு பென்
கடுமையாகக் கண்டித்துப் பதிவு ஒன்றை
வெளியிட்டார். அதற்கு மறுப்புத் தெரி
வித்த ஐரோப்பிய விவகார அமைச்சர்,
தேசியக் கொடி அகற்றப்பட்டமை “தற்காலிகமானது” என்று விளக்கமளித்
தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்ற
முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளராகிய
மரின் லூ பென், கொடி விவகாரத்தில்
சட்ட நடவடிக்கையை நாடி அதனை
நாட்டின் நிர்வாக விடயங்களைக் கையா
ளுகின்ற உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப் போவதாக அறிவித்
தார்.
மற்றொரு வலதுசாரி வேட்பாளராகிய
வலெரி பெக்ரெஸ் அம்மையாரும் அரசின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு
வெளியிட்டார். “ஐரோப்பாவுக்குத்
தலைமை ஏற்பது சரி.அதற்காகப் பிரான்
ஸின் அடையாளங்கள் அழிக்கப்படக்
கூடாது” என்று அவர் ருவீற்றர் பதிவில்
குறிப்பிட்டார். சுயேச்சை வேட்பாளர் எரிக் செமூர் அரசின் செயலை “ஓர் அட்டூழியம்”
என்று வர்ணித்தார்.
கொடி விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்
கியதால் வெற்றி வளைவில் கட்டப்பட்ட
ஐரோப்பிய ஒன்றியக் கொடியை அரசு
சனிக்கிழமை இரவோடு இரவாக அந்த
இடத்தில் இருந்து அகற்றிவிட்டது. அழுத்
தங்களுக்கு அரசு அடிபணிந்து விட்டது
என்று தெரிவித்துக் கொடி அகற்றப்பட்ட
மையை வெற்றியாக வெளிப்படுத்திய
மரின் லூ பென்,”மக்ரோன் அகற்றப்பட்
டார்” என்ற அர்த்தத்தில் பதிவிட்டிருக்கி
றார்.ஆனால் முன்னர் திட்டமிட்டபடியே கொடி அகற்றப்பட்டது. அழுத்தங்களால் அல்ல என்றுஅரசுத் தரப்பில் கூறப்பட்டு
ள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் வலுப்
படுத்த விரும்பும் கொள்கைகளோடு
அதிபர் தேர்தலை எதிர்கொள்கின்றார்
மக்ரோன். ஆனால் தேசபக்தி என்ற பேரில் மக்களது உணர்ச்சிகளைத் தூண்டி அதன் மூலம் ஆதாய அரசியலை
முன்னெடுக்கின்ற தீவிர வலதுசாரிகளது எழுச்சி தேர்தலில் அவருக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது என்று சில அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.
03-01-2022