“யாழ்.கோட்டை வீழ்ந்தது” என்ற தலைப்புடன் விசேட பதிப்பு!

0
358

அதுவரை பெரும் வெடியோசைகளால் அதிர்ந்துகொண்டிருந்த யாழ். நகரின் மையப்பகுதி திடீரெனப் புரியாத ஓர் அமைதியில் ஆழ்ந்திருந்தது.

விடாது கேட்கும் வேட்டொலிகளும் விமானங்கள், ஹெலிகளின் இரைச்சல்களும் அடியோடு நின்று போய் இருந்தன.

யாழ். நகரை அண்டி வசித்தவர்களுக்கு கடந்துபோன ஒரு நூறு நாள்களின் அனுபவத்தில் அன்றைய விடியலின் அமைதி மட்டும் வழமைக்கு மாறான ஒன்றாகத் தெரிந்தது.

அது 1990 செப்ரெம்பர் 26 விடிகாலை.

அந்த நாட்களில் ‘உதயன்’ பணிமனை கைலாயபிள்ளையார் கோவிலின் தெற்குப் பக்கமாக நாவலர் வீதியில் அமைந்திருந்தது.

கோட்டைப் பகுதி மோதல்கள், திலீபனின் நினைவுநாள் போன்ற செய்திகளுடன் அன்றைய காலைக்கான பத்திரிகை அச்சுக்குப் போயிருந்தது. இரவுக் கடமையை முடித்துக் கிடைத்த இடைவெளியில்
அலுவலகத்தில் இருந்து அதிகாலை வீட்டுக்குத் திரும்பியிருந்தேன் மீண்டும் பகல் கடமையைத் தொடர்வதற்காக.

அச்சமயம் தான் அந்த செய்தி குடாநாடெங்கும் தீயாய்ப் பரவத் தொடங்கி இருந்தது.

வீட்டில் இருந்து கிளம்பி மீண்டும் அலுவலக வாயிலை அடைந்தபோது அங்கு பெரும் கூட்டம் அலை மோதிக்கொண்டிருந்தது. தாங்கள் அறிந்துகொண்ட அந்தத் தகவல் நிஜமா என்பதை உறுதிப்படுத்துவதற்காக முண்டியடித்தவர்களின் கூட்டம் அது.

தகவல் அறிவதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட அன்றைய குடாநாட்டில் தாங்கள் காதில் கேட்ட எந்த சேதியையும் பத்திரிகைகளில் படிக்காத வரை யாழ். வாசிகளுக்குப் பசி தீராது.

அந்தத் தகவலை ஏற்கனவே நாங்கள் தெரிந்து கொண்டோம். எனினும் விடுதலைப் புலிகளின் அன்றைய யாழ்.மாவட்டத் தளபதி பானுவின் அலுவலகத்தில் இருந்து வந்த ஒருவர் அதனை உறுதிப்படுத்தும் வரை பொறுத்திருந்தோம்.

அதன் பிறகு ஆசிரிய பீடத்தில் மட்டுமன்றி அனைத்துப் பிரிவுகளிலும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

“இன்று மாலை விசேட பதிப்பு வெளிவரும்” என்று எழுதப்பட்ட மட்டை ஒன்று உடனடியாகவே அலுவலக வாசல் கிறில் கேற்றில் தொங்கவிடப்பட்டது. அதுவரை வாயிலில் திரண்டு நின்ற கூட்டம் அதன்பிறகுதான் கலைந்து சென்றது.தங்களுக்கு 500, 600 பிரதிகள் மேலதிகமாகத் தேவை எனக் கேட்டு அலுவலகத்துக்குப் படையெடுத்துவந்த பத்திரிகை முகவர்களோடு மனேச்சர் சோமசுந்தரம் ஐயாவும் மரியநாயகம் அண்ணரும் (அந்நாட்களில் வியோகத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்) முரண்பட்டுக்கொண் டிருந்தனர் .

அச்சிட எடுக்கும் நேரம், இயந்திரத்தின் வேகம், தாள்களின் பற்றாக்குறை என்று சக்தியை மீறிய பல காரணங்களால் விசேட பதிப்புகளின் பிரதிகளது எண்ணிக்கையை முகவர்கள் கேட்கும் அளவுக்கு அதிகரிக்க முடிவதில்லை.

