பிரெஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ் பாடல் பாடி அசத்திய ஈழச் சிறுமி!

0
896

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட சிறுமி ஒருத்தி பிரெஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சினிமா பாடல் ஒன்றைப் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பிரான்ஸின் TF1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல “வோய்ஸ் கிட்ஸ்” (Voice Kids) என்ற சிறுவர் பாடல் போட்டி நிகழ்ச்சியிலேயே கனிஷா பாலகுமாரன் என்ற 11வயது தமிழ் சிறுமி சிறுமி கலந்துகொண்டு பாடியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடல் போட்டி நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை இரவு TF1 தொலைக்காட்சியின் MY TF1 சனலில் ஒளிபரப்பாகியது.

பிரபல பிரெஞ்சு பாடகர்களால் நேரில் மதிப்பிடப்படுகின்ற இந்த பாடல் திறன் போட்டியின் முதல் சுற்றில் சிறுமி கனிஷா தமிழக இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் வைக்கம் விஜயலட்சுமி குரலில் வெளியாகிய ‘சொப்பன சுந்தரி’ பாடலைப் பாடி அரங்கை அசத்தியுள்ளார்.

பெரும்பாலும் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியிலான பாடல்களை மட்டுமே கேட்க முடிகின்ற இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்க் குரல் ஒலிப்பது இதுவே முதல் முறையாகும்.

முதல் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்பாக நடத்தப்பட்ட முதல் இரண்டு உள் சுற்றுப்போட்டிகளில் இச் சிறுமி தமிழீழ எழுச்சிப் பாடல்களைப்பாடி
நடுவர்களை உணர்ச்சிவசப்படுத்தி இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸில் வலே (Valais) என்ற மாநிலத்தில் வசிக்கும் சிறுமி கனிஷா மூன்று வயதில் இருந்து பாடி வருகிறார். சுவிஸ் தமிழர்களால் நடத்தப்படும் ‘எழுச்சிக்குயில்’ விருதுப் போட்டியிலும் தெரிவாகி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

05-09-2020
சனிக்கிழமை

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here