இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப நாள் இன்று!

0
593

Balraj-with-Soosai1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட இறுக்கமான முற்றுகையைத் தகர்க்க முடியாமல் சிறிலங்காப்படை திணறிக்கொண்டிருந்தது.
முற்றுகையை உடைக்கச் சிறிலங்கா தனது முப்படைகளின் முழுப்பலத்தையும் பிரயோகித்தது. நூற்றியேழு நாட்கள் கடுமையாகப் போரிட்ட சிறிலங்கா இராணுவம் இறுதியில் இரவோடிரவாக யாழ்; கோட்டையைக் கைவிட்டு ஒடிவிட்டது.

யாழ்க்கோட்டையின் பின்னடைவை ஈடு செய்வதற்காக, ஒரு மாதத்திற்குள்ளாகவே பலாலி இராணுவத்தளத்தில் இருந்து பாரிய நகர்வைச் செய்தது சிங்கள இராணுவம்.

தாக்குதலணிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும் காலநிலையும் எதிரியின் படைபலமும் சிறிலங்காப்படைக்கு வெற்றியையே தேடிக்கொடுத்துக்கொண்டிருந்தன. ஏற்கனவே தயார்ப்படுத்தப்பட்ட நிலைகளில் இருந்து பின்வாங்கிய எமதணிகள், புதிய நிலைகளை அமைத்து பாதுகாப்பு வேலியை ஏற்படுத்தியிருந்தன.

அது மழைகாலம். தொடர்ச்சியாகக் கனத்த மழை பெய்து கொண்டிருந்தது. மாவிட்டபுரம் பகுதியில், வெற்றிலைத்தோட்டங்கள் அமைந்திருக்கும் பக்கமாக நிலையமைத்து இருந்தோம். சிரமமான வேலையாகவே அது அமைந்தது. மழைக்கு நடுவே பாதுகாப்பகழிகளை வெட்டுவது கடினமாக இருந்தாலும் புதிய நிலைகளை அமைத்து, தடுப்புச் சமருக்குத் தயாராகியிருந்தோம்.

உடனடியாகப் பாதுகாப்பு நிலைகளை அமைக்க வேண்டியிருந்ததால் பதுங்குகுழிகளை அமைப்பதற்கான மரக்குற்றிகள் தொடக்கம் எதுவும் கிடைக்கவில்லை. அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே பதுங்கு அகழிகளை அமைக்கவேண்டியிருந்தது. அநேகமான நேரங்களில் பதுங்கு அகழிகள் தண்ணீராலேயே நிரம்பியிருக்கும், செம்மண் சேறு, அவதானமாகச் செல்லாவிட்டால் வழுக்கி விழவேண்டிவரும். அதுமட்டுமல்லாமல் ஆயுதமும் சேறாகி விடும். இராணுவத்தின் செல்லடிச்சத்தம் கேட்கும் போது பதுங்கு குழிக்குள் தான் பாய்ந்து காப்பெடுப்போம்.

ஆங்காங்கு கிடைத்த தகரம், கிடுகு, சீற்களைப் பயன்படுத்தி சிறிய கொட்டில்களை அமைத்து குந்தியிருந்தபடியேதான் நித்திரை கொள்ளுவோம். அரை அடிக்குக் கிடங்கு வெட்டிப் பொலித்தீன் பைகளைப் போட்டு அதன்மேல் தான் படுக்கவேண்டும். அப்போது உடல் சூட்டிற்கு உடைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் காயத்தொடங்கும். உடைகள் காய்ந்து உடலில் இருந்து சிறிது சிறிதாகக் குளிர் நீங்கத் தொடங்க, கொஞ்சம் நிம்மதியாக அயரலாம் என்று நினைத்து சரியும்போது எதிரி எறிகணை ஏவும் சத்தம் கேட்கும். சென்றிக்கு (காவல்கடமை) நிற்பவன் ஓடிவந்து, ‘செல்லடிச்சிட்டான் எல்லாரும் பங்கருக்கு வாங்கோ’ என தட்டியெழுப்ப, எங்கு விழுந்து வெடிக்குமோ என்று தெரியாத செல்லுக்காக மீண்டும் தண்ணி பங்கருக்குள் குதித்து நனைந்து எழுவோம். இப்படியேதான் அந்த நாட்களின் கடுமைகளை விடுதலைக்காகத் தாங்கிக் கொண்டனர் போராளிகள்.

