மத்தியப் பிரதேசத்தில் 2 தொடருந்துகள் கவிழ்ந்து விபத்து: 29 பயணிகள் பலி!

0
178

train_mp_1_2498840gமத்தியப் பிரதேசத்தில் ஆற்றுப்பாலத்தில் அடுத்தடுத்து 2 தொடருந்துகள் தடம் புரண்டு பயங்கர விபத்துக்குள்ளாயின. இதில், 29 பேர் பரிதாபமாக இறந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். கனமழை காரணமாக பாலத்தில் ஏற்பட்ட திடீர் மண் அரிப்பே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நோக்கி கமாயாணி எக்ஸ்பிரஸ் தொடருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இரவு 11.30 மணி அளவில் அந்த ரயில் மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் மசாக் ஆற்றை கடக்கும் சிறிய பாலத்தை நெருங்கியது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. தொடருந்து தண்டவாளம் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால், ரயிலின் வேகத்தை குறைத்து டிரைவர் இயக்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ரயிலின் பின்பக்க பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின. தூக்கத்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்காக அலறி துடித்தனர். இந்த கோர விபத்து நடந்த சமயத்தில், எதிர்திசையில் மற்றொரு தண்டவாளம் வழியாக பாட்னாவின் ராஜேந்திரா நகரிலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. கமாயாணி எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட இடத்தில் ஜனதா எக்ஸ்பிரசின் இன்ஜின் மற்றும் அதற்கடுத்த பெட்டிகள் தடம் புரண்டன. 3 நிமிட இடைவெளியில் இந்த 2 ரயில்களும் தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின. கனமழை மற்றும் இரவு நேரம் என்பதால் மற்ற பயணிகளால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. விபத்து குறித்து 1 மணி நேரத்துக்கு பிறகுதான் 160 கி.மீ. தொலைவில் உள்ள பாட்னா ரயில் நிலையத்துக்கு தகவல் தெரியவந்தது.

உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளும், பேரிடர் மீட்பு குழுவினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கனமழை கொட்டிக் கொண்டிருந்ததால் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதிகாலைக்கு பிறகே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இடிபாடுகளில் சிக்கிய 250 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மருத்துவ குழுவினர் விரைந்து வந்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர விபத்தில் 29 பேர் பலியாகி இருப்பதாக மத்திய பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. இதில் 13 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள், 5 குழந்தைகள் அடங்குர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

போபால் டிவிசனல் ரயில்வே மேலாளர் அலோக் குமார் கூறுகையில், ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 பயணிகளும், கமாயாணி ரயிலில் ஒரு பயணியும் விபத்தில் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் பயணிகளா அல்லது கிராம மக்களா என்பது அடையாளம் காணப்படவில்லை என்றார். அடையாளம் காணப்பட்ட பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்ற சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.விபத்தில் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின், 7 பெட்டிகளும், கமாயாணி ரயிலின் 10 பெட்டிகளும் தடம் புரண்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து அறிந்ததும், நேற்று நடக்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். கனமழை வெள்ளத்தால் தண்டவாளப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதாலே விபத்து நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என ரயில்வே துறையும் மாநில அரசும் அறிவித்துள்ளன. அந்த வழித்தடத்தில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

8 நிமிடத்துக்கு முன் பத்திரமாக சென்ற ரயில்கள்

விபத்து நடப்பதற்கு 8 நிமிடத்துக்கு முன் அதே இடத்தை 2 தொடருந்துகள் கடந்து சென்றுள்ளன. அந்த இடத்தை கடக்கும் சமயத்தில் எந்த பிரச்னையும் இல்லை என ரயில் டிரைவர்கள் கூறி உள்ளனர். இதனால், இந்த இடைப்பட்ட 8 நிமிடத்தில்தான் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தண்டவாளப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அதுவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

பிரதமர் இரங்கல்

ட்விட்டரில் பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 2 தொடருந்துகள் விபத்து கடும் வேதனை அளிக்கிறது. இதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்துதர உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குள்ள நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என்றார். மேலும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இ.கம்யூ விடுத்துள்ள அறிக்கையில், ‘புல்லட் ரயில் உள்ளிட்ட ரயில்வே துறையின் நவீனமயத்துக்கு பல கோடி செலவிடுவதை விட பழமையான தண்டவாளங்களையும் பாலங்களையும் பலப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என கூறி உள்ளது.

நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்

2 தொடருந்துகள் தடம் புரண்ட விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று நாடாமன்றத்தில் விளக்கம் அளித்தார். மக்களவையில் அவர் அளித்த விளக்கத்தில், வெள்ளத்தில் ரயில் தண்டவாளம் அடித்து செல்லப்பட்டதே 2 ரெயில்கள் கவிழ்வதற்கு காரணம் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அனைத்தையும் செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் விபத்து நடத்த இடத்திற்கு செல்ல உள்ளதாகவும் சுரேஷ் பிரபு தெரிவித்தார். பின்னர் விபத்தில் பலியான பயணிகளுக்கு அவையில் இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதே போல மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய சுரேஷ் பிரபு வந்த போது காங்கிரஸ் உறுப்பினர்கள் எம்பிக்கள் சஸ்பெண்ட் கண்டித்து கடும் கோஷங்களை எழுப்பினர். கோஷத்திற்கு இடையே, சுரேஷ் பிரபு அறிக்கை வாசித்தார். அப்போது, விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக அமைச்சர் செல்ல வேண்டுமென காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here