
மட்டக்களப்பு- நாகர்வட்டை கடற்கரையில் கடந்த 18 ஆம் திகதி, நீதிமன்ற தடை உத்தரவை மீறி தீபச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு லவக்குமார் என்பவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெற்ற காவல்துறையினர். அதனைக் கையளிப்பதற்கு மூன்று முறை சென்றபோதும், அவர் இல்லாதமையினால் அவருடைய மனைவியிடம் கையளித்தபோதும் அவரும் பெறுவதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார்.
இதனால் லவக்குமார் வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை காவல்துறையினர் ஓட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட அவர், கடந்த 18 ஆம் திகதி 10 பேருடன் சென்று, நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வினை முகநூலிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மீண்டும் அவர்களை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியப்போது, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.