அழிந்துவரும் கடலடிக் காடுகளும் கடல் வாழ் உயிரிகளும்!

0
486

மீனின் வம்ஸமே ஒரு தனி அம்ஸம்தான். இவ்வாறு நினைவிலேயே எப்போதும் நீந்துகின்ற கலாதியான கடற்கரும்பு எது என்று நாயிடம் கேட்டால்கூட, வாலை ஆட்டிக்கொண்டு சொல்லும் “மீன்தான்” என்று.

ஆனால், போன மாதம் Netflix வெளியிட்டிருக்கின்ற Seaspiracy என்ற ஆவணப்படத்தை பார்த்ததிலிருந்து ‘மீன்…..” – என்று உச்சரிக்கவே முள்ளுக்குத்தியது போல உதடெல்லாம் நடுங்குது.

அப்படியொரு அதிரவைக்கும் ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார் பிரித்தானிய ஆசாமி Ali Tabrizi.

ஏகப்பட்ட தகவல்கள், பல கடல்களில் – கப்பல்களில் என்று ஓடித்திருந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகள், பொது அமைப்புக்கள் – அரச அமைப்புக்கள் என்று பலவற்றை நேரில் சென்று நாக்கை பிடுங்குவதுபோல கேட்ட செவ்விகள் என்று பரந்துபட்ட ஆதாரங்களை சேகரித்துவந்து, “இதோ பாருங்கள், இனியும் நீங்கள் இந்த மீனை சாப்பிடத்தான் போகிறீர்களா” – என்று, கோப்பைக்குள் வைத்த கையை பிடித்துவைத்து கேள்விகேட்பதுபோல இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்.

Seaspiracy ஆவணப்படத்தின் அடிநாதம், வர்த்தக மீன்பிடிக்காக (commercial fishing) கொள்ளையடிக்கப்படுகின்ற கடல் வளங்களும் மனித குலம் கடலின் காலனாக மாறியிருப்பதும் பற்றியது.

இது அநேகரால் காலத்துக்குக் காலம் ஓதப்படுகின்ற விடயம்தானே என்று பலர் எண்ணலாம். ஆனால், இந்த ஆவணப்படம் நடு உச்சியில் நச்சென்று அடித்திருக்கின்ற தகவலில் முக்கியமானது, தற்போதைய வர்த்தக மீன்பிடியானது, உலகளாவிய ரீதியில் இப்படியே போய்க்கொண்டிருந்தால், 2048 ஆம் ஆண்டுடன் உலகின் எந்தக்கடலிலும் ஒரு மீன்கூட மிஞ்சாது என்பது.

இது நம்பமுடியாத தகவல்தான். ஆனால், பல்வேற ஆதாரங்களுடனும் சேகரித்த தகவல்களுடனும் கடல்சார் நிபுணர்களின் துயரமான எதிர்கூறல்களுடனும் இந்த விடயங்களை மீன்கறி போல முன்வைக்கிறார் ஆவணப்பட இயக்குனர்.

வணிக ரீதியான மீன்பிடியில் வெறிகொண்டுள்ள தற்போதைய உலகம், இப்போது ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சத்து எழுபதினாயிரம் கோடி மீன்களை பிடித்துத் தின்கிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், நிமிடமொன்றுக்கு ஐம்பது லட்சம் மீன்கள் சட்டிக்குப்போகின்றன. உலகின் எந்தத்துறையிலும் இவ்வளவு கொடூரனமான எண்ணிக்கையில் எந்த உயிரினமும் கொலைசெய்யப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.

பிளாஸ்திக் மற்றும் ஏகப்பட்ட கழிவுப்பொருட்களால் கடலை சாக்கடையாக்கி, நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு, கடலுயிரிகளை அடியோடு அழிக்கின்ற மனிதன், பிளாஸ்திக்கினால் சூழல் மாசுபடுவதாகமாத்திரம் அழுகுணியாட்டம் போட்டுக்கொண்டிருந்தாலும், அதைவிட, வணிக ரீதியான மீன்பிடியினால்தான் அதிகம் கடலை அழித்துத்தொலைக்கிறான் என்று விம்முகிறார்கள் கடற்பாதுகாப்பின் மீது கரிசனை கொண்ட ஆராய்ச்சியாளர்கள்.

பெரிய பெரிய கப்பல்களிலும் ட்ரோலர் இயந்திரப் படகுகளிலும் சென்று கதற கதற கடலை சூறையாடுவதை முழுநேர திருட்டுத்தொழிலாகவே மேற்கொண்டுவருகிறார்கள் பல கோப்பரேட் நிறுவனங்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கிறது Seaspiracy. அதுமாத்திரமல்ல, கடற்பாதுகாப்பு என்று, பெயருக்கு வகை தொகையில்லாத சட்டங்களையும் அதனைப்பாதுகாப்பதற்கு ஏகப்பட்ட அமைப்புக்களையும் நிறுவிவைத்துள்ள எந்த அரசும் இதயசுத்தியுடன், கடலைப் பாதுகாப்பதில்லை என்றும் இவர்களின் ஆசீர்வாதத்துடன்தான் மொத்தக்கடலும் சாம்பராகிக்கொண்டிருக்கிறது என்றும் அம்பலாமாக்குகிறது Seaspiracy.

