
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ந்தும் நீடிக்கும் சீரற்ற காலநிலையின் காரணமாக 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வீசிய காற்று மற்றும் மழை காரணமாக ஒன்பது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மற்றும்பல இடங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.