தமிழ் மக்களின் கலை கலாச்சாரத்தை சிங்கள அரசால் ஒருபோதும் அழிக்கமுடியாது – அந்தோனி ரூ செல்!

0
552


இன்று உலகெங்கும் இடம்பெறுகின்ற இன அழிப்பில் இளம் சமூகத்தினரே முதலில் அழிக்கப்படுகின்றனர். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள அரசினால் அவர்களின் கலை கலாச்சாரத்தை ஒருபோதும் அழித்துவிடமுடியாது என்று லாக்கூர்னோவ் மாநகர சபையின் முன்னாள் ஆலோசகரும் தமிழின உணர்வாளருமான அந்தோனி ரூசெல் அவர்கள் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.


பிரான்சில் நேற்று 15.08.2020 சனிக்கிழமை இடம்பெற்ற வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 14 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 9 வது ஆண்டு நினைவேந்தலில் நினைவுரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் கலை கலாச்சாரத்தை சிங்கள அரசு என்ன எவர் வந்தாலும் அழிக்கமுடியாது. அதேவேளை இந்த இளம் சமுதாயத்தினருக்கு ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். நீங்கள் இங்கு மட்டுமல்லாமல் இதேபோன்ற போராட்டங்களை வேறு இடங்களிற்கும் கொண்டுசெல்லவேண்டும். அதாவது அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். இந்த நாட்டவர்களையும் உங்கள் நிகழ்வுகளில் அதிகளவில் கலந்துகொள்ளவைக்கவேண்டும். நான் என்னைச் சார்ந்தவர்களை முடிந்தளவிற்கு இவ்வாறான நிகழ்வில் கலந்து கொள்ள வைக்கின்றேன் என்று தெரிவித்த அவர், அவ்வாறு செய்தால் இந்தப் போராட்டம் சர்வதேச மட்டத்திற்குச் செல்லும் என்பதே எனது எதிர்பார்ப்பு. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதை பிரெஞ்சு மொழியில் தெரிவித்து விடைபெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here