‘சரியாக 10மணி 48 நிமிடத்துக்கு தளபதி பானு யாழ். கோட்டையில் கொடியை ஏற்றுகிறார்’ என்பதை புலிகளின் செய்திக் குறிப்பு ஒன்று உறுதிப்படுத்தியது. விசேட பதிப்புக்கான பணிகள் உடனேயே தொடங்கப்பட்டன.

“யாழ்.கோட்டை வீழ்ந்தது “என்ற கொட்டை எழுத்துத் தலைப்புடன் விசேட பதிப்பு தயாரானபோது அதனை வாங்குவதற்காக உதயன் பணிமனைக்கு விழுந்தடித்து வந்தவர்களின் வரிசை நல்லூர் கோவில் வீதி வரை நீண்டது. பல்லாயிரம் பிரதிகள் வாசலிலேயே விற்றுத் தீர்ந்தன.

கோட்டைப் பக்கம் குண்டுச் சத்தங்கள் இல்லை. வானில் ஹெலிகளும் பறக்கவில்லை. குடாநாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பும் ஒரு வித ஆர்ப்பரிப்பு உணர்வும் அன்று முழுநாளும் காணப்பட்டன.

எனினும் பல மணி நேரம் நீடித்த அமைதிக்குப் பின்னர் அன்று மாலை விமானப்படைக் ஹெலிக்கொப்ரர் ஒன்றும் ‘சீ பிளேன்’ என்கின்ற வேவு விமானமும் உதயன் பணிமனைப் பகுதி அடங்கலாக நகரப் புறங்களின் மேல் நீண்ட நேரம் வட்டமிட்டுவிட்டுப் பலாலி திரும்பி இருந்தன.

வழமையான பதிப்புடன் விசேட பதிப்பும் சேர்ந்து வேலைப்பளு நிறைந்த எங்களின் அன்றைய நாள்(செப்ரெம்பர் 26)முடிவுக்கு வந்தது.

மறுநாள் செப்ரெம்பர் 27.

காலையில் அலுவலகத்தில் வழமை போன்று பணிகள் ஆரம்பமாகி இருந்தன. சிறிது நேரத்தில் (மணி பத்துப் பத்தரை இருக்கும்) யாரும் எதிர்பார்த்திராத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

வானில் பேரிரைச்சலுடன் விரைந்து வந்த விமானப்படையின் இரண்டு இத்தாலியத் தயாரிப்பு ‘சியாய் மாசெட்டி’ (SIAI-Marchetti) குண்டு வீச்சு விமானங்களில் ஒன்று உதயன் பணிமனை மீது திடீரெனக் குத்திப் பதிந்து மூன்றுக்கு மேற்பட்ட ரொக்கட் குண்டுகளை வீசியது. வெடிப்போசைகள் அலுவலக அயலை உலுக்கி எடுத்தன.

வட்டமடித்த விமானங்கள் இரண்டாவது தடவை தாக்குவதற்கு முன்பாக மூத்த ஆசிரிய பீடப் பணியாளர்கள் உட்படப் பலரும் அலுவலகத்துக்கு முன் புறமும் பின்புறமும் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்புத் தேடிக் கொண்டனர். இணையாசிரியர் பத்மசீலனும் பணியாளர்கள் சிலரும் பின்புறப் பதுங்கு குழிக்குள் நூழைந்து தப்பினர். அலுவலகத்துக்கு முன்பாக ஒரு வீட்டில் வசித்து வந்த மற்றோர் இணை ஆசிரியர் குருநாதன் தனது மனைவி பிள்ளைகளுடன் முன்புறமாக இருந்த பதுங்கு குழிக்குள் புகுந்துகொண்டார். நிர்வாக இயக்குநர், வித்தியாதரன் போன்றோரும் அதே பதுங்கு குழிக்குள் தஞ்சமடைந்தனர்.

தாக்குதல் நடந்த சமயம் நானும் அலுவலகச் செய்தியாளர் ராஜ்குமாரும் ஓர் அலுவலக வேலையின் நிமித்தம் அரியாலைப்பகுதிக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் கோவில் வீதி வழியே திரும்பிக் கொண்டிருந்தோம். குண்டுகள் வெடித்த திசையை வைத்து விமானங்களின் இலக்கு நமது பணிமனை தான் என்பதை மதிப்பிட அதிக நேரம் எடுக்கவில்லை.

