பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் போலியான அறிவிப்பு!

0
718

அண்மையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான கடிதத் தலைப்பில் 20.01.2021 திகதியிடப்பட்டு ‘அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ச்சோலைகள் நிர்வாகிகளுக்குமான அறிவிப்பு” ஒன்று வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக பிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதன் முழுவடிவம் வருமாறு:-

அன்புடையீர் வணக்கம்!

அண்மையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான கடிதத் தலைப்பில் 20.01.2021 திகதியிடப்பட்டு ‘அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ச்சோலைகள் நிர்வாகிகளுக்குமான அறிவிப்பு” ஒன்று வெளிவந்துள்ளது. இது விடயமாக சில சங்கத் தலைவர்கள் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். இப்படியான போலிகளை இனம்கண்டுகொண்டு விழிப்போடு எமது பணிகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.
தற்போது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தனது கட்டமைப்புகளை ஒழுங்கு செய்து ஆக்கமான பணிகளை முடுக்கி விட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்நடவடிக்கைகளை முடக்குவதற்காக அண்மையில் புதிய கடிதத்தலைப்புகளில் போலி அறிக்கைகள் வந்திருப்பதையும் உங்கள் கவனத்திற்கு தெரியப் படுத்துகின்றோம். அதேபோல் சிறிது காலத்திற்கு முன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் முன்னின்று உழைக்கும் பிரதிநிதிகளைப்பற்றி காழ்ப்புணர்வுடனான விமர்சனங்கள் இணையவழிகளில் பரப்பப் பட்டது, இன்று எமது கடிதத்தலைப்பில் போலியான அறிக்கை வெளிவந்துள்ளது. இச்செயற்பாடுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகவே பார்க்கப் படுகிறது. எமது பணிகள் முன்னேற்றம் காணும்போது குழப்புவதற்காக விலைபோனவர்களால் எழுதப்பட்டு, வெளியிடப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
போலியான அறிக்கையின் உள்ளடக்கத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய சில விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்
• சங்கங்களுக்கான அறிவித்தல் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாலும், தமிழ்ச்சோலை நிர்வாகிக்கான அறிவிப்பு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் அனுப்பப்படுவதே எமது நிர்வாக ஒழுங்கு.
• அறிக்கையில் தமிழ் வசனங்களையே ஒழுங்காக எழுதத்தெரியாத தமிழன் ஒருவரால் இவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளதை கவனத்தில் எடுக்கவும்.
• கட்டமைப்புகளின் பெயர்களையும், பொறுப்பாளர்களின் பெயர்களையும் தெரியாதவர் பிறரின் ஏவலை ஏற்றுச் செய்தாரோ, அல்லது அவருக்கான லாபம் கருதிச் செய்தாரோ தெரியவில்லை.
• இன்று உள்ள கணனி யுகம் இப்படியாக அரைகுறை அறிவாளிகளின் அறிவை இனம் காட்டி உள்ளது என்பதுதான் உண்மை.
இதேபோல் கணனி யுகத்தில் இன்னும் குழப்பத்தை விளைவிக்கும் குழறுபடி அறிக்கைகள், மற்றும் காழ்ப்புணர்வு விமர்சனங்கள் வெளிவரும். அவைகளை விழிப்போடு உள்வாங்கிக் கொள்வோம். இப்படியான போலிகள் எமது நடவடிக்கைகள் சரியாகச் செல்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதாக நாம் புரிந்து கொள்வோம். எமக்கான சந்தேகங்கள், கேள்விகளை எமக்கான பொறுப்பாளர் ஊடாகவோ, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்புக் கூறும் பொறுப்பாளர்களிடமோ கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டு பயணிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நிர்வாகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here