
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்றிரவு இரு வேறு இடங்களில் கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆனந்தபுரம் 06 ஆம் வட்டாரப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ஓடு பிரித்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் மூவர், கத்தியைக்காட்டி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி பெறுமதியான பொருள்களை கொள்ளையடித்துச்சென்றனர்.
இதன்போது, பெறுமதியான மூன்று அலைபேசிகள் நான்கு பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணப்பரிமாற்ற அட்டைகள், கடவுச்சீட்டு ,அடையாள அட்டைகள், வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த மதுப் போத்தல்கள் உள்ளடங்கலாக ஆறு இலட்சத்து 92 ஆயிரம் ரூபா பெறுதியான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று முறையிடப்பட்டது.
அந்த வீட்டிலிருந்தவர்கள், அண்மையில்தான் வெளிநாடு ஒன்றிலிருந்து வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வீட்டில் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தபோதும் கமாரக்கள் சில அடித்துநொருக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவு சேமிக்கும் பதிவகத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மற்றைய கொள்ளை, கைவேலி 2 ஆம் வட்டாரப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றது.
வீட்டிலிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் வீட்டின் கதவு உடைத்து வீட்டிலிருந்து 20 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றம் 5 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் நள்ளிரவு 11 மணிக்கும் அதிகாலை 4.30 மணிக்கும் இடையில் பதிவாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்