பிரான்ஸ்: 50 வயதுக்கு மேல் அனைவருக்கும் டிசெம்பர் முதல் மூன்றாவது ஊசி!

0
521

புதிய தொற்றலையை முறியடிக்க ஒன்றுபடுமாறு மக்ரோன் அழைப்பு

பிரான்ஸ் எதிர்கொண்டுள்ள ஐந்தாவது வைரஸ் தொற்றலையைத் தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்று அரசுத் தலைவர் மக்ரோன் இன்று அறிவித்திருக்கிறார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய தொலைக்காட்சி உரையில், சுகாதாரப்பாஸ் சோதனைகள் வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் ஐந்தாவது தொற்றுஅலை தோன்றியுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தெரிவித்திருப்பதைக் குறிப்பிட்டுக்கூறிய அதிபர், பிரான்ஸின்தொற்று வீதம் கடந்த வாரங்களில் 40வீத அதிகரிப்பைக் காட்டியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். விழிப்பு நிலையை இரட்டிப்பாகப் பேணுமாறு கோரிய அவர், இது வரை தடுப்பூசிஏற்றிக் கொள்ளாமல் இருக்கின்ற ஆறுமில்லியன் மக்களையும் ஊசி போட முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.சமூக இடைவெளி உட்பட சுகாதார விதிகளை ஒன்றுபட்டுப் பேணுமாறும் அவர்கேட்டுக்கொண்டார்.

தற்சமயம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பாக பலவீனமான நோய் எதிர்ப்புக்கொண்டவர்களுக்கே மூன்றாவது பூஸ்ரர்தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 50-64 வயதுப் பிரிவினருக்கும்மூன்றாவது ஊசி ஏற்றும் திட்டம் வரும் டிசெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று மக்ரோன் அறிவித்தார். “தீவிர நோய் நிலைமையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில் 80 வீதமானோர் 50 வயதைத் தாண்டியவர்கள் ஆவர்.

முதல் தடுப்பூசிகள் ஏற்றி ஆறு மாதங்கள்கடந்த பிறகு உடலில் வைரஸ் எதிர்ப்புத்திறன் குறைந்து போக வாய்ப்புண்டு.அதனால் அத்தகையோர் மூன்றாவது ஊசியைப் போட்டுக் கொள்வது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.எனவே 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது ஊசி ஏற்றுகின்ற வேலைத்திட்டத்தை சுகாதார அதிகாரிகள் டிசெம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து மேற்கொள்வார்கள்” – என்று அதிபர் மக்ரோன் தெரிவித்தார்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களது சுகாதாரப் பாஸில் மூன்றாவது தடுப்பூசிச் சான்றிதழையும் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது என்ற தகவலையும் மக்ரோன் வெளியிட்டுள்ளார்.அதன்படி அவர்கள் மூன்றாவது டோஸ் பெறுவதைக் கட்டாயமாக்கும் விதமான நடவடிக்கைகளை அரசு எடுக்கவுள்ளது. “தற்போதைய நிலைவரம் எங்களது விழிப்பு நிலையை அதிக பட்சமாகப்பேண வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றது.நாங்கள் வைரஸை இன்னும்வெற்றிகொள்ளவில்லை.

மணம், சுவைஇழத்தல், மனநலப் பாதிப்பு என்று கோவிட் தொற்றின் நீண்ட காலத் தாக்கங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களை இந்த நேரத்தில் நினைவு கூருகிறேன். “உலக சனத்தொகையினர் அனைவரும்எதிர்ப்புச் சக்தி பெறும் வரை வைரஸ் மற்றும் அதன் புதிய திரிபுகளுடன் நீண்டகாலம் நாங்கள் வாழவேண்டி இருக்கும்” -என்றும் மக்ரோன் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஓய்வூதிய மறுசீரமைப்புஅடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்கப்படுவதையும், நாட்டில் புதிதாக அணு மின்ஆலைகள் திறக்கப்படவிருப்பதையும் இன்றைய உரையில் அவர் அறிவித்தார். பிரான்ஸின் அதிபர் மக்ரோன் நாட்டில் தொற்று நோய் தொடங்கிய பிறகு மக்களுக்கு ஆற்றிவருகின்ற தொலைக்காட்சி உரைகளின் வரிசையில் இது ஒன்பதாவது உரை ஆகும். ‘கோவிட்’ உரைகளை அவர் தனது தேர்தல் பிரசாரமாக மாற்றும் உத்தியைக் கையாள்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

——————————————————————–குமாரதாஸன். பாரிஸ்.09-11-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here