இங்கு ஒரு சம்பவத்தை நினைவு கூறலாம் என நினைக்கின்றேன். வழமையாக அதிகாலை 4.30 மணிக்கு எல்லோரும் தயார் நிலையில் இருப்போம் (Alert position). ஏனெனில் இராணுவம் அதிகாலையில் நகர்ந்து சண்டையை ஆரம்பிப்பது வழமை. அதனால் எல்லோரும் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

அது மாரிகாலம், அதிகாலையில் மிதமான குளிர் காற்று அடித்துக்கொண்டிருந்தது. காவல் நிலைகளில் இருப்பவர்கள் சிலவேளை அயர்ந்து தூங்கி விடுவார்கள். ஏனெனில் பகல் வேளைகளில் தூங்க முடியாது. அணியில் ஆட்கள் குறைவு, இரவுக்காவல்கடமை, கடுமையான வேலை என ஓய்விற்கோ உறக்கத்திற்கோ நேரம் இருக்காது. அதற்கான வாய்ப்பும் இல்லை. எனவே அடிக்கடி ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று, முழித்திருக்கிறார்களா? அவதானமாக இருக்கின்றார்களா? எனப் பார்ப்பது வழமை.

அன்றைக்கு, இவ்வாறு சென்ற போது ஒரு நிலையில் இருந்த ஒரு போராளி, அவர் தென்தமிழீழத்தைச் சேர்ந்தவர்;, நிலையெடுத்திருந்தபடியே அயர்வில் நித்திரையாகிவிட்டார். அவரை எழுப்பிவிட்டு, அந்த நிலையில் நான் நின்று கொண்டு அவரை ரோந்து சென்று வருமாறு கூறினேன். கொஞ்சம் நடந்தால் நித்திரை தூக்கம் இல்லாமல் போகும் என்பதால் அவரை சுற்றிப்பார்த்து வருமாறு சொல்ல, அவரும் சென்றுவிட்டார்.

கனநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. என்ன நடந்திருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட, அவர் சென்ற பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது ’எனக்கு ஒன்னாதுடா, என்னை தூக்குங்கடா’ என மெலிதாக ஒரு சத்தம் கேட்டது. வெடிச்சத்தமோ அன்றி செல் சத்தமோ கேட்கவில்லை. யாருடைய குரல்? என்ன நடந்திருக்கும்? என்ற யோசனையோடு அந்தக்குரல் வந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு ஒன்னாதுடா (என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை) என்ற அந்தக்குரல் அவருடையதுதான் எனப் புரிந்தபோது, பல கேள்விகள் அந்தக் கணத்தில் மனதில் உதித்தாலும், எதுக்கும் தயாராக சத்தம் வந்த இடத்தை நோக்கி மெல்ல மெல்லச் சென்றேன்.

சத்தம் மூவிங் பங்கருக்குள் இருந்து வந்தது. அந்த இடத்திற்கு போய் பார்த்தபோது மூவிங் பங்கருக்குள் விழுந்து இறுகுப்பட்டுப்போய் இருந்தார். அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். ”மூவிங் பங்கரின் அருகால் நித்திரைத்தூக்கத்துடன் நடந்து வந்தனான் அப்போது சறுக்கி பங்கறுக்குள் நிலைகுப்பற விழுந்துவிட்டேன்”; என்றார். பங்கரின் இருபக்கமும் ஈரமாக இருந்தது. அவரும் உடல் பருமனானவர். விழுந்த போது கை கால்களும் சுயமாக எழும்ப முடியாதபடி அச்சேற்றுக்குள் அகப்பட்டுவிட்டன. மேலும் அந்த நிலையில் இருந்து எதிரியின் நிலை மிகவும் அண்மையாக இருந்தது. இராணுவம் கதைப்பது கூடக் கேட்கும். எனவே அவர் பலமாகச் சத்தம் போட்டு உதவிக்கு கூப்பிட முடியாததால் அப்படியே இருந்தவாறு மெல்லிய சத்தத்தில் முனங்கிக் கொண்டிருந்தார். இப்படித்தான் அந்த நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

(அந்த தாக்குதலுக்குப் பின்னர், நாங்கள் பிரிந்து விட்டோம். அந்த நண்பனைக் காணும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. மூன்று வருடங்கள் கழித்து ஒருநாள் பத்திரிகையில் அவனுடைய படம் இருந்தது. பூநகரி தவளை நடவடிக்கையில் வீரச்சாவடைந்த அவனுக்கு வீரவணக்கம் செலுத்தியிருந்தார்கள். ஒரு கணம் மௌனமாக அஞ்சலி செய்து விட்டு, அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.)

பலாலி இராணுவமுகாம் விஸ்தரிப்பை இராணுவம் செய்துவிட்டது. தளபதி பானு அண்ணை அணிகளை மீள் ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பு நிலைகளை அமைத்துத் தடுப்புச் சமருக்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தார். பலாலிப்பகுதியில் இருந்து, இராணுவம் மேலும் பிரதேசங்களைக் கைப்பற்றி விடக்கூடாது என்ற தலைவரின் பணிப்பிற்கமைய பலாலிப்பகுதியிலேயே தங்கி நின்று சகல வேலைகளையும் ஒழுங்குபடுத்தினார்.

அதேவேளை சிங்கள இராணுவமும் தங்களது நிலைகளை அமைத்து பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் திடீர்த்தாக்குதல் ஒன்றை மாவிட்டபுரம் பகுதியில் மூன்று முனைகளிலும் நடாத்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here