“மீன் சாப்பிட்டல் உடம்புக்கு நல்லது”, “மீனெண்ணைக் குளிசை மூளைக்கு நல்லது” – என்று புலம்புகின்ற புரளிக் கதைகள் அனைத்துக்கும் பின்னாலுள்ள மொக்குத் தத்துவங்களை உரித்து, இவையெல்லாம் எவ்வளவு பெரிய பொய்கள் என்று, கடலின் அலை திறந்து காட்டுகிறார் இயக்குநர் Ali Tabrizi.

மீன்கள் மற்றும் கடலுயிரிகளின் மீதான மனிதனின் இன அழிப்பு இவ்வாறு இயந்திர வேகத்தில் தொடர்கிறது என்றால், மறுபுறத்தில் இந்தக் கடற்சமனிலை குலைவதால், நீருக்கு அடியில் உள்ள கடற்காடுகள் நடுங்கவைக்குமளவில் அழிந்துகொண்டுவருவதாக இன்னொரு தகவலை தருகிறார் Ali Tabrizi.

தரையில் மரங்கள், தாவரங்கள், காடுகள் ஆகியவை எவ்வாறு கரியமில வாயுவை (Co2) உள்ளெடுத்து, சுத்தமான ஒக்ஸிஜனை(O2) மானிட குலத்தின் தூய சுவாசத்திற்காக உவந்தளிக்கின்றனவோ, கடலும் இதேபோன்ற தொழிற்பாட்டினை பல மடங்குகளில் செய்துகொண்டிருக்கிறது. அதாவது, உலகின் 93 வீதமான கரியமில வாயு கடலடிக் காடுகளில்தான் கடற்தாவரங்களினாலும் பாசிப்படலங்களினாலும் பவளங்களினாலும் சேகரிக்கப்படுகிறது. இயந்திரங்களின் துணையோடு மூர்க்கமாக மேற்கொள்ளப்படுகின்ற மீன்கொள்ளையினால், கடற்தாவரங்கள் ஏக்கர் கணக்கில் அழிக்கப்பட்டு, கடலடியில் சேகரமாகியுள்ள கரியமிலவாயு, உமிழ்ந்து வெளித்தள்ளப்படுகின்ற பேரபாயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது என்று படம்போட்டு சொல்கிறது இந்த ஆவணப்படம்.

இதனை, மேலும் விளக்கமாக கூறும்போது, கடலடிக் காடுகளில் சேகரிக்கப்படுகின்ற இந்த 93 வீத கரியமிலவாயுச் சேகரத்திலிருந்து, ஒரு வீதம் இழக்கப்பட்டால்கூட, அது 970 லட்சம் கார்களிலிருந்து வெளியிடப்படுகின்ற புகைக்கு சமன் என்கிறார் Ali Tabrizi. தற்போது, இந்தக் கடலடிக் காடுகள், முரட்டுத்தனமான மீன்கொள்ளையினால், வருடமொன்றுக்கு 390 கோடி ஏக்கர் என்கின்ற ரீதியில் அழிந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கிறீன்லாந்து,, நோர்வே, பின்லாந்து, டென்மார்க், பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெய்ன், போர்த்துக்கள், இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மொத்த நிலப்பரப்பளவுக்கு ஈடானது என்று காலுக்குள்ளேயே வெடியை கொழுத்திப்போடுகின்ற தரவையும் சேர்த்தே சொல்கிறார் இயக்குனர் Ali Tabrizi.

இது மாத்திரமல்ல, உலகெங்கிலுமுள்ள அனைத்து கடல்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற மீன் பண்ணை என்ற புலுடா விளையாட்டு, பெருமுதலாளிகளால் வருடக்கணக்கில் கடலடிமைகளாக கொண்டுசெல்லப்படுகின்றவர்களின் உயிரை உறைய வைக்கும் கதைகள், இரத்தம் சிந்தும் கடலின் குரூர அனுபவங்கள் அத்தனையையும் இந்த ஆவணப்படம் சாட்சியங்களாக்குகிறது.

Seaspiracy பல அரசுகளுக்கு – பல அமைப்புக்களும் – பல வணிக முதலைகளைக்கு – பல கடலடி முதலாளிகளுக்கு – பிடரியைப் பொத்தி அடித்திருக்கும் அகோரமான ஆவணப்படமாகும்.

ஆர்வமுள்ளவர்கள் – ஆர்வமில்லாதவர்கள் அனைவரும் ஒன்றரை மணித்தியாலங்கள் நேரமொதுக்கி பார்க்கவேண்டிய மிக மிக முக்கியமான ஆவணம். இதைப் பார்த்துவிட்டு தூங்கப்போனால், இவ்வளவு காலமும் தின்ற மீன்கள், கணவாய், இறால் எல்லாம் பச்சை சேர்ட் போட்டுக்கொண்டு சிவப்பு – கறுப்பு சைக்கிளில் துரத்துவதுபோல கனவெல்லாம் வருது.

நன்றி: ப.தெய்வீகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here