மனைவியுடன் சேர்த்து வீட்டை எரித்த நபர் சுட்டதில் 3 பிரெஞ்சுக் காவல்துறையினர் பலி!

0
192

குடும்ப வன்முறை ஒன்றில் தலையிடச் சென்ற பொலீஸ் ஜொந்தாம் வீரர்கள் மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.நான்காவது வீரர் படுகாயமடைந்துள்ளார்.

பிரான்ஸின் மத்திய Auvergne-Rhône-Alpes பிராந்தியத்தில் Puy-de-Dôme என்ற இடத்தில் நள்ளிரவு தாண்டி இன்று விடிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

தனது மனைவியுடன் சேர்த்து வீட்டைக் கொளுத்திய 48 வயதான நபர் ஒருவரே பொலீஸார் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கிறார். முற்றாகத் தீக்கிரையான வீட்டினுள் இருந்து மனைவியை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.

குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பாக அந்தத் தம்பதிகள் இடையே பிணக்கு இருந்துவந்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

நள்ளிரவில் கணவனின் வன்முறையில் இருந்து தப்புவதற்காக மனைவி வீட்டின் கூரைப்பகுதிக்குள் ஒளிந்த சமயம் அந்த நபர் மனைவியைக் கொல்லும் நோக்குடன் வீட்டுக்கு தீ மூட்டியுள்ளார் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து அந்த வீட்டுக்கு விரைந்து சென்று பெண்ணைக் காப்பாற்ற முற்பட்ட பொலீஸார் மீது அந்த நபர் மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அவர் ஒரு மனநோயாளி என்று விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ள அந்த நபரை பொலீஸ் கொமாண்டோக்கள் தேடிவருகின்றனர்.

தப்பியோடிய கொலையாளியிடம் இருந்து ஏனையோரைப் பாதுகாப்பதற்காக அந்தப் பிரதேசம் மூடப்பட்டு விசேட பொலீஸ் நடவடிக்கை இடம்பெறுவதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தாமனா(Gérald Darmanin) தெரிவித்திருக்கிறார்.

உயிரிழந்த மூன்று ஜொந்தாம் பொலீஸாரது குடும்பத்தவர்களுக்கு அவர் தனது இரங்கலை வெளியிட்டிருக்கிறார்.

பிரான்ஸில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. அவ்வாறான சம்பவம் ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பொலீஸார் கொல்லப்படுவது இதுவே முதல் சம்பவம் ஆகும்.

பிந்திய செய்தி :

தாக்குதலாளியின் சடலம் பொலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

குமாரதாஸன். பாரிஸ்.
23-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here