வாயிலுக்கு வந்த போது பாதுகாவலர் பகுதி முன்பாக ஒரே இரத்த வெள்ளம். கடமை முடிந்து வீடு திரும்புவதற்காக அலுவலக வாசலில் நின்றிருந்த விநியோகக் பிரிவு பணியாளர் பத்மநாதன் என்பவர் உடல் சிதறி உயிரிழந்து கிடந்தார்.

அலுவலக முற்றத்தில் நின்றிருந்த ஜெயந்தன் கை சிதறிய நிலையில் அலறிக்கொண்டிருந்தார். அந்த நாட்களில் யாழின் முன்னணித் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ஜெயந்தன்.குண்டின் சிதறல் ஒன்று அவரது வலது கையை முழங்கைக்குக் கீழே சீவி எறிந்திருந்தது.

விமானம் வீசிய ரொக்கெட்டுகளில் ஒன்று தண்ணீர் தாங்கியைத் தாக்கிச் சேதப்படுத்தி இருந்ததால் அதிலிருந்து வெளியேறிய பெருமளவு நீர், இறந்தவர் மற்றும் காயமடைந்தவர்களது இரத்தத்துடன் கலந்து உதயன் வாசலில் பெரும் இரத்தக் குளம் ஒன்றை உருவாக்கி இருந்தது. முற்றத்தில் நின்றிருந்த வேப்ப மரத்தின் இலைகள் அனைத்தும் முற்றாக உருவி எறியப்பட்டு தரையெங்கும் பரவிக் கிடந்தன. ஆசிரிய பீட வாயிலில் பத்மசீலனின் பராமரிப்பில் பூத்துக்குலுங்கும் பூஞ்சாடிகள் சிதறிப் பறந்திருந்தன. இத்தகைய காட்சிகளைப் படமாக்கி வைக்க இப்போதுபோல அந்த நாட்களில் நமது கையில் கருவிகள் எதுவும் கிடையாது.

மின் இணைப்புகள் சேதமடைந்ததால் இருள் சூழ்ந்திருந்த ஆசிரிய பீட அறைக்குள் அன்றிரவு முழுவதும் அரிக்கேன் விளக்குகளின் உதவியுடன் வித்தியாதரனும் , ராஜ்குமாரும் நானும் தங்கியிருந்தோம். நகரப் பகுதியில் மேலும் வான் தாக்குதல்கள் எதிர்பார்க்கப்பட்டதால் விடிய விடியக் கண் விழித்திருந்தோம்.

இயந்திரப்பகுதியின் கூரைகள் உட்பட பல பிரிவுகளும் பலத்த சேதமடைந்து போயிருந்தன. அடுத்த சில தினங்கள் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டது. உதயன் தாக்கப்பட்ட செய்தியை முரசொலி, ஈழநாடு போன்ற ஏனைய பத்திரிகைகள் மறுநாள் வெளியிட்டிருந்தன. ஆனால் தென்னிலங்கையின் பெரும்பாலான ஊடகங்கள் அந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்தன என்பதை பின்னர் அறிய முடிந்தது.

திலீபனின் நினைவு நாளுக்கு மறுநாள் பத்திரிகைப் பணிமனை மீது நிகழ்ந்த இந்தக் கண்மூடித்தனமான வான் தாக்குதல் குறித்து செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு ஊடாகக் கொழும்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது வெளி உலகுக்கு மறைக்கப்பட்டது. தாக்கப்பட்ட உதயன் பணிமனையில் இருந்து சுமார் 100 மீற்றர்கள் தொலைவிலேயே செஞ்சிலுவைச் சர்வதேசக்குழுவின் வதிவிட அலுவலகம் அமைந்திருந்தது.

யாழ். கோட்டை முற்றுகையும் அதனோடு தொடர்புபட்ட இந்தச் சம்பவங்களும் இரண்டாம் கட்ட ஈழப்போரின் முக்கிய நிகழ்வுகளாக வரலாற்றில் பதிகின்றன.

இன்றும் ஒரு செப்ரெம்பர் 27 ஆம் திகதி. முப்பது ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இதே காலப்பகுதியை வாழ்ந்து அனுபவித்தவர்களினதும் அக்கால ஊடகங்களில் பணிபுரிந்த நண்பர்களினதும் மனங்களில் இந்தப் பதிவு பல பழைய நினைவுகளை மீட்கக் கூடும்.

படம் :யாழ். டச்சுக் கோட்டையின் ஒரு பக்கத் தோற்றம்.

27-09-2020. – குமாரதாஸன்
ஞாயிற்றுக்கிழமை பாரிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here